‘சிகிச்சை’ எடுத்துக்கொள்ளும் பொது மருத்துவமனை

சிங்கப்பூர் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தயாராகிறது. அதன் ஒரு பகுதியாக தனது ஒரே சொத்தான தன் மக்களின் உடல்நலனைப் பாதுகாத்து, அவர்கள் முதுமை யிலும் இளமையுடன் திகழவேண்டும் என்று அது தொலை நோக்குத் திட்டங்களை வகுக்கிறது. 'சிங்கப்பூரில் எதிர்கால சுகாதாரப் பராமரிப்பு என்பது தலைசிறந்த வசதிகளைக் கொண்டு இருக்கவேண்டும். தலை சிறந்த தொழில்நுட்பங்களை அரவணைக்கவேண்டும். அதேவேளையில் நோயாளிகளை நடுநாயகமாக மனதில் கொள்ளவேண்டும்' என்ற சித்தாந்தத்துடன் அந்தத் திட்டங்களை அமலாக்க சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது.

இதற்கு உதவியாக, முதலில் அது தன்னுடைய மிகப் பெரிய அரசு மருத்துவமனையாகவும் ஆகப் பழமையான மருத்துவமனையாகவும் இருக்கின்ற சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குப் புத்துணர்ச்சி அளித்து அதை வருங் காலத் தேவைக்கு ஏற்ப தலைகீழாக மாற்றி உருவாக்கி 'குணப்படுத்த' இருக்கிறது.

அடுத்த 20 ஆண்டுகளில் அந்த மருத்துவமனை ஏராளமான வசதிகளுடன் ஊட்ரம் பார்க் எம்ஆர்டி அருகே இடம் மாற்றி அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு நாலும் உள்ளடங்கிய சுகாதாரச் சேவைகளை மிக ஆற்றலுடன், நடமாட்ட வசதிகளுடன் கட்டுப்படியாகக்கூடிய வகையில் வழங்க இருக்கிறது. பிரதமர் லீ சியன் லூங் இதற்கான அடிப்படை பெருந்திட்டத்தை அண்மையில் அறிவித்தார். 200 ஆண்டுகளுக்கு முன் கடந்த 19ஆம் நூற்றாண் டில்- சிறுசிறு கட்டடங்களுடன் பிறந்த சிங்கப்பூர் பொது மருத்துவமனை, ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பிறகு- 20ஆம் நூற்றாண்டில்,- அதாவது 1981ல், பெரிய அளவில் மேம்பட்டு அப்போது ஆண்டுக்கு சுமார் 64,000 நோயளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தது. சென்ற ஆண்டில் அங்கு 135,000 பேர் சிகிச்சை பெற்றனர். இந்த எண்ணிக்கை சிங்கப்பூரின் மொத்த நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இப்போதைய அந்த மருத்துவமனை இப்படியே இருந்தால் வருங்கால சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதால் அதை அடியோடு உருமாற்றத் திட்டம் போடப்பட்டுள்ளது. அங்கு புதிய தேசிய புற்றுநோய் மையம் உருவாகும். விபத்து அவசரநிலைப் பிரிவு விரிவடைந்து இருக்கும்.

சிங்கப்பூர் தேசிய பல் சிகிச்சை மையத்துடன் கூடிய மையம் ஒன்று அமைந்து, அது இந்த மருத்துவமனையின் இதயமாகத் திகழும். அறுவை சிகிச்சை அரங்குகள் அங்கு இருக்கும். சிறப்பு வல்லுநர்கள் சிகிச்சை அளிக்கும் வெளிநோயாளி மருந்தகங்கள், வார்டுகள் எல்லாம் இருக்கும். 550 படுக்கைகளைக் கொண்ட ஊட்ரம் சமூக மருத்துவ மனை இருக்கும். மொத்தத்தில் நான்கு புதிய கட்டடங்கள் அமையும். அந்த மருத்துவமனை அப்படியே ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே இடம் மாறும். பொது மருத்துவமனை சிங்கப்பூரின் 40% சுகாதாரப் பராமரிப்புக் கல்வி, பயிற்சிப் போதனை தேவையை நிறைவேற்றும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களின் போது மருத்துவமனையின் சேவைகள் தடைபடாது என்றாலும் ஏற்படக்கூடிய வசதிக்குறைவுகளை மக்கள் பொறுத்துக்கொள்ளவே வேண்டும்.

சிங்கப்பூர் தன் மக்களின் உடல்நலனைப் பேணிக் காக்க ஏராளமான திட்டங்களை அமலாக்கி வருகிறது. கட்டாய ஆயுள் மருத்துவக் காப்புறுதித் திட்டம், முன் னோடித் தலைமுறை தொகுப்புத் திட்டம் போன்றவை இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை. எல்லாருக்கும் கட்டுப்படியாகக்கூடிய சுகாதாரப் பராமரிப்பை உறுதிப்படுத் துவது இவற்றின் நோக்கம். இந்தத் திட்டங்கள், குறிப்பாக முதியோருக்கு மிகவும் பலனளித்து வருகின்றன. உலக அளவில் பார்க்கையில் முதியோர் எண்ணிக்கை சென்ற ஆண்டில் 1.5 பில்லியன் அளவுக்குக் கூடிவிட்டதாகத் தெரிகிறது.

சிங்கப்பூரில் 2014ல் மக்கள்தொகையில் 65க்கும் அதிக வயதுள்ள முதியவர்களின் விகிதம் 12.4%. இந்த விகிதம் 2030ஆம் ஆண்டுவாக்கில் 19% ஆக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்களை முதுமையிலும் இளமையுடன் வைத்திருக்க அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்களுக்கு இந்த பொது மருத்துவமனை பெருந்திட்டம் உறுதுணையாகத் திகழும் என்பதால் வருங்காலம் முதி யோருக்கும் நலமிக்கதாக, நம்பிக்கைமிக்கதாக இருக்கும் என்ற நம்பிக்கை வலுவடைகிறது.

அதோடு அல்லாமல் உலகில் திடீர்திடீர் என்று தலை யெடுத்து மிரட்டும் சார்ஸ், ஸிக்கா, இபோலா போன்ற அதிபயங்கர, அதிசய நோய்களுக்கு இந்த மருத்துவத்துறை மேம்பாடுகளின் உதவியுடன் சிங்கப்பூர் தன் கதவை அடைக்கும் என்று தாராளமாக நம்பலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!