சிங்கப்பூரர் என்ற அடையாளத்தை அரவணைக்கும் முன்னாள் கட்டுமான ஊழியர்

சிங்கப்பூருக்கு வந்த இரண்டு மாதங்களில் நாட்டின் 30வது தேசிய தினத்தைப் பாடாங்கிற்கு அருகே நின்று பார்த்து ரசித்ததை முகமலர நினைவுகூர்ந்தார் முன்னாள் கட்டுமான ஊழியர் நடனசிகாமணி செந்தில், 48. 

“ரிவர்வேலியில் வேலை முடிந்து சக ஊழியர்களுடன் விரைந்து சென்றோம். வானத்தில் போர்விமானங்கள் விரைந்து சென்றதைக் கண்டுகளித்தோம்,” என்றார் திரு செந்தில்.

இப்போது, சிங்கப்பூரில் தமக்கென ஒரு குடும்பம் அமைத்துக்கொண்டு சிங்கப்பூரராக வாழும்  திரு செந்தில், சமூக மன்றங்களின் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

தமிழ்நாட்டின் விருத்தாசலத்தில் இருந்து 1995ல் சிங்கப்பூர் வந்த இவர், பொதுக்கட்டுமான ஊழியராகப் பணியைத் தொடங்கி, பின்னர் மின்சாரத் தொழில்நுட்பராக வேலை செய்தார். 

இப்போது, ‘ட்ரிபல் பவர் என்ஜினியரிங்’ மின்னணுவியல் நிறுவனத்தின் முதலாளியாக இருக்கும் திரு செந்தில், ஓய்வு நேரத்தில் செங் சான் சமூக மன்றச் செயற்குழுவின் தலைவராகச் செயல்படுகிறார்.

கட்டுமான ஊழியர்களுக்கு அப்போதைய காலகட்டம் தற்போதைய நிலையைவிட சவால்மிக்கதாக இருந்தது என்றார் இவர்.

ஊழியர்கள் பலருக்கு முறையான தங்குவிடுதிகள் இல்லாத நிலையில் அவர்களே தாமாகத் தங்குமிடங்களை அமைத்துக்கொள்ள வேண்டி இருந்தது. கட்டுமானத் தளத்தில் ஊழியர்கள் தாமாகச் சமைத்துச் சாப்பிட்டு உறங்குவர். ஒருநாள் சம்பளம் $16.

அத்துடன், தற்போதுபோல இல்லாமல் திரு செந்தில் வேலை செய்த காலகட்டத்தில் கட்டுமான ஊழியர்களின் கடப்பிதழ்களை முதலாளிகளே வைத்திருந்தது வழக்கமாக இருந்தது.

இத்தகைய கடினமான சூழலில்,  திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திரு செந்தில் மனவுறுதி கொண்டிருந்தார். மூத்த அண்ணனும் நண்பர் எல்.என். சிம்மனும் கொடுத்த ஊக்கமும் ஆலோசனையும் இவர் எடுத்த முடிவிற்கு முனைப்பாக இருந்தன. 

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பதிவுசெய்து பயில்வதற்குக் கடப்பிதழ் தேவைப்பட்டது.

“சாதாரணமாகக் கேட்டால் கொடுக்கமாட்டார்கள். பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லித்தான் என் கடப்பிதழைப் பெற்றுக்கொண்டு பதிவுசெய்தேன்,” என்றார் திரு செந்தில். 

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை எழுதுவதற்கும் கடப்பிதழ் தேவைப்பட்டதால் மறுபடியும் இவர் கடப்பிதழைச் சிரமப்பட்டுப் பெற்றார். முதலாளிகளுக்குத் தெரியாமல் இப்படி திரு செந்தில் திறனை மேம்படுத்திக்கொள்ள முயன்றது பெரும் போராட்டமாக இருந்தது.

வகுப்பில் சேர்ந்த பிறகும் வகுப்புகளுக்குத் தவறாமல் செல்ல, திரு செந்தில் நேர நிர்வாகத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதாயிற்று. இறுதியில் அவர் வெற்றிகரமாகச் சான்றிதழ் பெற்றார்.

