சுடச் சுடச் செய்திகள்

விசா எடுக்க வேண்டுமா? ஏமாறாமல் இருக்க எச்சரிக்கை அவசியம்

இந்தியாவுக்குப் பயணம் செல்ல விரும்பிய ஆகாஷ் நிஷாத் என்பவர், விசா எடுக்க பொருத்தமான இணையத்தளம் ஒன்றை கூகல் இணையப்பக்கத்தில் தேடினார்.

தேடுபொறி கொண்டுவந்த இணையப்பக்கம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் கோரப்பட்ட தனது தனிப்பட்ட தகவல்களை நிரப்பினார் அவர்.

அந்த இணையப்பக்கத்தின் முகவரி ‘.org.in’ என்று முடிந்திருந்ததைப் பார்த்து, அது இந்திய அதிகாரிகளின் அங்கீகாரம் பெற்ற இணையத்தளமாக இருக்கும் என்று நம்பினார் அவர்.

ஆனால், விசாவுக்காக செலுத்திய கட்டணத்திற்கான  (S$164) ரசீது இந்தியாவில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்தது.

அந்த ரசீதில் இருந்த தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ள முயற்சி செய்ததில் ஏமாற்றமே மிஞ்சியது.

நிர்வாக உதவியாளராகப் பணிபுரியும் 36 வயது சிங்கப்பூரரான நிஷாத், தமது தனிப்பட்ட தகவல்களை அந்த இணையப்பக்கம் வாயிலாக மற்றவர்களுக்குக் கொடுத்தது பற்றி வருத்தம் தெரிவித்தார்.

முறையான அமைப்புகளிடமிருந்து இந்தியாவுக்கு விசா பெற 45 அமெரிக்க டாலர் மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என நிஷாத்தின் நண்பர்கள் அவரிடம் கூறியுள்ளனர். மின்னஞ்சல் வழியாகப் பெற்ற மின்-விசாவின் உண்மைத்தன்மை பற்றி இந்திய அதிகாரிகளிடம் அவர் விசாரித்து வருகிறார்.

நிஷாத் மட்டுமல்ல; இவரைப்போல பலர் இணையப்பக்கம் வழியாக விசா பெறுவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்துகின்றனர்; சிலர் கட்டணம் செலுத்திய பிறகு அவர்களுக்கு விசா கிடைப்பதில்லை. விசாரித்தால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும்.

விசா விண்ணப்பம் தொடர்பாக 2017ஆம் ஆண்டு முதல் 9 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் பயனாளர்கள் சங்கம் தெரிவித்தது.

தாம் ஏமாற்றப்படுவதாக சந்தேகித்தால் போலிசில் புகார் அளிக்கும்படி சங்கம் தெரிவித்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் தூதரகங்கள் போலி விசா இணையத்தளங்களைப் பற்றிய எச்சரிக்கை விடுத்துள்ளன. 

சிங்கப்பூரிலும் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகின்றன. இந்திய நாட்டவரான ஸ்ரீனிவாஸ் கோபால், 46, வர்த்தகக் காரணங்களுக்காக சிங்கப்பூருக்கு விசா எடுக்க இணையம் வழியாக நிறுவனம் (www.travelsingapore.com.sg) ஒன்றை நாடினார். அதற்கு 55 அமெரிக்க டாலரை கட்டணமாகச் செலுத்தினார். சில நாட்களுக்குப் பிறகு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டது. குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் இணையப்பக்கத்தில் சோதித்ததில் அவரது விண்ணப்பத்தைப் பற்றிய எந்த ஆவணமும் கிடைக்கவில்லை. 

அந்த இணையப்பக்கத்தின் மீது போலிசில் புகார் செய்திருப்பதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்ததுடன், போலி இணையப்பக்கங்களைப் பயன்படுத்தி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon