ஆசிய பசிபிக் வட்டாரத்திலேயே முதன்முறையாக ‘ஹலால்’ வழிமுறையைப் பின்பற்றுபவர்களுக்கென சிறப்பு வசதிகளுடனான சொகுசுக் கப்பல் நேற்று முன்தினம் அறிமுகம் கண்டது.
டிரீம் குரூசஸ் நிறுவனம் இயக்கும் ‘வோர்ல்ட் டிரீம்’ எனும் சொகுசுக் கப்பல் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளது.
ஐக்கிய உலக ஹலால் மேம்பாட்டு நிறுவனத்தின் ‘ஹலால்’ சான்றிதழையும் உலகளாவிய சைவ அங்கீகார சேவைகளின் சைவ சான்றிதழையும் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் பெற்றுள்ள முதல் சொகுசுக் கப்பலாக ‘வோர்ல்ட் டிரீம்’ விளங்கியுள்ளது.
சிங்கப்பூரில் முதன்முறையாக கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி முதல் இந்தச் சொகுசுக் கப்பல் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இரண்டு அல்லது மூன்று இரவு மகிழ் உலா பயணங்களை மேற்கொண்டு வருகிறது.
“ஆசியாவில் பெயர்பெற்ற நிறுவனமான டிரீம் குரூசஸ், முழுமையாக ‘ஹலால்’ முறைக்கு ஏதுவான சொகுசுக் கப்பல் அனுபவத்தை வருகையாளர்களுக்கு வழங்குவதில் மிகுந்த பெருமைக்கொள்கிறோம். இந்த அங்கீகாரம் உணவுக்கு மட்டுமில்லாமல் கப்பலில் ஒட்டுமொத்தமாக மேம்படுத்தப்பட்டுள்ள ‘ஹலால்’ வாழ்க்கைமுறையைப் பிரதிபலிக்கிறது,” என்று கூறினார் டிரீம் குரூசஸ் நிறுவனத்தின் தலைவர் திரு மைக்கல் கோ.
தனிப்பட்ட ஹலால் மைய சமயலறை, சிறப்பாக ஒதுக்கப்பட்ட ஹலால் உணவகம், புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க சிறப்பான ‘சஹர்’ சாப்பாடு, நோன்பு துறக்க உணவு ஏற்பாடு, புனித குர்ஆன், ‘முசல்லாஹ்’ எனும் விரிப்பு, திசைகாட்டி போன்ற அம்சங்களுடனான தொழுகை அறை, பெண்களுக்கென தனியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ சேவைகள், ஸ்பா உடல் சேவைகள், நீச்சல் குளம் என ‘ஹலால்’ முறையில் விடுமுறையைக் கழிக்கவேண்டியதற்கான ஏற்பாடுகள் கப்பலில் உண்டு.
“இந்த ஏற்பாடுகளால் மக்கள் நம்பிக்கையுடன் இந்தக் கப்பலில் பயணம் செய்யலாம். சைவ உணவும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்குக் கப்பல் நிர்வாகம் பல அம்சங்களில் கவனம் செலுத்தி முறையாக மாற்றங்களை மேற்கொண்டது. உணவு வாங்குமிடம் முதற்கொண்டு அனைத்து பிரிவுகள், முறைகள், செயல்முறைகளும் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,” என்று கூறினார் ஐக்கிய உலக ஹலால் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் திரு முஹம்மது ஜின்னா.
“ஹலால் முறையைப் பின்பற்றுபவர்களுக்குத் தகுந்த சொகுசுக் கப்பல் ஆசிய கடற்பகுதியில் செயல்படவேண்டும் என்பது ஐக்கிய உலக ஹலால் மேம்பாட்டு நிறுவனத்தின் நீண்ட கால நோக்கம். டிரீம் குரூசஸ் கப்பல் படையின் வோர்ல்ட் டிரீம் சொகுசுக் கப்பலை அங்கீகரிக்க ஜென்டிங் குரூஸ் லைன்ஸ் நிறுவனத்துடன் புதிய பங்காளித்துவத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம்,” என்றார் திரு ஜின்னா.
சுகாதாரமான, சுத்தமான சைவ உணவை விரும்புபவர்களுக்கு தாவரங்கள் அடிப்படையிலான உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.
கொவிட்-19 கிருமித்தொற்று சூழலில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையால் சொகுசுக் கப்பல்கள் மகிழ் உலா பயணங்களை ஏற்படுத்தியுள்ளன. அதனால் சிங்கப்பூரர்கள் தங்கள் விடுமுறையை இதுபோன்ற பயணங்களில் கழிக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பயணிகளுக்கும் ‘மைஸ்பாட்’ எனும் கருவி வழங்கப்படுகிறது. அதனுடன் பல பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகள் செயல்பாட்டில் உள்ளன. பாதுகாப்பாக மக்கள் நம்பிக்கையுடன் பயணங்களை மேற்கொள்ள இந்த ஏற்பாடுகள் வழிசெய்கின்றன.