ஐந்து வட்டாரங்களில் 5 கி.மீ. வீதிகளில் நடையருக்கு முன்னுரிமைச் செயல் திட்டம்

சிங்கப்பூரில் ‘தோழமை வீதிகள்’ என்ற ஒரு செயல்திட்டம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக் வெஸ்ட், தெம்பனிஸ், தோ பாயோ, வெஸ்ட் கோஸ்ட் ஆகிய பகுதிகளில் முதன்முதலாக அந்தச் செயல்திட்டம் பரிசோதித்துப் பார்க்கப்படும்.

பிறகு அது செம்மையாக மேம்படுத்தப்பட்டு இதர நகர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் அப்போது அறிவித்தார்கள்.

அந்தச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து அக்கம்பக்க வட்டாரங்களின் ஊடே செல்லும் ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் நீளச் சாலைகள் 2025ஆம் ஆண்டு வாக்கில் நடையர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புது வடிவம் பெறும்.

வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்தி நடப்பது, சைக்கிளோட்டுவது ஆகியவற்றில் ஒருமித்த கவனம் திரும்பும்.

நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த விவரங்களைப் புதன்கிழமை அறிவித்தது.

இதன் தொடர்பில் தான் மேலும் ஆய்வுகளை நடத்தி அந்த ஐந்து அக்கம்பக்க வட்டாரங்களுக்குள் எங்கு எங்கு முன்னோடிச் செயல்திட்டத்தை மேற்கொள்ளலாம் என்பதை அடையாளம் கண்டு இருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.

அங் மோ கியோ அவென்யூ 6க்கும் அவென்யூ 8க்கும் இடைப்பட்ட அங் மோ கியோ ஸ்திரீட் 31ன் 730 மீட்டர் நீளப் பகுதி;

புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31, 32, 33, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5, புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 5 ஆகியவற்றை உள்ளடக்கிய 1.9 கி.மீ. பகுதி;

தோ பாயோ சென்ட்ரலுக்கும் லோரோங் 1க்கும் இடைப்பட்ட தோ பாயோ லோரோங் 1ஏ, லோரோங் 2 ஆகியவற்றின் சுமார் 1கி.மீ. பகுதி;

வெஸ்ட் கோஸ்ட் லிங்க்கிற்கும் கிளமெண்டி அவென்யூ 2க்கும் இடைப்பட்ட வெஸ்ட் கோஸ்ட் ரோட்டின் 770 மீட்டர் நீளப் பகுதி ஆகியவை அவற்றில் அடங்கும்.

அந்த ஐந்து இடங்களிலும் உயரமான நடையர் கடப்பிடங்கள், தடையில்லாத சாலைக் கடப்புகள், அகலமான, எளிதில் எட்டக்கூடிய நடைபாதைகள் போன்ற பல வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும்.

சாலைச் சந்திப்பில் நடையர்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்படும்.

வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் வகையில் வீதிகளில் அறிவிப்புப் பலகைகளும் சாலைகளில் குறியீடுகளும் இடம்பெறும்.

கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோழமை வீதி செயல்திட்டம் ஒவ்வொன்றும் அது அதற்கே உரிய சீரிய தன்மைகளுடன் அந்தப் பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

முன்னோடி செயல்திட்டம் இடம்பெறும் ஒவ்வோர் இடத்திலும் சமூகத்தினரை ஈடுபடுத்தி அவர்களின் கருத்துகளைத் திரட்டும் வகையில் ஆணையம் இப்போது சிறப்புப் பணிக்குழுவை அமைத்து வருகிறது.

அந்தப் பணிக்குழு ஒவ்வொன்றுக்கும் அந்தக் குழு செயல்படும் வட்டாரத்திற்கான அடித்தள அமைப்பு ஆலோசகர் தலைவராக இருப்பார்.

போக்குவரத்து அமைச்சைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அதில் இடம்பெற்று இருப்பார் என்று ஆணையம் தெரிவித்தது.

நகர மன்றம், அடித்தள அமைப்புகள், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும், பள்ளிக்கூடங்கள், உணவங்காடி அல்லது வர்த்தகச் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அந்தக் குழுவில் இருப்பார்கள்.

சமூகத்தினரிடம் இருந்து கருத்துகளைத் திரட்டுவதற்குப் பணிக்குழு ஏற்பாடு செய்யும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு இந்தச் செயல்திட்டத்தை வெற்றிகரமானதாக ஆக்கும்படி குடியிருப்பாளர்களுக்கு ஆணையம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.

இதனிடையே, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், புதன்கிழமை இந்த ஆணையத்தின் அதிகாரிகளுடன், புக்கிட் பாத்தோக்கில் அமையவிருக்கும் தோழமை வீதி முன்னோடி திட்ட இடத்திற்கு வருகை அளித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சமூகத் தேவைகளும் சவால்களும் நகருக்கு நகர் வேறுபடுகின்றன என்பது தெரியவந்து இருக்கிறது என்று கூறினார்.

குடியிருப்பாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் ஒவ்வோர் இடத்திற்கும் தலைசிறந்த முறையில் பொருந்தக்கூடிய அம்சங்களை அதிகாரிகள் முடிவு செய்து நடைமுறைப்படுத்துவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!