என்யுஎஸ் மாணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றி அதிருப்தி விமர்சனம்; தண்டனை முறையை மறுஆய்வு செய்யும் உள்துறை அமைச்சு

முன்னாள் காதலியின் கழுத்தை நெரித்த பல் மருத்துவ மாணவரின் வழக்கு போன்றவற்றில் தண்டனை முறையை உள்துறை அமைச்சு மறுஆய்வு செய்யவிருக்கிறது.

குற்றவாளியின் பின்னணி, கல்வி நிலை போன்றவை தண்டனை மறுஆய்வில் கவனத்தில் கொள்ளப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இன்று நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) பல் மருத்துவத் துறை மாணவர் யின் ஜி சின்யிற்கு கடந்த வெள்ளிக்கிழமை 12 நாட்கள் தடுப்புக் காவல் ஆணையும் 80 மணிநேர சமூக சேவை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

அதோடு, மறுவாழ்வு மையத்தில் ஐந்து மாதங்கள் அவர் ஆலோசனை பெறவும் கண்காணிக்கப்படவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. தண்டனைக்காலம் முடிந்த பிறகு 23 வயது யின் மீது எந்த குற்றவியல் பதிவும் இருக்காது.

தமது முன்னாள் காதலியின் வீட்டுக்குள் புகுந்து அவரது கழுத்தை நெரித்ததுடன், ரத்தக்கசிவு ஏற்படும் அளவிற்கு அவரது கண்ணை பெருவிரலால் யின் அழுத்தினார்.

யின்னுக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதாது என்று சமூக வலைத்தளங்களில் பலர் அதிருப்தி தெரிவித்தனர். மக்கள் செயல் கட்சியின் மகளிர் பிரிவும் மகளிருக்கான செயல், ஆய்வுச் சங்கமும் (அவேர்) இந்த வழக்கின் முடிவை விமர்சித்துள்ளன.

யின்னுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அவரது குற்றத்திற்கு ஏற்றது அல்ல என்று அவை கருத்துரைத்தன.

என்யுஎஸிலிருந்து யின் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவர் நுழையவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், யின்னுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை குறித்த மக்களின் உணர்வை தம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடிவதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.

பெண் அமைச்சர்களும் தம்முடன் பணிபுரியும் அதிகாரிகளும் இது குறித்த கருத்துகளைத் தம்முடன் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றம் புரிந்தவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையின் மறுஆய்வு மூன்று அம்சங்களை உள்ளடக்கும் என்று அவர் கூறினார்.

பொதுவாக இதுபோன்ற குற்றச்செயல்களுக்கான தண்டனை, குற்றவாளியின் பின்னணி, திருட்டு போன்ற பிற குற்றச்செயல்களுக்கு விதிக்கப்படும் தண்டனையோடு ஒப்பிடும்போது இத்தகைய குற்றங்களுக்கான தண்டனை எந்த அளவிற்கு கடுமையாக இருக்கிறது ஆகியவை மறுஆய்வில் கணக்கில் கொள்ளப்படும் என்றார் அவர்.

இந்த வழக்கு குறித்து தாம் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிய அமைச்சர் சண்முகம், “தங்களிடம் முன்வைக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் நீதிபதிகள் முடிவு எடுக்கிறார்கள். இதுபோன்ற வழக்கு முடிவுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், சட்டக் கொள்கை கட்டமைப்பைப் பார்க்க வேண்டும். இதை அரசாங்கம் மாற்றலாம். அதைத்தான் நாங்கள் செய்யவுள்ளோம்,” என்று விளக்கினார்.

இதுபோன்ற வழக்குகளுக்கான தண்டனை கடுமையாக இருந்தாலும், அதை அமைச்சு மறுஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.

வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காக யின்னுக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

யின் மீண்டும் இக்குற்றத்தை செய்யும் சாத்தியம் குறைவு என்று மாவட்ட நீதிபதி மர்வின் பே தெரிவித்தார்.

மேலும், அவரது வயதைப் பொறுத்து, சிறைத் தண்டனையைவிட சமூக அடிப்படையிலான தண்டனை பொருத்தமாக இருப்பதாக அவர் சொன்னார்.

முன்னாள் காதலியிடம் மன்னிப்பு கோருவதற்கு அவரது வீட்டிற்கு யின் சென்றபோது அப்பெண்ணின் தந்தை, யின்னை பலமுறை முகத்தில் குத்தியதோடு, சிகரெட் துண்டால் காயப்படுத்தினார். அவருக்கு காவல்துறை எச்சிரிக்கை விடுத்திருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!