மாணவர்களின் வாழ்க்கைத்தொழில் குழப்பங்களுக்குத் தீர்வு ‘ஆன் மை வே’

வாழ்க்கைத்தொழிலுக்கு உளவியலா உளநோயியலா என்ற கேள்வி மாணவி அனன்யாவுக்கு நீண்டநாளாய் இருந்து வந்தது.

சுகாதாரத்துறையில் கால்பதிக்க சிறுவயதிலிருந்தே எண்ணம் கொண்டிருந்த அவரை, இத்துறை கொண்டிருக்கும் ஏராளமான வாழ்க்கைத்தொழில் தெரிவுகள் திணறடித்தன. தேசிய பல்கலைக்கழக மேல்நிலைப் பள்ளியில் கடைசியாண்டு பயிலும் அவருக்கு சரியான நேரத்தில் கைகொடுத்தது, தேசிய இளையர் மன்றத்தின் ‘ஆன் மை வே’. 

மாணவர்களிடத்தில் வாழ்க்கைத்தொழில் குறித்த புரிதலை மேம்படுத்த தேவையான பல்வேறு வளங்களை ஒருங்கிணைத்துள்ளது, 2020 நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட ஆன் மை வே எனும் குறுந்தளம். தங்களது ஆர்வங்களைக் கண்டறியவும், விருப்பங்களைப் பற்றி ஆழமாக சிந்தித்து உகந்த முடிவுகளை அனுபவங்களின் துணைகொண்டு தீர்மானிக்கவும் பக்கபலமாய் விளங்குவதே இக்குறுந்தளத்தின் நோக்கம். 

மாணவர்கள் துறை வல்லுநர்களுடன் உரையாடலாம், ‘டே இன் தி லைஃப்’ அங்கத்தின்கீழ் தொடர்புடைய காணொளிகளை நோக்கலாம், ஒத்த விருப்பமுடைய பிற இளையர்களுடன் ‘நெட்வர்க் கனெக்ட்ஸ்’ வாயிலாக இணையலாம். இவற்றுக்கு ஏற்ற வாய்ப்புகளை பலதரப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து இக்குறுந்தளம் அளித்து வருகின்றது. 

‘டேஸ்டர்’ திட்டங்கள் இதில் ஓர் அங்கமாகும். துறை வல்லுநர்களுடன் சந்தித்து அவர்களின் வேலை பொறுப்புகளைக் குறித்து மாணவர்கள் தெளிவதற்கு இத்திட்டங்கள் உதவுகின்றன. நேரடி திட்டங்கள் ‘போல்ட் எட் வர்க்’ கல்வி நிறுவனத்தோடும், மின்னிலக்க திட்டங்கள் ‘தி ஆஸ்ட்ரோனாட்ஸ் கலெக்டிவ் எனும் லாபநோக்கமற்ற அமைப்போடும் இணைந்து வழங்கப்படுகின்றன.  

இவற்றில் கலந்துகொண்ட 2,000க்கும் மேற்பட்ட இளையர்களில் ஒருவர்தான் அனன்யா. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்தேறிய என்.டி.யூ.சி ஹெல்த் நிறுவனத்தின் சுகாதாரத் துறை ‘டேஸ்டர்’ திட்டத்தில் பங்குகொண்டு பயனடைந்தார் அனன்யா. இதன்மூலம், ஓர் உடற்பயிற்சி மருத்துவருடனும் உடலியக்க மருத்துவருடனும் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. பிறருக்கு உதவும் மனப்பான்மை தனக்கு இயல்பாகவே இருப்பதால் சுகாதார துறையில் தான் ஈடுபாடு கொண்டிருப்பது அவருக்கு புலப்பட்டாலும், வாழ்க்கைத்தொழிலாக அதை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பதில் அவருக்கு சந்தேகங்கள் இருந்தன. 

ஒரு மருத்துவர் தினமும் சந்திக்கும் சவால்கள் என்னென்ன? அவர்களின் நாட்கள் எவ்வாறு தொடங்கி முடிகின்றன? சுகாதார துறையில் இயங்குவோர் எவ்வழிகளில் இணைகின்றனர்? என பல கேள்விகளுக்கு விடை கண்டுகொண்டார் அனன்யா. 

உளவியலோ ஒரு கலைப்பாடம். அது மனிதர்களின் உணர்வுகளையும் செயல்பாடுகளையும் முன்னிலைப்படுத்துகிறது. உளநோயியலோ ஓர் அறிவியல் பாடம். உளவியல் துறையாளர்களின் சிகிச்சை முறையைக் காட்டிலும் மனநோய் மருத்துவர்களின் சிகிச்சை முறை மிகவும் வேறுபட்டது. இரண்டிலுமே ஆர்வம் இருந்த அவருக்கு, முழுமையாக மருத்துவ அடிப்படை கொண்டிருக்கும் உளநோயியலைத் தேர்ந்தெடுக்க இத்திட்டம் கைகொடுத்தது. 

“நான் சந்தித்த இரு மருத்துவர்களும் மருத்துவ துறையாளர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு இலக்கை நோக்கி உழைக்கின்றனர் என்பதை உணர்த்தினர். உதாரணத்துக்கு, இருவருமே மூத்தோருடன் அதிகம் பணிபுரிவோர். தங்களின் வேறுபட்ட அணுகுமுறைகளையும் திறன்களையும் கொண்டு எவ்வாறு அவரது நடமாட்ட சிக்கலை தீர்க்கின்றனர் என்பதை அவர்கள் விளக்கினர். இது எனக்கு மாறுபட்ட ஒரு பார்வையை தந்தது,” என்று விவரித்தார் 17 வயது நல்லப்புரஜு அனன்யா. 

‘போல்ட் எட் வர்க்’ அமைப்புடன் இணைந்து பங்காளித்துவத்தில் ஈடுபட்டு சுகாதாரம் சார்ந்த துறையிலும் மூத்தோர் பராமரிப்புத் துறையிலுள்ள வெவ்வேறு வாழ்க்கைத் தொழில் வாய்ப்புகளையும் இளையர்களுக்கு நேரடி அனுபவம் மூலம் வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ளதாகப் பகிர்ந்தார் என்.டி.யூ.சி ஹெல்த் நிறுவன மனிதவள பிரிவின் உதவி மேலாளர் அன்பரசி சுப்ரமணியம். 
“சமூக பராமரிப்புத் துறை அதீத வளர்ச்சி அடைந்துவருகிறது. அதில் சுவாரசியமான பல வேலை வாய்ப்புகளும் நிரம்பியிருக்கின்றன,” என்று கூறினார் அன்பரசி. 

“சமூகத்திற்குச் சேவையாற்றும் விதத்தில் அர்த்தமுள்ள வாழ்க்கைத்தொழிலில் எதிர்காலத்தை அடுத்த தலைமுறையினர் அமைத்துக்கொள்வதற்கான ஊக்கத்தை வழங்குவதை இந்த பங்காளித்துவம் மூலம் அடைய நம்பிக்கை கொள்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

முதன்முறையாக வாழ்க்கைத்தொழில் வழிகாட்டுதலுக்காக துறை வல்லுநர்களுடன் இணைந்து பேசி அனுபவம் பெற்ற அனன்யா, கூடுதல் நம்பிக்கை பெற்றதாக தெரிவித்தார். அனன்யாவின் குடும்பத்தில் சுகாதார அனுபவத் துறை பெற்ற யாரும் இல்லை. மேலும், அதுவரை மூத்த மாணவர்களுடன் கலந்துரையாட அவருக்கு வாய்ப்பு இருந்ததில்லை. இந்த டேஸ்டர் திட்டத்தை ஒரு தொடக்கப்புள்ளியாக வைத்து மேலும் வாய்ப்புகளை நாடி செல்லவும் வழிகாட்டுதலைக் கோரவும் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது என அவர் கூறினார். 

நண்பர்களுடன் இந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அனன்யா, எதிர்வரும் காலத்தில் இத்தகைய டேஸ்டர் திட்டங்களில் நண்பர்களுடன் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். மருத்துவத்துறை, மருத்துவப்படிப்பு குறித்து இன்னும் கூடுதல் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் அவர் உத்வேகம் கொண்டுள்ளார். 

