வேலையிலிருந்து நீக்கியதற்காக காரை கொளுத்திய ஆடவர்

மலேசியாவின் சிபுவில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இந்தோனீசிய ஆடவரை அவரது முதலாளி வேலையிலிருந்து நீக்கியதையடுத்து, அவர் சென்றுகொண்டிருந்த பலபயன் காரி ஒன்றிற்கு தீ வைத்த சம்பவம் நேற்று (பிப்ரவரி 20) நிகழ்ந்தது.

மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இந்தோனீசிய ஆடவரை வீட்டில் கொண்டுபோய் விடுவதற்காக அவரை ஏற்றிக்கொண்டு, இந்தோனீசியாவில் பதிவுசெய்யப்பட்டிருந்த அந்த கார் சென்றது. காரை ஓட்டிச் சென்றவரும் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.

அவரது மனநலப் பிரச்சினையைக் காரணம் காட்டி முதலாளி அவரை வேலையிலிருந்து நீக்கினார். இதனால் வெகுண்ட அந்த ஆடவர், தீக்குச்சியை உரசி காரில் போட்டதில் தீப்பற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்காக அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.

சிபுவின் சரிக்கெய் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக் அந்த நிலையத்தின் தலைவர் மஹ்முதின் நருதீன் கூறினார். 

தீயை அணைக்க சுமார் 25 நிமிடங்கள் பிடித்ததாகக் கூறிய அவர், வாகனம் முற்றிலும் தீக்கிரையாகிவிட்டது என்றார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

#மலேசியா #இந்தோனீசியர் #காருக்கு தீ #தமிழ்முரசு