இதேபோல, குறைந்தது 20 ஊழியர்களுக்கும் இவ்வாறு திறன்மேம்பாட்டுச் சான்றிதழைப் பெற உதவி செய்த திரு செந்தில், அவர்களுக்குத் துணைப்பாடம் கற்றுத் தந்து, ‘என்டிசி-3’, ‘என்டிசி-2’ தேர்வுகளில் தேர்ச்சி அடையச் செய்தார். அந்த ஊழியர்களில் தற்போது 15 பேர் நிரந்தரவாசத் தகுதிபெற்றுவிட்டனர். 

இந்தியாவில் பத்தாம் வகுப்புவரை படித்திருந்த திரு செந்திலுக்கு, தம் அண்ணணின் மின்பொருள் கடை ஒன்றில் வேலை பார்த்தது மின்னியல் பற்றிய அடிப்படை அறிவைத் தந்திருந்தது.

அத்துறையில் தமக்கு ஆர்வம் இருப்பதைத் தெரிந்துகொண்டு இந்தியாவில் அதில் பட்டயம் பெறவேண்டும் என இவர் விரும்பினார். ஆனால், அப்போது நிதிப்பற்றாக்குறை காரணமாக அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. கிராமத்துப் பெரியவர் ஒருவரின் அறிவுரையின்படி நகரத்தை நாடி கைத்தொழில் பழக முற்பட்டார்.

அப்பா தாதியர், தாயார் இல்லத்தரசி, ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள் எனப் பெரிய குடும்பத்தில் இவர் வளர்ந்தார். வேலை அனுமதிச்சீட்டில் வேலை செய்துவந்த திரு செந்தில், பின்னர் வேலை அனுமதி அட்டையைப் (எம்பிளாய்மண்ட் பாஸ்) பெற்றார். 

கல்வி மனிதர்களின் கண்களைத் திறப்பதால் தொடர்ந்து கற்றலில் ஈடுபட வேண்டும் என்று நம்பும் திரு செந்தில், வாழ்நாள் கல்வியை வலியுறுத்தும் சிங்கப்பூரின் கொள்கை தமக்குப் பிடித்துள்ளதாகக் கூறுகிறார்.

சமூகத் தொண்டு

உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகத்திடமிருந்து விருது பெறும் திரு செந்தில். படம்: கி.ஜனார்த்தனன்

சிங்கப்பூர் கலாசாரத்தின் நற்பண்பு, கனிவு, அன்பு, ஒற்றுமை ஆகிய பண்புகளைக் காணும்போது இங்கு தம் பிள்ளைகள் வளர்ந்தால் அவர்களது எதிர்காலம் மிக நன்றாக இருக்கும் எனக் கூறும் திரு செந்திலுக்கு, இந்தியாவில் பெரிய வீடு கட்டும் ஆசை இல்லை. 

2018ல் திருமணம் செய்துகொண்ட திரு செந்தில், தம் ‘கனவு இல்லமான’ அங் மோ கியோவிலுள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தம் மனைவி, ஒரு வயது நிரம்பிய மகன், மாமியார் ஆகியோருடன்  வசிக்கிறார். 

அங் மோ கியோ அவென்யு 1ல் உள்ள ஒரு புளோக்கின் 16ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில்  தீச்சம்பவம் ஏற்பட்டபோது, திரு செந்தில் அங்கு விரைந்து சென்று அண்டைவீட்டாரைத் தேடினார்.

‘எஸ்ஜிசெக்யூர்’ மூலம் இலவசமாகப் பயிற்சிபெற்ற திரு செந்தில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வரும் வரை குடியிருப்பாளர்களைப் பத்திரமாக வெளியேற்ற உதவினார்.

இந்தச் செயலுக்காக திரு செந்தில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்பின் உயிர்காப்பாளர் விருது பெற்றார். 

சிங்கப்பூர், 1990களில் இருந்ததைவிட கலாசார ரீதியாக முன்னேறியிருப்பதாகக் கருதுகிறார் செந்தில். தொடக்கத்தில் தாம் சிங்கப்பூரில் இருந்தபோது படிப்பறிவு அதிகம் இல்லாததுபோல தோற்றமளித்த மூத்தவர்கள் தம்மைப் போன்றவர்களை ஒதுக்கும் போக்கு இப்போது குறைந்துவிட்டதாகக் கூறினார். 