பதின்ம வயதிலேயே வாழ்க்கைத்தொழில் தெரிவுகளைத் தேர்ந்தெடுப்பது கடினமே என்பது அனன்யாவின் அனுபவமும்கூட. இச்சமயத்தில் எடுக்கும் முடிவுகள் அடுத்த பல ஆண்டுகளை நிர்ணயிப்பவை. கல்வியில் தாக்குப்பிடிக்கும் அதே நேரத்தில், துல்லியமாக ஆர்வங்களை அடையாளம் கண்டுகொள்வது முக்கியம் என்பதை அனன்யாவை சுற்றி இருந்த கல்வியாளர்களும் குடும்ப உறுப்பினர்களும் வலியுறுத்த தவறியதில்லை. 

இத்தகைய அனுபவம் சிங்கப்பூர் மாணவர்களுக்குப் பொதுவானது. பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் செல்வதும், அங்கிருந்து வேலையுலகில் காலடி எடுத்து வைப்பதும் இளையர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக்கூடும். தேசிய இளையர் மன்றத்தின் ஆய்வுபடி, ஐந்தில் கிட்டத்தட்ட இரண்டு இளையர்கள் திறந்த மனப்பான்மை கொண்டிருந்தும் வாழ்க்கைத்தொழில் வாய்ப்புகளை நாடிச்செல்வதற்கு வழி அறியாமல் இருக்கின்றனர். 

இதற்கு தீர்வாக, ‘தி ஆஸ்ட்ரோநோட்ஸ் கலெக்டிவ்’ எனும் நிறுவனத்துடன் இணைந்து ‘ஹெல்த்தி வர்ல்ட் கனெக்‌ஷன்ஸ்', ‘கெரியர் ஹ்யூமன் லைப்ரரி', ‘நோ கேப்! ரூம் சீரிஸ்' முதலிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது தேசிய இளையர் மன்றம். 

கல்வி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டுதலுக்கு கைகொடுக்க கடந்த பிப்ரவரி மாதம் தேசிய இளையர் மன்றம் சுகாதார அமைச்சுடன் இணைந்து ‘ஹெல்த்தி வர்ல்ட் கனெக்‌ஷன்ஸ்’ எனும் நிகழ்வை ஏற்பாடு செய்தது. 120க்கும் மேற்பட்ட இளையர்கள் 20க்கும் மேற்பட்ட சுகாதார துறை வல்லுநர்களுடன் சந்தித்து வேறுபட்ட அனுபவங்களைப் பெற்றனர். வேலை நேர்காணல்களுக்கான தேவையான திறன்களை பற்றியும் இந்நிகழ்வில் அவர்கள் அறிந்துகொண்டனர். 

தொடர்ச்சியாக, படைப்புத் துறையாளர்களுடன் இளையர்களை ‘கெரியர் ஹ்யூமன் லைப்ரரி’ நிகழ்வின்மூலம் இணைத்தது தேசிய இளையர் மன்றம். இந்நிகழ்ச்சிகள் குறிப்பாக 15இலிருந்து 25 வயது வரையிலான இளையர்களைச் சென்றடைய வேண்டி உழைத்து வருகின்றது. இவ்வாண்டுக்காக அது திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிகள் 7,000க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி, தொழில்நுட்பக் கல்விக்கழக, பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஒத்த விருப்பமுடைய மாணவர்களுடனும் இணையவிருக்கின்றனர் இளையர்கள். ‘நோ கேப்! ரூம் சீரிஸ்’ எனும் பயிலரங்கு தொடரில் வேறுபட்ட கல்விப் பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் இளையர்களின் கருத்துக்கள் இடம்பெறும். வழக்கநிலை மாணவர்கள், வெளியூரில் பயின்றோர், உள்ளூர்த் தனியார் பல்கலைக்கழக பட்டதாரிகள் ஆகியோர் இடம்பெற இருக்கின்றனர்.

