சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் ஒவ்வோர் இல்லத்துக்கும் 4 முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்

சிங்கப்பூரில் மேலும் மூவருக்கு வூஹான் கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதை சுகாதார அமைச்சின் அறிக்கை இன்று (ஜனவரி 30) தெரிவித்தது. அதனையடுத்து, இங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆகியுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட மூவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு இல்லத்துக்கும் நான்கு இலவச முகக்கவசங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 1) முதல் சுமார் 5.2 மில்லியன் முகக்கவசங்கள் தீவு முழுவதும் உள்ள 89 சமூக நிலையங்களிலும் 654 வசிப்போர் குழுக்களிலும் கட்டங்கட்டமாக வழங்கப்படும்.

சிங்கப்பூரில் உள்ள 1.37 மில்லியன் இல்லங்களுக்கு அவை பிப்ரவரி 9ஆம் தேதி வரை வழங்கப்படும். முகக்கவசங்களைப் பெறுபவர்கள் அவர்களது அடையாள அட்டையைக் கொண்டுசெல்ல வேண்டும். ஒவ்வொரு இல்லத்துக்கும் முகக்கவசங்களை ஒருமுறை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

கிருமித்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்படும் இடங்களில் அவற்றைப் பெற்றக்கொள்ள முடியாதவர்களுக்கும் அவை நேரடியாக அவர்களிடம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளிலும் தனியார் பேட்டைகளிலும் குடியிருப்போர்,   நாளை மறுநாள் பிற்பகல் 2 மணியிலிருந்து வசிப்போர் குழுக்களிலும் சமூக நிலையங்களிலும் முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பிப்ரவரி 2 முதல் 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

வசிப்போர் குழு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில் இது குறித்த மேல் விவரங்களைப் பொதுமக்கள் பெறலாம்.

தீவெங்கும் உள்ள கடைகளில் முகக்கவசங்கள் விற்றுத்தீர்ந்து வருவதாக கடைக்காரர்கள் கூறியதைத் தொடர்ந்து, அரசாங்கம் அவற்றை இலவசமாக வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த ஒன்பது நாட்களில் கடைகளில் ஐந்து மில்லியன் முகக்கவசங்களை அரசாங்கம் விநியோகித்துள்ளதாக அது தெரிவித்தது.

தேவைப்படுவோருக்கு போதுமான எண்ணிக்கையில் முகக்கவசங்கள் இருப்பதை வலியுறுத்திய அரசாங்கம்,  புதிய முகக்கவச விநியோகிப்பாளர்களைத் தேடிவருவதாகவும் ஏற்கெனவே உள்ள விநியோகிப்பாளர்கள் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டது.

முகக்கவசங்களை வழங்குவதில் சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி வூஹான் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக இருந்தது. அவர்கள் அனைவரும் சீனாவின் ஹுபெய் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

முகக்கவசங்கள் அழுக்காகாமல் அல்லது கறைப்படாமல் இருக்கும்வரை அவற்றைப் பயன்படுத்தலாம். அவற்றை 24 மணி நேரத்திற்கு மேல் அணிய வேண்டாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

#வூஹான் #தமிழ்முரசு #இலவசமுகக்கவசம் 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon