8,600 கிலோமீட்டர் கடந்து உக்ரேனியர்களுக்கு உதவும் சிங்கப்பூர் இளையர்

நிலத்துக்கடியில் உள்ள ஒரு சுரங்க அறையில் ஒரு குடும்பம் பதுங்கிக்கொண்டிருக்கிறது. குளிரில் நடுங்கும் வயதான பெற்றோர், அவர்களது இரண்டு மகள்கள். சாப்பிட கொஞ்சம் பதப்படுத்தப்பட்ட உணவு, புட்டி குடிநீர். இவை மட்டும்தான் அந்த அறையில் உள்ளன. அவ்வப்போது, வெளியே நிகழும் பலத்த வெடிப்புச் சத்தங்களால் அறை அதிரும்.

“நாங்கள் எத்தனை நாள்கள் இப்படி கழிக்கவேண்டும் என்ற சிறுதுளி எண்ணம்கூட எங்களுக்குக் கிடையாது. ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போல் இருக்கிறது. நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் வீடும் நாடும் முன்போல் என்றும் இருக்காது,” என்று கண்களில் கண்ணீர் ததும்ப, குரலில் துக்கம் அடைக்க அவர்கள் தங்கள் நிலையை விவரிக்கின்றனர்.

இதைக் கேட்கும்போதே மனதுக்குள் பதைபதைப்பு ஏற்படுகிறது. இந்தக் குடும்பத்தை இணையம் வழி நேரடியாகச் சந்தித்து, அவர்களுடம் பேசும் வாய்ப்பு சிங்கப்பூரரான பிரவின் சுராஜ் சாந்தகுமாருக்குக் கிடைத்தது.

“தி இண்டர்நே‌ஷனல் ஃபேடரே‌ஷன் ஆஃ லிபரல் யூத் எனும் அமைப்பு மூலம் உக்ரேனிய நிலவரத்தை அறிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒரு உக்ரேனியக் குடும்பத்துடன் நேரடி இணைய வீடியோ அழைப்புக்கு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்து. அந்தக் குடும்பம் தங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டனர். நான் கண்ட காட்சிகள் என மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின,” என்றார் 34 வயதான துப்புரவு நிறுவன உரிமையாளர் பிரவின். அந்தக் குடும்பத்துடன் பேசிய பின் அவர் மனதில் ஒரு தீர்மானம் தோன்றியது. உக்ரேனுக்குச் செல்ல அந்தக் கணத்தில் அவர் முடிவெடுத்தார்.

உக்ரேனிய நிலவரத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இணையத்தில் தகவல்கள் தேடத் தொடங்கினார். உக்ரேனிய அதிபர் வெளோடிமிர் ஸெலன்ஸ்கி ஆற்றிய உரை அவர் கண்ணில் பட்டது.

“பூசல் தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் அதிபர் ஸெலன்ஸ்கி தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் பேசுவதை நான் கேட்பது அதுவே முதன்முறை. நாட்டுப் பற்று, விட்டுக்கொடுக்காமல் போராடுவது, மீள்திறன் போன்ற பண்புகளை அவர் தமது பேச்சில் வலியுறுத்தினார். அவர் பேசியது எனக்குள் ஏதோ ஒன்றை தட்டி எழுப்பியது. இந்தப் போரில் நான் ஏதாவது செய்யவேண்டும் என்று தீர்மானித்தேன்”.

அறம் செய்வதற்கு முன் ஆராய்ச்சி செய்

ஆராய்ச்சி வேலையில் முழுமூச்சாய் இறங்கினார் பிரவின். சிங்கப்பூரில் உள்ள உக்ரேனியத் தூதரகத்துக்குத் தொடர்புக் கொண்டு அங்குச் செல்ல தம் ஆர்வத்தைப் பதிவுசெய்தார்.

“நான் ஒரு போர்க்காலப் படைவீரர், மூத்தி தாதியாகவும் முன்பு பணியாற்றியுள்ளேன். உக்ரேனுக்குச் சென்று சண்டையிடுவது என் நோக்கம் அல்ல. மருத்துவச் சேவை வழங்குவதென்றால் அதிக ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனால் நான் வேறு வழியில் உதவலாம் என உக்ரேனிய அதிகாரிகள் எனக்கு அறிவுறுத்தினர்”.

