'சிங்கப்பூரிலேயே முகக்கவசங்களைத் தயாரிப்பது குறித்து அரசாங்கம் ஆய்வு'

முகக்கவச ஏற்றுமதிக்கு ஆசிய நாடுகள் கட்டுப்பாடு விதித்து வரும் நிலையில், வேறு எங்கிருந்து அவற்றைப் பெறலாம் என்பது குறித்தும் உள்ளூரிலேயே முகக்கவசங்களைத் தயாரிப்பதற்கான செயல்திறன்கள் குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்திருக்கிறார்.

“அண்மைய வாரங்களாக, தைவான், இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் முகக்கவசங்களை ஏற்றுமதி செய்யத் தடை விதித்துள்ளன அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன,” என்று நாடாளுமன்றத்திற்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் திரு வோங் குறிப்பிட்டுள்ளார்.

முகக்கவசங்கள் போன்ற இன்றியமையாத பொருட்களின் விநியோகம் தடைபடாமல் இருக்க முன்யோசனையுடன் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் வோங் கூறினார்.

“அறுவை சிகிச்சை, என்95 முகக்கவசங்களை வாங்கி கையிருப்பு வைத்துள்ளோம். இப்போது அந்தக் கையிருப்பை எடுத்து பயன்படுத்தி வருகிறோம். அதே வேளையில், புதிதாகவும் அவற்றை வாங்கி கையிருப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்,” என்றார் அவர்.

அண்மைய கொரோனா கிருமித்தொற்றால் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் இத்தகைய ஒரு தொற்றுச் சூழலை எதிர்கொள்வதில் சிங்கப்பூரர்களைச் சிறந்த முறையில் ஆயத்தப்படுத்த வேறு எதில் முன்னேற்றம் காணலாம் என்றும் அங் மோ கியோ குழுத் தொகுதி உறுப்பினர் திரு கான் தியாம் போ, பிரதமர் லீ சியன் லூங்கிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பிரதமரின் சார்பில் பதிலளித்துள்ள அமைச்சர் வோங், சார்ஸ், எச்1என்1, ஸிக்கா, குரங்கம்மை என நாடு எதிர்கொண்ட பல்வேறு நோய்த்தொற்றுகள், அடுத்த கிருமித்தொற்றை எதிர்கொள்வதற்கான நமது ஆயத்தநிலையை மேம்படுத்தி இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.

#Corona #facemask #தமிழ்முரசு