தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரும் சீனாவும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும்: துணைப் பிரதமர் வோங்

2 mins read
3c9678eb-73a4-4059-a67e-7cf469f855d4
சீனாவில் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற, இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுச் சங்கத்தின் 19வது சந்திப்பில், சீனாவும் சிங்கப்பூரும் இருநாட்டுப் பயணிகளுக்கு விசா இல்லாத 30 நாள் அனுமதி வழங்குவது தொடர்பில் இணக்கம் கண்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டியான்ஜின்: கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிந்திய காலகட்டத்தில், சிங்கப்பூரும் சீனாவும் அவற்றின் மக்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

இருநாட்டுப் பயணிகளுக்கு, விசா இல்லாத 30 நாள் அனுமதி வழங்குவது தொடர்பில் அவை இணக்கம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.

சீனாவின் டியான்ஜின் நகரில் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற, இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுச் சங்கத்தின் 19வது சந்திப்பில் திரு வோங் அவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஓர் அங்கமாக, ஆழமான கலாசார, கல்விப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. 30 நாள் விசா இல்லாத அனுமதி நடைமுறை அதற்குக் கைகொடுக்கும். அந்த நடைமுறையை 2024ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் நடப்புக்குக் கொண்டுவருவதன் தொடர்பில் இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, சீனக் கடப்பிதழ் வைத்திருப்போர் சிங்கப்பூருக்கு வர விசா தேவை. அண்மையில் சிங்கப்பூரர்கள் விசா இல்லாமல் 15 நாள்களுக்குச் சீனா செல்ல பெய்ஜிங் அனுமதி வழங்கியது.

புதிய திட்டத்தின்கீழ், இருதரப்பிலிருந்தும் கூடுதலானோர் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருதரப்பு உறவுகளின் அடித்தளத்தை வலுப்படுத்த இது உதவும் என்றார் திரு வோங்.

தற்போது சிங்கப்பூருக்கும் சீனாவிற்கும் இடையிலான விமானச் சேவைகளின் எண்ணிக்கை, கிருமிப் பரவலுக்கு முன்பிருந்ததில் 75 விழுக்காட்டை எட்டியுள்ளது.

“இருதரப்புப் பங்காளித்துவத்தின் முக்கிய அம்சங்களைப் பிரதிபலிக்கும் திட்டங்கள் உள்ளன. வருங்காலத்தில் கவனம் செலுத்தும் அத்திட்டங்கள், விரிவானதாகவும் உயர்தரமாகவும் அமைந்திருக்கும்,” என்றார் துணைப் பிரதமர்.

டியான்ஜின் பல்லுயிர்-நகரத் திட்டத்தின் 15ஆம் ஆண்டு நிறைவு வேளையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னர், தேசிய வளர்ச்சி அமைச்சராகத் தாம் பணியாற்றிய வேளையில் அத்திட்டத்தில் பல ஆண்டுகள் ஈடுபட்டதாக திரு வோங் கூறினார்.

கடந்த 15 ஆண்டுகளில் அங்கு காணப்படும் மேம்பாடு மனநிறைவு தருவதாக அவர் குறிப்பிட்டார்.

சந்திப்பில் தொடக்க உரையாற்றிய சீனத் துணைப் பிரதமர் டிங் ஷுவேஷியாங், மூன்று முக்கிய அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்று குறிப்பிட்டார்.

அனைத்து அம்சங்களையும் உள்ளடக்குதல், உயர் தரம், வருங்காலத்தில் கவனம் செலுத்துதல் ஆகியவை அவை.

“இந்த ஆண்டு சீனாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்,” என்று சீனத் துணைப் பிரதமர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்