பேரால் பல உக்ரேனியர்கள் அதன் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். குறிப்பாக போலந்துக்குள் தினசரியும் ஆயிரக்கணக்கானோர் கடக்கின்றனர். உக்ரேனுக்குப் பதில் போலந்துக்குப் பயணம் செல்வதே உசிதமானது என்று அவருக்கு தோன்றியது.

“போர்முனைக்குச் சென்று சண்டையிட்டால் தான் உதவியா? ஆதரவற்று நிர்கதியாக இருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் கொடுத்து, ஆறுதல் அளிப்பதும் உதவிதானே,” என்று தமிழ் முரசுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறினார் பிரவின்.

போலந்தில் ஆற்றவிருக்கும் அறப்பணி

சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை (மார்ச் 24) மாலை ஆறு மணியளவில் பிரவின் போலந்து தலைநகர் வார்சாவில் தரையிறங்கினார். அங்குள்ள மனிதாபிமான அமைப்புகளுடன் சேர்ந்து அகதிகளுக்கு உணவு மற்றும் உதவி வழங்கும் நடவடிக்கைகளில் அவர் கைகொடுப்பார்.

இந்தச் சேவைகளை வழங்கும் சில அமைப்புகளுடன் பிரவின் தம்மை முன்னதாகவே பதிவு செய்துகொண்டார். இவற்றில் ஒன்று சிங்கப்பூரரான சரண்ஜித் வாலியா நடத்திவரும் வார்சா சேவா எனும் சீக்கிய அமைப்பு. வார்சா சேவா போன்ற பல அமைப்புகள் உக்ரேனிய அகதிகளுக்கு நாள்தோறும் இரண்டு முறை இலவசமாக உணவு அளித்துவருகின்றன. குடிநீர், போர்வை, உறங்கும் பைகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களையும் கொடுத்து உதவுகின்றன.

“நான் அடுத்த மூன்று வாரங்களுக்காவது போலந்தில் தங்கி தொண்டூழியம் செய்வேன். மனிதாபிமான அமைப்புகளுடன் சேர்ந்து என்னால் முடிந்த உதவியைச் செய்யவிருக்கிறேன். நான் ஐந்து ஆண்டுகள் அறுவை சிகிச்சை மூத்த தாதியாகப் பணிபுரிந்தேன். அந்த அனுபவம் கைகொடுக்கும் என நம்புகிறேன். சில அடிப்படை மருத்துவச் சேவைகள் தேவையென்றால், அதை வழங்கவும் நான் தயார்”.

தடங்கலை எதிர்கொள்ளும் மனஉறுதி

போலந்துக்குச் செல்ல முடிவெடுத்த தருணத்திலிருந்து பிரவின் ஏகப்பட்ட அம்சங்களைக் கவனிக்கவேண்டியிருந்தது. ஒரு வேளையாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, இம்மாதம் 14ஆம் தேதி அவர் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கொவிட்-19 கிருமி அவரைத் தொற்றியது. பயணம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அது அவருடைய மனஉறுதியை கொஞ்சம்கூட அசைக்கவில்லை. “பிரவின் மிகவும் உறுதியானவர், உதவும் மனப்பான்மை உள்ளவர். எதையும் சாதகமாகப் பார்க்ககூடியவர். சில சமயங்கள் நாம் உதவி செய்ய முன்வரும்போது, தடைகள் ஏற்படும். ஆனால் அதையெல்லாம் பிரவின் தடங்கலாகப் பார்ப்பதில்லை. மன உறுதியுடன் முன்செல்லுவார்,” என்றார் பிரவினின் உற்ற நண்பரான 33 வயது தீபா.

