டொயோட்டா, மெர்செடிஸ் பென்சை மிஞ்சி 2023ஆம் ஆண்டுக்குப் பதிவுசெய்யப்பட்ட புதிய கார்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
டொயோட்டாவின் அதிகாரபூர்வ முகவையான போர்னியோ மோட்டோர்ஸ் சென்ற ஆண்டு இறுதி நிலவரப்படி 3,857 கார்களைப் பதிவுசெய்தது. அவற்றில் லெக்சஸ் கார்களும் அடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் காட்டின.
மெர்செடிஸின் அதிகாரபூர்வ முகவையான ‘சைக்கிள் அண்ட் கேரேஜ்’ 3,850 கார்களையும் பிஎம்டபிள்யூ 3,372 கார்களையும் பதிவுசெய்தன.
வெளிநாட்டு விற்பனையாளர்களிடமிருந்து வாகனங்களைப் பெறும் இறக்குமதியாளர்களின் விற்பனை அவற்றில் அடங்காது.
2022ல் மெர்செடிஸ் பென்ஸ், சிங்கப்பூரின் ஆகச் சிறந்த கார் விற்பனை நிறுவனமாகத் திகழ்ந்தது.
இதற்கிடையே சென்ற ஆண்டு 5,467 மின்சாரக் கார்கள் பதிவு செய்யப்பட்டன. 2023ல் விற்பனையான 30,225 புதிய கார்களில் 18.1 விழுக்காடு மின்சாரக் கார்களாகும். 2022ஆம் ஆண்டில் அது 11.7 விழுக்காடாக இருந்தது.
மின்சார கார்களைப் பொறுத்தவரை, பிஒய்டி முன்னிலையில் இருந்தது. 1,461 பிஒய்டி கார்கள் விற்பனையாயின. அதற்கு அடுத்தபடியாக, டெஸ்லாவும், (941), அதற்கு அடுத்த நிலையில் பிஎம்டபிள்யூவும் (789) வந்தன.