‘தேர்தலுக்கு அம்னோ தயார்’

பெட்டாலிங்ஜெயா: பொதுத் தேர் தலை எதிர்கொள்ள அம்னோ தயாராக உள்ளது. அதே சமயத்தில் தற்போதைய பிரதமர் முகைதீன் யாசினின் ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணமில்லை என்று ஃபேஸ்புக் பதிவில் அம்னோ கட்சியின் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

செவ்வாய் இரவு அகமட் ஸாஹிட்டின் வீட்டுக்கு முன்னாள் பிரதமரும் முன்னாள் அம்னோ தலைவருமான நஜிப் ரசாக் வருகை யளித்தார். பின்னர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசித்தோம் என்றார் அவர்.

“எனக்கு உடன்பிறந்த சகோ தரர்கள் மாதிரியுள்ள நிசாம், நஸிம் ஆகிய இரு சகோதரர்களுடன் திரு நஜிப் என்னுடைய வீட்டுக்கு வந்திருந்தார். வேறு பெரிய நிகழ்வு எதுவும் இல்லை,” என்றும் திரு அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.

“அம்னோ தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளது. பிரதமர் முகைதீனை அகற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் முகைதீன் பிரதமர் அதிகாரத்தில் நீடிக்க பொதுத் தேர்தலைச் சந்தித்தாக வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.

இந்த நிலையில் அம்னோவும் தேசிய முன்னணியும் பிரதமர் முகைதீன் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் எனும் தேசிய கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுமா என்று அப்துல் காதிர் என்பவர் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போதைய ஆளும் தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அம்னோவும் தேசிய முன்னணியும் அங்கம் வகிக்கின்றன. பாஸ் கட்சி, சரவாக்கின் கபுங்கான் கட்சி, மலேசிய பிரிபூமி பெர்சத்துக் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், கெஅடிலான் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.