கொவிட்-19க்காக சிகிச்சை பெற்ற ஊழியர் 'உயரத்தில் இருந்து விழுந்து' பின்னர் இறந்த சம்பவம்: மரண விசாரணை

கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதும் நிலைகொள்ள முடியாமல் தவித்தார் இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான ஊழியர் அழகு பெரியகருப்பன்.

46 வயதான அவருக்கு உடல் நல சிக்கல் ஏதுமில்லை என்றும் சமூக பராமரிப்பு வசதிகளுக்கு மாற்றப்படும் சூழல் நிலவியது என்றும் திரு அழகு சிகிச்சை பெற்று வந்த கூ டெக் புவாட் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் இன்று (செப்டம்பர் 24) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி, அந்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் வெளிப்புற படிக்கட்டு தளத்தில் திரு அழகு பெரியகருப்பனின் உடல் அசைவின்றி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் அவர் தங்கியிருந்த வார்டின் கழிவறையில் இருந்தபடி, தமக்கு கொரோனோ கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதால் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புவதாகக் கூறி 2 காணொளிகளைத் தமது கைபேசியில் பதிவுசெய்தார்.

பின்னர் தன்னிடமிருந்த உலோக கொக்கியைப் பயன்படுத்தி, தமது படுக்கைக்கு அருகில் இருந்த ஜன்னலைத் திறந்து, அதன் வழியாக கீழே குதித்துவிட்டார்.

உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்ததாக அவரது உடற்கூறு ஆய்வு தெரிவித்தது. இதயத்தில் பிளவு, மார்புக்கூட்டுக்குள் ரத்தக் கசிவு, உடைந்த விலா எலும்புகள், இடுப்பு, மூளை பரப்பில் ரத்தக் கசிவு உட்பட பல்வேறு காயங்கள் அவருக்கு இருந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால், நிமோனியாவால் உயிரிழந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

திரு அழகு பயன்படுத்திய உலோக கொக்கி அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது தெரியவில்லை என விசாரணை அதிகாரி ஆய்வாளார் ஜொலீன் இங் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு அழகு அமைதியானவர் என்று மற்ற நோயாளிகளால் வருணிக்கப்பட்டதுடன் நோயாளிகளுக்கு உணவு விநியோகிக்க தாதியர்களுக்கு உதவினார் என்றும் கூறப்பட்டது.

எதிர்கால பொருளியல் பற்றியும் சொந்த ஊரில் குழந்தைகளைப் பற்றியும் திரு அழகு கவலைப்பட்டதாக, கூ டெக் புவாட் மருத்துவமனையின் மனநலத் துறையின் தலைவரும், திரு அழகுவின் இறப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்பட்ட குழுவின் தலைவருமான திரு கோ கா ஹோங் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இத்தகைய சூழலில் இருக்கும் மற்ற நோயாளிகளுக்கும் இத்தகைய அக்கறைகள் இருக்கும் என்றார் அவர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொவிட்-19 நோயாளிகள் பலருக்கும் அவர்களது தாய்மொழியில் விளக்கங்கள் அளித்த பிறகும்கூட, தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சரியான புரிதல் இல்லாத நிலையில் ‘கருப்பொருள் பிரச்சினைகள்’ இருப்பதாகவும் மருத்துவர் கோ தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கூ டெக் புவாட் மருத்துவமனையில் உள்ள ஜன்னல்களுக்கு சிலிகோன் பூசப்பட்டுள்ளதாகவும் அதனை உடைத்துத் திறப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் கூறப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் ஒரே நிறுவனத்தில் திரு அழகு பணியாற்றி வந்ததாக மனிதவள அமைச்சு முன்பு குறிப்பிட்டிருந்தது. முதலாளியின் மீது அவர் எந்த ஒரு புகாரும் செய்திருக்கவில்லை.

திரு அழகுவின் உறவினரான திரு வீரப்பன் மீனாட்சி சுந்தரம் இன்று மரண விசாரணையின்போது நீதிமன்றத்தில் இருந்தார்.

தமது அறிக்கையை நாளை சமர்ப்பிக்க இருப்பதாக மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!