இடர்களைச் சமாளிக்க கைகொடுக்கும் சமய நம்பிக்கை

கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்ததிலிருந்து தற்போதைய கட்டுப்பாட்டுத் தளர்வுகள் வரை சிங்கப்பூரில் உள்ள பலருடைய சமய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி பல்வேறு சமயச் சங்கங்களைச் சேர்ந்த இளையர்கள் கலந்துரையாடினர். அவரவர் சமயங்களின் மீது தங்களது ஈடுபாடு எவ்வாறு அதிகரித்தது, இதனால் எப்படி தங்களது சவால்களை எதிர்கொண்டனர் என்பதைக் கலந்துரையாடலில் பங்கெடுத்தவர்கள் தங்களுக்கிடையே வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டனர்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் (எஸ்எம்யு) முஸ்லிம் சங்கத்தால் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, முதன்முறையாக மெய்நிகர் கலந்துரையாடலாக நடைபெற்றது.

கடந்த மாதம் 18ஆம் தேதியன்று 46 மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் எஸ்எம்யு கிறிஸ்டியன் பெலோஷிப், எஸ்எம்யு பிடெஸ், எஸ்எம்யு க்ருசேடர்ஸ் என்ற மூன்று கிறிஸ்துவ சங்கங்கள், எஸ்எம்யு தம்மா சர்க்கள் என்ற பௌத்த சங்கம், எஸ்எம்யு சீக்கியர் சங்கம் ஆகிய அமைப்பு களுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இந்து சங்கமும் இணைந்து கலந்துரையாடலில் ஈடுபட்டது. கிருமிப் பரவல் முறியடிப்பு திட்டம் நடப்பில் இருந்தபோது வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டது, பல்வேறு சமயச் சடங்குகளை வழக்கம் போல் தொடர இயல முடியாதது போன்றவை பற்றி கலந்துரையாடலில் பேசப்பட்டது.

புதிதாக இஸ்லாமைத் தழுவிய சிங்கப்பூர் சீனர், இந்து சமயத்தின் வைணவ நெறியை ஏற்று தமது வாழ்க்கை முறையை மாற்றிய இந்தியர், நாத்திகராக இருந்து பின்னர் கிறிஸ்துவத்திற்கு மாறிய மற்றொருவர் என இதில் பங்களித்த பலர், தங்களது தனித்தன்மையான ஆன்மிக வாழ்க்கைப் பயணங்களைப் பற்றி பிறருக்குப் பகிர்ந்தனர்.

கொவிட்-19 போன்ற இடர்களைத் தாங்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் அவர்களது அணுகுமுறைகள் என்ன என்பதையும் அவர்கள் பகிர்ந்தனர். இத்தகைய கலந்துரையாடலின் மதிப்பை சமயச் சங்கங்களைச் சேர்ந்த இளையர்கள் நன்கு உணர்ந்திருப்பதால் அவர்களை கலந்துரையாடலில் பங்கெடுக்க வைப்பதில் சிரமத்தை எதிர்கொள்ளவில்லை என்று மெய்நிகர் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் முகம்மது அமீன் ஹஜ்ஜி முகம்மது தெரிவித்தார்.

“எந்தப் பாரபட்சமுமின்றி தங்கள் கருத்துகளை முன்வைக்க அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன், கலந்துரையாடலின் அங்கம் ஒன்றில் அவர்கள் சிறு குழுக்களாகப் பிரிக்கப்படும்போது அக்குழுவில் அனைவரும் வெவ்வேறு சமயத்தினராக இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம்,” என்று அவர் தெரிவித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கையிலுள்ள இடர்களைச் சந்திக்கும்போது பல்வேறு சமய நம்பிக்கைகள் எப்படி மாணவர்களுக்கு நிதானத்தைத் தருகிறது என்பதை இந்தக் கலந்துரையாடலின் வழி நேரடியாக உணர்ந்ததாக கலந்துரையாடலில் பங்கேற்ற எஸ்எம்யு வர்த்தகப் பள்ளி மாணவர் ஷான் இங், 24, தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் முதல்முறையாகப் பங்கேற்றதாகக் கூறும் என்யுஎஸ் வர்த்தகப் பள்ளி மாணவி காயத்ரி சிவராஜ், 26, உணர்வில் அனைவரும் ஒன்றே என்ற உண்மையை இந்நிகழ்ச்சி உணர்த்துவதாகக் கூறினார்.

பலருக்குப் பலவிதமான துயரைத் தந்துள்ள கொவிட்-19 நெருக்கடிநிலையின்போதும் சிலர் தங்களது சமயம் சார்ந்த அறப்பணிகளைத் தொடர்வதைக் கேட்கும்போது மனநிறைவாக இருப்பதாக எஸ்எம்யு சட்டப்பள்ளியைச் சேர்ந்த மன்விந்தர் கோர், 24, தெரிவித்தார்.

தற்போது பொய்ச்செய்திகள் அதிகரித்துள்ள சூழலில் சமய ரீதியான வெறுப்புணர்வை மூட்டுவது மிகச் சுலபம் என்பதால் இது போன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிய இத்தகைய கலந்துரையாடல்கள் வழிவகுக்கும் என்று இரண்டாம் ஆண்டு எஸ்எம்யு மாணவர் வாபிக் பின் கமால், 22, தெரிவித்தார்.

பல்கலைக்கழகச் சூழலில் இருக்கும் மாணவர்களுக்கு இடையே பொதுவாகவே ஒருவித வெளிப்படைத்தன்மை இயல்பாக இருப்பதாகக் கூறிய மேகன் எலிசபெத் ஓங், 20, பகிர்ந்துகொள்ளப்படும் அனுபவங்களின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் வாழ்க்கை முழுவதும் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!