சிட்டிக்கு வேகத்தடை போட எண்ணும் ஸ்பர்ஸ்

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி தொடங்கி சில வாரங்களே ஆனாலும் மற்ற அணிகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னிலையில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி, இதுவரை நடைபெற்ற ஆறு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சிட்டி மளமளவென முன்னுக்குச் செல்லும் வேளையில் அமைதியாகத் தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது டோட்டன்ஹேம் ஹோட்ஸ்பர்ஸ் குழு. கடந்த ஆறு ஆட்டங்களில் இரண்டில் சமநிலை கண்டாலும் எந்த ஆட்டத்திலும் தோல்வியை அது தழுவவில்லை. சொல்லப் போனால் இந்தக் காற்பந்துப் பருவத்தில் இன்னும் தோல்வியைச் சந்திக்காத இரு குழுக்கள்தான் சிட்டி, ஸ்பர்ஸ் குழுக்கள்தான்.

கடந்த காற்பந்துப் பருவத்தில் லீக்கில் முதல் இடத்தை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இருந்து வாய்ப்பை நழுவவிட்டது ஸ்பர்ஸ். இரு குழுக்களுமே எதிர் அணியைத் திணற வைக்கும் அளவிற்கு நெருக்கடி கொடுப் பதில் வல்லமை பெற்றவை. ஸ்பர்ஸ் குழுவின் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர் மொரிசியோ பொச்செட்டினோ கடந்த சில ஆண்டுகளாக அக்குழுவின் ஆட்டத்தை மெருகூட்டி வந்துள்ளார். சிட்டி குழுவிற்கு அதன் பயிற்றுவிப்பாளர் பெப் கார்டியோலா புதியவர் என்றாலும் சிறப்பான ஆட்டக்காரர்களைத் தம் குழுவில் கொண்டுள்ளார். ஆனால் இந்த ஆட்டம்தான் கார்டியோலாவுக்கு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் மிகப் பெரிய பலப்பரிட்சையாக அமையும்.

சிட்டியின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தினால் இரு குழுக்களுக்கும் இடையில் உள்ள புள்ளிகள் இடைவெளியை வெகு வாகக் குறைக்கலாம். தற்போது 18 புள்ளிகள் பெற்றுள்ளது சிட்டி. ஸ்பர்ஸ் 14 புள்ளிகளுடன் இரண்டாம் நிலையில் உள்ளது. ஸ்பர்ஸ் தோல்வி அடைந்தால் சிட்டி மேலும் மூன்று புள்ளிகள் முன்னேறிவிடும். அதனால் ஸ்பர்ஸ்சின் சொந்த அரங்கில் நடைபெறும் சிட்டி, ஸ்பர்ஸ் மோதலை இங்கிலிஷ் பிரிமியல் லீக் பட்டியலில் முதல் சில இடங்களில் இருக்கும் அனைத்து குழுக்களுமே ஆர்வத் துடன் கவனிக்கும். நடுநிலையில் உள்ள காற்பந்து ஆர்வலர்களுக்கோ கண்டிப்பாக துடிப்பான ஓர் ஆட்டம் காத்திருக்கிறது என்று நம்பலாம். இவ்வாட்டம் சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 9.15க்கு நடைபெறும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!