பிரதமர் லீ: கொவிட்-19க்கு பிறகு நாட்டை ஒப்படைக்க இலக்கு

கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து சிங்கப்பூரை மீட்டு, சிறந்த தலைமைத்துவத்திடம் நாட்டை ஒப்படைப்பதே தமது இலக்கு என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இஸ்தானாவில் நேற்று (ஜூலை 27) அமைச்சரவைப் பதவியேற்புச்  சடங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், தலைமைத்துவப் புதுப்பிப்பு என்பது முடிவடையாத பணி என்ற கூறினார். ஒவ்வொரு தலைமுறையிலும் திறமையுடையவர்கள் முன்வந்து, தேர்தலில் போட்டியிட்டு நாட்டிற்குச் சேவையாற்ற வேண்டும் என்றார் அவர்.

தமது 32வது வயதில் 1984ஆம் ஆண்டில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு லீ, “எனது நாட்டிற்கும் மக்களுக்கும் என்னைத் தொடர்ந்து அர்ப்பணிப்பேன்,” என்று உறுதி கூறினார்.

அரசியலின் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலுடைய, தாங்கள் உறுதியாக நம்பும் காரியங்களுக்காக கடப்பாடு கொண்ட தலைவர்கள் நாட்டிற்குத் தேவை என்றார் அவர். சிறந்த அரசியல் என்பது உயர்தர அரசியல் தலைமைத்துவத்தைச் சார்ந்து இருப்பதாக  அவர் கூறினார்.

“சிங்கப்பூரர்களுடன் அணுக்கமாகப் பணியாற்றக்கூடிய தலைசிறந்த தலைமைத்துவக் குழு இருந்தால் மட்டுமே உலக நாடுகளுக்கு இடையே சிங்கப்பூர் தலைநிமிர்ந்து நிற்க முடியும்,” என்று பிரதமர் லீ சொன்னார்.

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் அமைச்சர்கள் கொவிட்-19க்கு எதிரான பதில் நவடிக்கைகளில் முக்கிய பொறுப்புகள் வகிப்பதாகவும் சிங்கப்பூரர்களை அவர்கள் ஈடுபடுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் கொவிட்-19 நோய் பரவிவரும் தற்போதைய சூழலில்,  அமைச்சரவைப் பதவியேற்புச் சடங்கு சற்று அமைதியாக நடைபெற்றது. பாதுகாப்பு இடைவெளி நடைமுறையை உறுதி செய்ய அச்சடங்கு இரு இடங்களில் நடைபெற்றது.

அதிபர் ஹலிமா யாக்கோப், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், பிரதமர் லீ, அமைச்சரவை உறுப்பினர்கள் பாதிப் பேர் இஸ்தானாவில் இருந்தனர்.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் உள்ளிட்ட மற்றவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

இரு இடங்களிலும் அமைச்சர்கள் அமர்ந்த இருக்கைகளுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளி இருந்தது. காணொளி மூலம்  அவ்விரு இடங்களும் இணைக்கப்பட்டன.

மக்கள் செயல் கட்சியின் (மசெக) முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாட்டாளிக் கட்சியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் சடங்கில் கலந்துகொண்டனர்.

மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினர்கள் இஸ்தானாவிலும் செங்காங் குழுத் தொகுதி, ஹவ்காங் தனித் தொகுதி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திலும் இருந்தனர்.