பாரிஸ்: ஸ்பெயின், ஸ்காட்லாந்து, துருக்கி ஆகிய காற்பந்து அணிகள் யூரோ 2024 போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நார்வேக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த அந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஸ்பெயினுக்காக ஒரே கோலைப் போட்டு வெற்றியை உறுதிசெய்தார் பார்சிலோனா வீரர் காவி.
கோல் வித்தியாசத்தில் ‘ஏ’ பிரிவில் ஸ்பெயின் முதலிடம் வகித்தது. அதே பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து அணியும் யூரோ கிண்ணப் போட்டியில் தன் இடத்தை உறுதிசெய்துள்ளது.
‘டி’ பிரிவில் நடந்த மற்றோர் ஆட்டத்தில் லாட்வியாவை 4-0 எனும் கோல் கணக்கில் துருக்கி வெற்றி கண்டது. அப்பிரிவில் நடந்த மற்றோர் ஆட்டத்தில் குரோவேஷியா அணியை 2-1 எனும் கோல் கணக்கில் வேல்ஸ் வீழ்த்தியது.
கடந்த ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அரையிறுதிச் சுற்று வரை சென்ற குரோவேஷியாவால் வேல்சின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 2010 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு பிரதான போட்டி ஒன்றில் பங்கெடுக்க முடியாத சூழலை குரோவேஷியா எதிர்நோக்குகிறது.
‘ஐ’ பிரிவில் பெலருஸ் அணியுடன் பொருதிய சுவிட்சர்லாந்து, 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.
‘இ’ பிரிவில் ஃபரோ தீவுகளை 1-0 எனும் கோல் கணக்கில் செக் குடியரசு வென்றது. அப்பிரிவில் முதலிடம் வந்த அல்பேனியாவுக்கு அடுத்த நிலையில் செக் குடியரசு உள்ளது.
நட்சத்திர ஆட்டக்காரர் ராபர்ட்ஸ் லெவண்டோவ்ஸ்கி இடம்பெறாத ஆட்டத்தில் போலந்து தடுமாறியது. தலைநகர் வார்சாவில் நடந்த ஆட்டத்தில் மொல்டோவா குழுவுடன் 1-1 எனும் கோல் கணக்கில் அந்த அணி சமநிலை கண்டது.
‘இ’ பிரிவில் மூன்றாம் இடத்தில் உள்ள போலந்து, நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் செக் குடியரசை வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.