சிங்கப்பூரிலுள்ள தமிழர்கள் கல்வித்துறையில் முன்னேறிவிட்டதாகக் குறிப்பிட்ட திரு செந்தில், இப்போதுள்ள மாணவர்கள் அதிகம் படித்தவர்களாகவும் பண்பாளர்களாகவும் இருப்பதைக் கண்டு அகமகிழ்வதாகக் கூறினார். 

காவல்துறைக்குப் பக்கபலமாக இருக்கும் குடிமக்கள் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினராகவும் இவர் செயல்படுகிறார்.

1990களில் அடுக்குமாடிக் கீழ்த்தளத்தில் தமிழர்கள் சிலர் குடிபோதையில் கட்டுக்கோப்பின்றி நடந்துகொண்டபோது அவர்களிடம் அறிவுரை கூறியதாக திரு செந்தில் பகிர்ந்தார்.

“ஊர்க்காரனான உனக்கு என்ன அக்கறை வேண்டியிருக்கிறது என்று ஒருசிலர் ஏசினாலும் நான் கூறவந்ததைச் செவிசாய்த்து ஏற்றுக்கொண்டவர்களும் உள்ளனர்,“ என்று கூறினார்.

இவ்வாறு தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருப்பதைக் காண முடிவதாக மகிழ்ச்சியுடன் கூறினார். 

இந்தியாவிலிருந்து புலம்பெயரும் தமிழர்களும் இங்குள்ள சமூகத்தினருடன் அதிகம் பழகும்படி ஊக்குவிக்கிறார். சிங்கப்பூரில் புகழ்பெற்ற உணவுவகைகளில் ஒன்றான கோழிச்சோறு இவர் விரும்பி சாப்பிடும் ஓர் உணவாகும். இந்திய உணவை மட்டும் சாப்பிடும் சிலரை, சிங்கப்பூர் உணவுவகைகளையும் சுவைக்கும்படி ஊக்குவிக்கிறார். 

திரு லீ குவான் இயூவின் தலைமுறையில் இந்தியர்கள் பலர் சிறந்த அரசியல் தலைவர்களாக விளங்கியதுபோல வருங்கால அரசாங்கத் தலைமைத்துவத்திலும் இந்தியர்கள் அதிகம் இடம்பெறவேண்டும் எனத் தாம் விரும்புவதாக திரு செந்தில் சொன்னார். 

தமிழ் முரசு நாளிதழ் வழியாகப் பல்வேறு சமூக நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துகொண்டு தாமான் ஜூரோங் சமூக மன்ற நிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொண்டார்.

சிங்கப்பூரில் தமிழர்கள் பலர் வசிக்கும் பட்சத்தில் ஒரு வெளிநாட்டுக் கட்டுமான ஊழியராக நுழையத் தொடக்கத்தில் மிகவும் தயங்கிய திரு செந்தில், படிப்படியாகப் பழகி சமூக மன்ற உறுப்பியத்தைப் பெற்று பல்வேறு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். 

தற்போது இவரே பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னின்று வழிநடத்துகிறார். பிறப்பினால் சிங்கப்பூரர்கள், புதிய குடிமக்கள், நிரந்தரவாசிகள் எனப் பலதரப்பினரையும் சிண்டா, நற்பணிக்குழு போன்ற அமைப்புகளிலும் சமூக மன்றங்களிலும் சேர ஊக்குவிக்கிறார். இளையர்களை ஈர்ப்பது தற்போதுள்ள பெருஞ்சவால் என்று இவர் குறிப்பிட்டார்.

“சேரத் தயங்குவோரிடம் நட்பார்ந்த முறையில் கேட்டுக்கொண்டு அவர்களை வெளிப்படையாகப் பேச வைப்பேன்,” என்று அவர் கூறினார். 

உயர்வுதாழ்வு என வாழ்க்கைச் சக்கரம் சுழல்வது இயல்பு என்பதால் மனத்திலிருந்து எதிர்மறையான எண்ணங்களைக் களைந்து, நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதாக திரு செந்தில் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!