100க்கு மேற்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் விமானச் சேவைகள் ரத்து

சிங்கப்பூருக்கும் இந்தோனீசியா, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் இடையிலான, மார்ச் முதல் மே மாதம் வரையிலான 100க்கு மேற்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

‘கொவிட்-19’ எனப்படும் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக அந்தக் காலகட்டத்தில் விமானச் சேவைகளுக்கான தேவை குறைந்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதுடன், அவர்கள் வேறு விமானச் சேவைகளைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அது தெரிவித்தது.

இவ்வாறு பாதிக்கப்படும் முதல் சேவை சிங்கப்பூரிலிருந்து ஜகார்த்தாவுக்கு மார்ச் மாதம் 3ஆம் தேதி செல்லும் விமானச் சேவையாகும்.

இந்தத் தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது இணையப்பக்கம், ஃபேஸ்புக் பக்கம் ஆகியவற்றின் வழியாக அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் அங்கு அளிக்கப்பட்டுள்ளன.

நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து சூழ்நிலைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

#SIA #SilkAir #Corona #Flights cancel #தமிழ்முரசு