சுடச் சுடச் செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பேராக் முதல்வர் தோல்வி

மலேசியாவின் பேராக் மாநில முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுவிட்டார். இதன் மூலம் சுமார் இரண்டரை ஆண்டு காலம் முதல்வராக நீடித்து வந்த அகமது ஃபைசால் அசுமு அந்தப் பதவியில் இருந்து இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. 

பிரதமர் முகைதீன் யாசினின் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரான அகமது ஃபைசாலுக்கு ஆதரவாக பத்து வாக்குகளும் எதிராக 48 வாக்குகளும் பதிவாயின. 59 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் இன்று காலை ரகசியமாக நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது ஓர் உறுப்பினரின் வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது.

எதிர்த்தரப்பு பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்த 24 உறுப்பினர்களும் பேராக்கை ஆண்டு வந்த பெர்சத்து கட்சியோடு கூட்டணி வைத்திருந்த கட்சிகளைச் சேர்ந்த 24 உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். 

கூட்டணிக் கட்சிகளோடு பெர்சத்து கட்சியினரும் முதல்வர் அகமது ஃபைசாலும் இணக்கமாகச் செயல்படவில்லை என்று இதற்கு முன்பு கூறப்பட்டது. 

எனவே கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான அம்னோவைச் சேர்ந்த மன்ற உறுப்பினர் அப்துல் மனாப் ஹாசிம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

பெர்சத்து நட்பு கட்சிகள் மீது அம்னோ தலைவர்கள் அதிருப்தியில் இருந்ததால் மாநில அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் கவிழக்கூடும் என்று அக்டோபர் மாதமே கூறப்பட்டது. இன்னும் இரண்டொரு நாளில் அம்னோவைச் சேர்ந்தவர் முதல்வர் பதவியை ஏற்கக்கூடும்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு மத்திய அரசாங்கத்திற்கு சோதனையாக அமையக்கூடும் என கூறப்படுகிறது. 

ஒன்பது மாதங்களாக பதவியில் இருந்து வரும் பிரதமர் முகைதீனின் பெரிக்காத்தான் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் மிக சொற்பமான பெரும்பான்மையே உள்ளதாகக் கூறப்படுகிறது. 

அவரது அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க பல்வேறு நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அத்தீர்மானங்களில் ஒன்றுகூட மன்றத்தில் வாசிக்கப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை என மலேசியாவிலுள்ள ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon