பிரதமர்: மசெக மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை மக்கள் செயல் கட்சி (மசெக) கைப்பற்றியது. 31 தொகுதிகளில் மசெக 28 தொகுதிகளில் வென்றது.

மக்கள் செயல் கட்சி இம்முறை மொத்தம் 61.24% வாக்கு விகிதத்தைப் பெற்றது. இது கடந்த 2015 ஆம் ஆண்டின் 69.9%-ஐ விடக் குறைவு.

இந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியை அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ததற்கு மக்களிடம் நன்றி கூறிய பிரதமர் லீ சியன் லூங், வாக்கு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் மக்கள் செயல் கட்சிக்கு இன்னும் பரவலான ஆதரவு உள்ளதைத் தேர்தல் முடிவு காட்டுகிறது என்றார்.

இந்த வெற்றியைப் பொறுப்புடன் பயன்படுத்தப்போவதாகக் கூறிய திரு லீ, தற்போதைய நெருக்கடியிலிருந்து சிங்கப்பூரை மீட்க பாடுபடப்போவதாகக் கூறினார்.


"இந்த நெருக்கடி காலத்தில் மக்கள் எதிர்நோக்கிய வலியையும் பதற்றத்தையும் இந்த முடிவு காட்டுகிறது," என்றார் அவர்.

இவ்வாண்டின் பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் இன்று அதிகாலை பேசிய திரு லீ இதனைத் தெரிவித்தார்.

மேலும் பாட்டாளிக் கட்சித் தலைவர் திரு பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ எதிர்கட்சித் தலைவர் ஆவார் என்றும் அவர் கூறினார்.

தாம் பாட்டாளி கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கை அழைத்து பாட்டாளிக் கட்சியின் திறமையான செயல்பாட்டுக்காக வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார் திரு லீ.

பாட்டாளி கட்சி அல்ஜுனிட், செங்காங் குழுத்தொகுதிகளையும் ஹவ்காங் தனித்தொகுதியையும் வென்று முதன் முறையாக பத்து இடங்களைப் பிடித்தது. இரண்டு குழுத்தொகுதிகளை ஆளும் மக்கள் செயல் கட்சி இழந்ததும் இதுவே முதன் முறை.

தற்போது பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் இரு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ஏற்கும் பட்சத்தில் மொத்தம் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பார்கள் என்று சுட்டிய பிரதமர் லீ, திரு பிரித்தம் சிங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த தலைமுறைத் தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க காத்துக்கொண்டிருக்கும் வேளையில் கொவிட்-19 தொற்றால் எதிர்பாராத பெரும் நெருக்கடி ஏற்படும் என்று தாம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றார் பிரதமர். எனினும் தாமும் மூத்த அமைச்சர்கள் திரு தர்மன் சண்முகரத்னம், திரு டியோ சீ ஹியன், திரு கா. சண்முகம் போன்றோரும் தொடர்ந்து சிங்கப்பூரை இந்த நெருக்கடியிலிருந்து மீட்க செயல்படப்போவதாக அவர் உறுதி அளித்தார்.

தேர்தலில் இந்திய, மலாய் வாக்காளர்கள் தேசிய அளவிலான அடிப்படையிலேயே வாக்களித்துள்ளனர் என்றும் அவர்களது போக்கில் பெரும் மாற்றம் இல்லை என்றும் பிரதமர் லீ சொன்னார்.

மக்கள் செயல் கட்சி செங்காங் குழுத்தொகுதியில் தோல்வி கண்டது வருத்தம் அளிக்கிறது என்றும் குறிப்பாக 4ஜி தலைமைத்துவத்தில் முக்கியமாகத் திகழ்ந்த தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைவர் திரு இங் சீ மெங் அங்கு கடும் போட்டியைக் கொடுத்து தோற்றார் என்றும் திரு லீ சுட்டினார்.

எனினும், தொடர்ந்து செங்காங் குடியிருப்பாளர்களின் நம்பிக்கையைப் பெற தங்கள் குழு பாடுபடும் என்றும் அடுத்த முறை செங்காங், அல்ஜுனிட் குழுத்தொகுதிகளைக் கைப்பற்ற ஆவன செய்யும் என்றும் திரு லீ கூறினார்.

இந்த பொதுத்தேர்தலில் மொத்தம் 93 நாடாளுமன்ற இடங்களில் 83 இடங்களைக் கைப்பற்றி மக்கள் செயல் கட்சி அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.

மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தலைமையிலான ஜூரோங் குழுத்தொகுதி ஆக அதிகமாக 74.62 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்ற கட்சி.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் ஆகக் குறுகிய வித்தியாசத்தில் 51.69 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று அமைச்சர் ஈஸ்வரன் தலைமையிலான மசெக வெற்றி பெற்றது.

மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற கட்சியாக வெஸ்ட் கோஸ்டில் தோற்ற சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு எஞ்சியிருக்கும் இரு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படும்.அவற்றை ஏற்றுக்கொள்வது அக்கட்சியின் கைகளில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!