கூடுதல் மாணவர்கள் பயனடையும் வண்ணம் தனது ‘மைக்ரோ ஜாப் டேஸ்டர்’ திட்டங்களை மேம்படுத்த முற்பட்டுள்ளது தேசிய இளையர் மன்றம். இனி இவை, தொழில்நுட்பக் கல்விக்கழகம், பலதுறை தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளை இன்னும் துல்லியமாக பூர்த்தி செய்யும். சில்லறை வர்த்தகம், மனிதவளம், தொழில்நுட்பத் துறைகளிலும் டேஸ்டர் திட்டங்களை மாணவர்கள் இவ்வாண்டு எதிர்நோக்கலாம். முறையே, ஏப்ரல், மே மாதத்தில் நிகழ்விருக்கும் வெளிப்புற நடவடிக்கை துறை, சமூக சேவை துறை டேஸ்டர் திட்டங்களில் மாணவர்கள் பதிந்துகொள்ளலாம். 

“பங்காளி அமைப்புகளுடன் இணைந்து, அவர்களின் திறன்களையும் வளங்களையும் பயன்படுத்தி புத்தாக்கமான வகையில் வாழ்க்கைத்தொழில் வழிகாட்டுதல் பயிலரங்குகளை வடிவமைக்க முற்பட்டுள்ளோம். ஒவ்வொரு கல்வி நிலையிலும் வாழ்க்கைத்தொழில் திட்டமிடலை ஊக்குவிப்பது இத்திட்டங்களின் நோக்கமாகும்,” என்றார் தேசிய இளையர் மன்றத்தின் தலைமை நிர்வாகி டேவிட் சுவா. 

 

வாழ்க்கைத்தொழிலைத் தேர்ந்தெடுப்பது குறித்து குழப்பமா? கவலையா?
https://www.nyc.gov.sg/omw/home எனும் ‘ஆன் மை வே’ இணையத்தளத்தை நாடி பலதரப்பட்ட வழிகளில் உங்களின் சந்தேகங்களைத் தீர்த்துகொள்ளுங்கள்.

15 வயதுக்கும் 25 வயதுக்கும் உட்பட்ட இளையர்கள் அல்லது அந்த வயதுக்குட்பட்ட இளையர்களின் பெற்றோர்கள் இந்த இணையத்தளம் வாயிலாக கல்வி, வாழ்க்கைத்தொழில் சார்ந்த கலந்துரையாடல்களைக் கண்டும் பங்கேற்றும் பலன்பெறலாம். 

‘நோ இட் ஆல்’ (அனைத்தையும் அறிந்துகொள்), ‘டே இன் தி லைஃப்’ (வாழ்வில் ஒரு நாள்) ஆகிய திட்டங்கள் வழி பல்வேறு வாழ்க்கைத்தொழில் அனுபவங்களைப் பற்றி உற்றுநோக்கக் கற்கலாம். அதோடு சேர்த்து ‘ஆன் மை வே’ தளத்தில் ‘நெட்வொர்க் கனக்ட்ஸ்’ எனும் இணையும் கட்டமைப்பு திட்டம் வழி சக வயதினர் அல்லது மூத்த அதிகாரிகளிடம் விருப்பப்பட்ட வாழ்க்கைத்தொழில் பற்றிl நேரடியாகக் கேட்டறியும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கிறது. 

விருப்பப்பட்ட துறையில் எந்தப் பணியைத் தேர்ந்தெடுப்பது என்ற ஐயமா?
இருக்கவே இருக்கு ‘டேஸ்டர்’ திட்டம். விரும்பிய துறையில் சில மணி நேரம் பணியாற்றி மேலும் தகவல் அறிந்து திறம்பட முடிவெடுக்கும் வாய்ப்பை அது வழங்குகிறது. 
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி வெளிப்புற சாகசக் கல்வித் துறை, மே மாதம் 26ஆம் தேதி சமுதாயத் தாக்கத் துறை ஆகியவற்றின் ‘டேஸ்டர்’ திட்டத்தில் இணைய இன்றே பதிவுசெய்துகொள்ளுங்கள். 
சில்லறை வர்த்தகம், மனிதவளம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் இந்த ‘டேஸ்டர்’ வாய்ப்பு இவ்வாண்டில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!