அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திங்கட்கிழமை (ஜூலை 4) அன்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“எனக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான சளி அறிகுறிகள் தென்படுகின்றன. நல்ல வேளையாக, நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டேன். விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன்,” என்று அதிபர் ஹலிமா கூறினார்.
நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னுக்கும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
“நல்ல விஷயங்கள் அனைத்தும் முடிவுக்கு வர வேண்டும். என் கொவிட்-19 இல்லாத நாள்கள் முடிவுக்கு வந்துவிட்டன,” என்று தம் ஃபேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்தார்.
திங்கட்கிழமை நாடாளுமன்ற அமர்வுக்கு முன்பு திரு டான் செய்துகொண்ட ஆண்டிஜன் விரைவு பரிசோதனையில் தொற்று உறுதியானது.
“அறிகுறிகள் லேசானதாக இருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து விழிப்புடன் இருங்கள். உங்களுக்கான நேரம் வரும்போது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள்,” என்று திரு டான், 53, கூறினார்.