சுடச் சுடச் செய்திகள்

வேலையிட விபத்துகளில் இவ்வாரம் 2 ஊழியர்கள் மரணம்; பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க நிறுவனங்களுக்கு வலியுறுத்து

 

வேலையிடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் சிக்கி 2 ஊழியர்கள் இந்த வாரம் உயிரிழந்தனர். 

ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தருமாறும் விடுபட்ட வேலைகளை விரைந்து முடிக்கும் நோக்கில் அவர்களது உயிரை ஆபத்தில் விடக்கூடாது எனவும் ஊழியர் இயக்கம் என்டியுசி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் ஐவர் வேலையிட விபத்துகளில் சிக்கி உயிரிழந்ததாக என்டியுசி அமைப்பின் உதவி தலைமைச் செயலாளர் மெல்வின் யோங் தமது ஃபேஸ்புக் பதிவில் இன்று (டிசம்பர் 4) குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாண்டு இதுவரை 39 வேலையிட மரணங்கள் நிகழ்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், கடந்த ஆண்டைவிட இது மூன்றில் இரண்டு பங்கு அதிகம் என்றார்.

அண்மைய வேலையிட மரணங்கள் பற்றிய தகவல்களை வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றம் இன்று வெளியிட்டது.

டிசம்பர் முதல் தேதி பண்டகசாலை ஒன்றில் பொருள்களைப் பொட்டலமிட்டுக்கொண்டிருந்த ஒருவர் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்தார். அதனால் ஏற்பட்ட காயங்களால் பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அதற்கு அடுத்த நாள், இயந்திரம் ஒன்றைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த ஊழியர் மீது அந்த இயந்திரத்தின் பாகம் விழுந்தது. அந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை துணை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இவ்விரு சம்பவங்களின் தொடர்பில் மனிதவள அமைச்சு விசாரணையைத் தொடங்கியிருப்பதாக மன்றத்தின் இணையப்பக்கம் தெரிவித்தது.

ஒவ்வொரு நிறுவனத்திலும் பயிற்சி பெற்ற வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று திரு யோங் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பிரதிநிதிகள், கொவிட்-19 பரவல் தடுப்பு நடவடிக்கைகள் வேலையிட பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காமல் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை வேலையிடங்களில் செயற்படுத்தலாம் என்றார் அவர். 

பல நாட்களாக வேலை செய்யாமல் தற்போது வேலைக்குத் திரும்பியிருக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு நினைவூட்டல் பயிற்சிகளை நிறுவனங்கள் மீண்டும் வழங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வேலையிட பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு. அனைவருக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான வேலையிடங்களை உருவாக்க நாம் அனைவரும் நமது பங்கை ஆற்ற வேண்டும்,” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon