60 வயது பெண்ணிடம் $55,000 மோசடி; வங்கிக் கணக்கில் $99 மட்டுமே மிஞ்சியது

டிபிஎஸ் வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி ‘வைபர்’ செயலி மூலம் 60 வயதுப் பெண்ணுக்கு கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 13) அழைப்பு ஒன்று வந்தது.

அவரது வங்கிக் கணக்குக்குள் யாரோ ஊடுருவியிருப்பதாகக் கூறிய அந்த நபர், அதன்பொருட்டு சோதனை செய்ய விரும்புவதாகக் கூறினார்.

தொலைபேசி அழைப்பு ஏன் ‘வைபர்’ செயலி மூலம் செய்யப்படுகிறது என்று அந்தப் பெண் கேட்டதற்கு, தனது பேச்சுத் திறமையால் சமாளித்த அந்த நபரிடம் தமது டிபிஎஸ் வங்கிக் கணக்கு அட்டை எண், இணைய வங்கி மறை எண் ஆகியவற்றை வழங்கினார்.

அதேபோல, அந்தப் பெண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மறைஎண்ணையும் (OTP) அந்த நபர் பெற்றுக்கொண்டார். 

இப்படியாக அவரது கணக்கிலிருந்து மொத்தம் $54,999.06 தொகை வேறு கணக்குக்கு மாற்றப்பட்டுவிட்டது. அவரது கணக்கில் $99 மட்டுமே எஞ்சியிருந்தது.

பண மாற்றம் தொடர்பாக வங்கியிலிருந்து மின்னஞ்சல் ஒன்றைப் பெற்றபோதுதான் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என்று அஞ்சினார் அந்தப் பெண். தம் மகள் லாபினாவிடம் இதுகுறித்து தெரிவித்தார் அந்தப் பெண். 

“கணவரை இழந்த எனது 60 வயது தாயார், தம் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்த தொகை மொத்தமாக, அரை மணி நேரத்துக்குள் மோசடியால் களவாடப்பட்டுவிட்டது,” என்று இந்தச் சம்பவம் குறித்து லாபினா தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து போலிசில் புகார் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதுபோன்ற சுமார் 60 புகார்கள் பெறப்பட்டிருப்பதாகவும் சுமார் $1.6 மில்லியன் தொகை மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கு போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கோரி வங்கிகளிலிருந்து தொலைபேசி அழைப்புகள் செய்யப்படாது என்று கூறிய டிபிஎஸ் வங்கியின் பேச்சாளர், ஏற்கெனவே, பல எச்சரிக்கைத் தகவல்களை வங்கிகள் வெளியிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

தொலைபேசி வழியாக OTP உள்ளிட்ட முக்கியமான தகவல்களை யாருக்கும் தரவேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். சந்தேகத்துக்குரிய அழைப்புகளைப் பெற்றால் 1800-111-1111 என்ற 24 மணி நேர நேரடித் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மோசடி நபர்கள் வங்கிகளின் வாடிக்கையாளர்களிடம் நேரடியாகப் பேசுவது மட்டுமின்றி பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் வேறு எண்ணுக்கு அழைக்கச் சொல்வது, குறுந்தகவல்கள் மூலம் ஏதாவது எண்ணுக்கு அழைக்கச் சொல்வது போன்ற வழிகளிலும் புதிய வகை மோசடியை அரங்கேற்றி வருவதாகக் கூறப்பட்டது. 

கடந்த செவ்வாய்க்கிழமை இதன் தொடர்பில் போலிசார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்கும்படி அதில் அறிவுறுத்தியிருந்தனர்.

மோசடிகளின் தொடர்பில் போலிசாரை 1800-255-0000, என்ற எண்ணிலோ அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப்பக்கம் வாயிலாகவோ தொடர்புகொள்ளலாம்.

#தமிழ்முரசு #மோசடி #வங்கிமோசடி