பிரதமர் லீ: புதிய நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம்

சிரமமான 2020ஆம் ஆண்டைக் கடந்து புதிய மனஉறுதியுடனும் நம்பிக்கையுடனும் 2021 புத்தாண்டை சிங்கப்பூர் வரவேற்பதாக பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில் கூறி உள்ளார்.

“கொவிட்-19 சூழலால் இதுவரை இல்லாத பொருளியல் நெருக்கடியை நாடு சந்தித்த போதிலும் கடுமையான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு மூலம் நிலைமையை நாம் சீராக்கி உள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.

திரு லீ மேலும் கூறுகையில், “உயிர்களைக் காத்து மக்களைப் பாதுக்காக்க வேண்டும் என்னும் நமது அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றி உள்ளோம். கொவிட்-19 சூழலை சிங்கப்பூர் சமாளித்த விதத்தின் மூலம் நமது ஆட்சிமுறையிலும் ஒருவர் மற்றொருவர் மீதும் சிங்கப்பூரர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தெளிவாகத் தெரிந்தது.

“சிங்கப்பூர் கடந்த திங்கட்கிழமை மூன்றாம் கட்ட கட்டுப்பாட்டுத் தளர்வில் அடியெடுத்து வைத்தது. அடுத்த இரண்டு நாட்களில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கிவிட்டோம். சிரமத்தின் முடிவில் நம்பிக்கை ஒளியை நாம் காண்கிறோம்.

“நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த பின்னர் நிலைத்தன்மைக்கான அறிகுறிகளை சிங்கப்பூர் பொருளியல் காணத் தொடங்கி உள்ளது. இருப்பினும் மீண்டுமொரு பெரிய, கட்டுப்படுத்த முடியாத நோய்ப் பரவல் நிகழாது தடுக்க போதுமான மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதற்குச் சிறிது காலம் பிடிக்கும். இடைப்பட்ட காலத்தில் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பதையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதையும் மக்கள் தொடரவேண்டும்.

“இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. அந்த நேரம் இனி வரும். அதுவரை, முயற்சிகளைத் தொடரவும் இறுதிநேரத்தில் தடுமாற்றம் நேராமல் தவிர்க்கவும் மக்களின் ஆதரவை நாடுகிறேன்,” என்று திரு லீ கேட்டுக்கொண்டு உள்ளார்.

பொருளியல் நிலவரம் குறித்து கூடுதல் விவரங்களைத் தெரிவித்த அவர், “நமது வேலைவாய்ப்புகள் மீண்டும் எழுச்சி பெற்று வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க அளவில் புதிய முதலீடுகளைச் செய்து வருகின்றன,” என்றார்.

2020ன் மூன்றாம் காலண்டில் குடியிருப்பாளர்களுக்கான வேலைவாய்ப்பு நிலவரம் வளர்ச்சி கண்டு கொவிட்-19 சூழலுக்கு முந்திய அளவை நெருங்கிவிட்டதாக மனித வள அமைச்சின் அறிக்கை ஒன்று தெரிவித்தது.

பிரதமர் தமது செய்தியில் மேலும் கூறுகையில், “பொருளியல் மீட்சி சீராக நடைபெறாவிட்டாலும் அதற்கான செயல்பாடுகள் கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முந்திய அளவைக் காட்டிலும் குறைவாகவே சிறிது காலத்திற்கு நீடிக்கக்கூடும்.

“பெரிய அளவிலான வேலை இழப்புகளையும் வர்த்தக வீழ்ச்சியையும் தடுக்க, கிட்டத்தட்ட $100 பில்லியன் மதிப்புள்ள ஐந்து வரவு செலவுத் திட்டங்களை அரசாங்கம் அறிவித்தது. பல்வேறு ஆதரவுத் திட்டங்களுக்கு நிதியளிக்க நமது கடந்தகால கையிருப்பு நிதியை அதிகமாகப் பயன்படுத்தினோம்,” என்று விவரித்தார்.

சிங்கப்பூரர்கள் தொடர்ந்து வேலையில் நீடிக்க முதலாளிகளும் தொழிற்சங்கங்களும் தங்களது பங்கை ஆற்றியதற்காக பிரதமர் தமது புத்தாண்டுச் செய்தியில் பாராட்டு தெரிவித்தார்.

“கொவிட்-19 நிலவரம் பல நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியபோதிலும், நல்லவேளையாக, சிங்கப்பூர் அதுபோன்ற ஒரு சூழலால் மக்களிடையே பெரும் பிரிவினைகள் ஏற்படுவதை தவிர்த்து உள்ளது. அதேபோல மற்ற நாடுகளில் காணப்பட்ட அவநம்பிக்கையான போக்கும் இங்கு தவிர்க்கப்பட்டு உள்ளது.

“சிங்கப்பூர் நிர்வாக முறை மீதான நம்பிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. உண்மைத் தகவல்கள் பற்றி அரசாங்கம் வெளிப்படையாக நடந்துகொண்டதால் சிங்கப்பூரர்கள் கொவிட்-19 விதிமுறைகளுக்கு இணங்கி செயல்பட்டு வருகின்றனர். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி வழிநடத்தும் அரசாங்கத்தின் மீது சிங்கப்பூரர்கள் மீண்டும் நம்பிக்கை வைத்து ஆதரவளித்தனர்.

“நெருக்கடிகளைக் கடந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இந்த அரசாங்கத்தால் முடியும் என்ற நம்பிக்கையே அவர்களின் ஆதரவுக்குக் காரணம்.

“கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிந்திய உலகம் எவ்வாறு இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும், இந்த நெருக்கடியான சூழலில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அனுபவங்கள் மூலம் சிங்கப்பூர் வலுப்பெற்று மீள வேண்டும். துடிப்புமிக்க பொருளியல் நாடாகவும் மீள்
திறன்மிக்க சமூகமாகவும் சிங்கப்பூர் திகழ்வது என்பது அதன் மக்களைச் சார்ந்து உள்ளது.

“இனி வரும் மாதங்களில் புதிய, எதிர்பாராத இடைஞ்சல்களை நாம் எதிர்நோக்கக்கூடும். நமது திட்டங்களை மாற்றியமைக்கும் கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படலாம். எவ்வாறிருப்பினும் ஒரே சிங்கப்பூர் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் வரை நாம் முன்னோக்கி பீடுநடை போடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று கூறிய பிரதமர், நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!