தட்டிக்கொடுத்து துணைநிற்கும் குடும்பம், நண்பர்கள்

பிரவின் எந்தவொரு அமைப்பின் மூலமாக போலந்துக்குச் செல்லவில்லை. முழுக்கமுழுக்க தம் சொந்தச் செலவில் அவர் அங்குச் சென்றுள்ளார். அவரது நண்பர்கள் சிலர் அவர் பயணத்துக்குப் பணம் அளித்து உதவியுள்ளனர்.

“எனக்கு அவருடன் செல்ல ஆசையாக இருந்தது. ஆனால் எனக்கு இந்தாண்டு திருமணம் நடக்கவுள்ளது. அண்மையில் புதிய வீடும் கிடைத்து. அதனால் என்னால் முடிந்த பணத்தை அவருக்கு கொடுத்தேன். இது அவருடைய நற்பணிக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார் 36 வயது ராஜா.

பிரவின் போலந்துக்குச் செல்ல முடிவுசெய்தபோது, அவருடைய தாயாரும் அவருடன் வர விருப்பம் தெரிவித்தார். ஆனால் போலந்தில் தற்போது வெப்பநிலை பூஜ்ஜியத்துக்குக் கீழ் போகக்கூடும். “அதுபோன்ற வெப்பநிலையை என் அம்மா தாங்கிக்கொள்ளமாட்டார் என்று நினைக்கிறேன். அதோடு என் தந்தை அண்மையில்தான் அறுவை சிகிச்சைக்குச் சென்றார். அவரைக் கவனித்துக்கொள்ள என் அம்மா இங்கு இருக்கவேண்டும். என் இரண்டு தம்பிகளும் குடும்பத்துடன் இருப்பதால், நான் செல்வதை அவர்கள் ஆதரித்தனர். நிறைய உற்சாகம் அளித்து என்னை வழி அனுப்பினார்கள்,” என்று தம் குடும்பம் தந்த ஆதரவை நினைத்து மனம் நெகிழ்ந்தார் பிரவின்.

உதவி என்னும் உன்னதம்

“போரால் பாதிக்ப்பட்டவர்களுக்கு ஏதோ ஒரு அமைப்பின் மூலம் நன்கொடை கொடுப்பது வசதியாக இருக்கும் அல்லவா?” என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.

“சிங்கப்பூரர்கள் பெரும்பாலானோர் உதவும் மனப்பான்மை உள்ளவர்கள். நம்மால் இயன்ற நன்கொடை அல்லது பொருள்கள் கொடுக்க நாம் முன்வருகிறோம். ஆனால் இதன் வழி நாம் உண்மை நிலவரத்தைப் புரிந்துகொள்ளமுடியுமா? போர், பசி, பட்டினி போன்றவற்றை நினைக்க பலருக்குப் பயமாக உள்ளது. அந்த அச்சத்தைக் களையவே நான் விரும்புகிறன். என்னைப் பார்த்து இன்னும் பலர் இதுபோன்ற உதவிசெய்ய முன்வருவார்கள் என நம்புகிறேன்,” என்று அவர் பதிலளித்தார். இந்தப் பதில் சிங்கப்பூரில் இருக்கும் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று என்னை யோசிக்கவைத்தது.

அண்டை நாட்டில் நடப்பது நம்மை பாதிக்கும். 8,000 கிலோமீட்டர் தூரம் உள்ள உக்ரேனில் நடப்பதும் நம்மைப் பாதிக்கும். நம்மால் எல்லாவற்றையும் செய்ய இயலாது. சிறுசிறு உதவிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் வழி நாம் உலகை மாற்றலாம் என்ற சிந்தனையோடு பிரவின் போலந்துக்கு விடைபெற்றார்.

உக்ரேனிய பெண்கள் படும் அவதி

சுரங்கறையில் சிக்கிய உக்ரேனியக் குடும்பம் பற்றி பிரவினுடைய நெருங்கிய நண்பர் தீபா கேட்டபோது அவர் பல நாள்கள் அதையே நினைத்துக்கொண்டு சங்கடப்பட்டார். “அந்தச் சுரங்கறையில் இருந்த ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் இருந்தது. ஆனால் அந்த அறையில் கழிவறையும், குழாயும் கிடையாது. அவரிடம் கைவசம் பெண்கள் சுகாதாரப் பொருள்களும் இல்லை. நிலத்தறையைவிட்டு வெளியே செல்லவும் முடியாது. அதைக் கேட்டபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஒரு பெண் என்ற முறையில் அந்தப் பெண் படும்பாடை நான் உணர்ந்தேன். என்னால் பிரவினுடன் செல்ல முடியாவிட்டாலும், பெண் அகதிகளுக்கு உதவ நான் அவருக்குப் பணஉதவி கொடுத்தேன். அதன் மூலம் சிலருக்காவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்”. - தீபா, 33 வயது, வங்கியில் விற்பனை பிரிவில் வேலைபார்க்கிறார்.

அகதிகளுக்கு உதவுவது என் கடமை

உக்ரேன் நிலவரத்தைக் கேட்ட பிரவினுடைய மற்றொரு நண்பர் ராஜாவுக்கு அவருடைய கிரீஸ் பயணம் ஞாபகத்துக்கு வந்தது. “நான் கிரீசில் உள்ள ஒரு தீவுக்குச் சென்றிருந்தபோது சில சிரிய நாட்டு அகதிகளைச் சந்தித்தேன். நான் அங்கு இரவில் சென்றடைந்ததால், தங்குமிடம் கிடைக்கவில்லை. அவர்கள் எங்களை தங்கள் வீட்டில் இரவைக் கழிக்க அழைத்தனர். முதலில் நாங்கள் தயங்கினேன். ஆனால் அவர்கள் முகமலர்ந்த உபசரிப்பை அனுபவித்த பிறகு, அங்குத் தங்க முடிவெடுத்தோம். அது ஒரு சிறிய வீடுதான். ஒழுங்கான கூரை கூட கிடையாது. ஆனால் அவர்கள் அன்பை நான் என்றும் மறக்கமாட்டேன். வசதி இல்லாதவர்களுக்குத் தாராள மனது உண்டு என்பதை நான் அன்று புரிந்துகொண்டேன். உக்ரேன் அகதிகள் பற்றி பிரவின் என்னிடம் கூறியபோது, என்னால் முடிந்த உதவியை நான் கொடுத்தேன். அதை நான் என் கடமையாகப் பார்க்கிறேன்”. - ராஜா, 36 வயது, உணவு, பானக் கடை மேலாளர்

போலந்தில் உக்ரேனிய அகதிகளுக்கு இலவச உணவு பரிமாறும் சிங்கப்பூரர்

64 வயதான சிங்கப்பூரர் சரண்ஜித் வாலியா போலந்தில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்துவருகிறார். கடந்த ஒரு மாதமாக அவர் போலந்து-உக்ரேன் எல்லையில் அகதிகளுக்கு இலவச உணவு வழங்கிவருகிறார். வார்சா சேவா எனும் அவர் நிறுவிய சீக்கிய அமைப்பின் மூலம் அவர் உதவி அளித்துவருகிறார். 20 தொண்டூழியர்கள் உதவியுடன் தினந்தோறும் விடியற்காலை அவர் சைவ உணவு சமைத்து அதை தேவைப்படுவோருக்கு அளித்துவருகிறார். தற்போது வார்சாவிலிருந்து சுமார் 4 மணி நேரம் தொலைவில் உள்ள எல்லைப் பகுதியில் அவர் ஒரு சமையல் அறை அமைத்து அங்கிருந்து உணவு தயாரிக்கிறார். தமிழ் முரசிடம் பேசிய அவர், அங்குத் தினந்தோறும் சூழ்நிலை மாறிக்கொண்டிருப்பதாகவும், புதிய சவால்கள் இருப்பதாகவும் கூறினார். உக்ரேன் தலைநகர் கியவ்வை ர‌ஷ்யா கைப்பற்றினால், அகதிகளின் நிலைமை மோசமடையும் என்றார் திரு வாலியா. “யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்ற குறிகோளுடன் நான் என் பணியைச் செய்துவருகிறன்,” என்கிறார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!