பட்டினிபோட்டு, கொடுமைப்படுத்தி மரணம் விளைவித்ததை ஒப்புக்கொண்ட முதலாளி; இறுதி நாட்களில் 24 கிலோ எடை மட்டுமே இருந்த பணிப்பெண்

உடல் மெலிந்து சிறுத்துப்போன பணிபெண்ணை ஒரு பொம்மையைப் போல தலை முடியைப் பிடித்து தூக்கி குலுக்கியதைக் காட்டும் காணொளி ஒன்று இன்று நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. காண்போரின் நெஞ்சை உறைய வைக்கக்கூடியதாக அது இருந்தது.

அந்த பணிப்பெண்ணின் முதலாளியான 40 வயது காயத்திரி முருகையன், போலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவி.

பசி, கொடுமை போன்றவற்றுக்கு உட்பட்ட அந்த் 24 வயது மியன்மார் பணிப்பெண், இறுதியில் இறந்துபோனார்.

நோக்கமில்லா மரணம் விளைவித்தது உட்பட 28 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட காயத்திரிக்கு ஆயுள் தண்டன விதிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோருகின்றனர்.

திருவாட்டி பியாங் இங்கை டொன் எனும் அந்த பணிப்பெண் கிட்டத்தட்ட 10 மாதங்களாக, பெரும்பாலும் தினமும் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டார். போதிய உணவோ, ஓய்வோ கொடுக்கப்படாத நிலையில் அந்தப் பணிப்பெண் குளிக்கும்போதும், கழிவறையைப் பயன்படுத்தும்போதும் குளியலறை மற்றும் கழிவறைக் கதவுகளைத் திறந்துவைத்திருக்க வேண்டும் என பணிக்கப்பட்டார்.

அந்தப் பணிப்பெண், தன்னுடைய இறுதி 12 நாட்கள் சன்னல் கம்பியில் கட்டி வைக்கப்பட்டதுடன் தரையில் உறங்கினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி அந்தப் பணிப்பெண் இறந்தபோது அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி அந்தக் குடும்பத்துக்காக பணியில் சேர்ந்த பிறகு அந்த பணிப்பெண் 38% உடல் எடை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

பணிப்பெண் உயிரிழப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, அந்தப் பணிப்பெண்ணையும் தங்களது 2 குழந்தைகளையும் கண்காணிப்பதற்காக காயத்திரியும் அவரது 41 வயது கணவரான கெவின் செல்வமும், பீஷானில் இருக்கும் தங்களது வீட்டின் பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவினர். பணிப்பெண்ணைத் துன்புறுத்தியது அந்த கேமராக்களில் பதிவானது.

காயத்திரியின் 61 வயது தாயார் பிரேமா எஸ். நாராயணசாமியும் அந்த வீட்டில் அடிக்கடி தங்கியது காணொளியில் தெரியவந்தது.

பணிப்பெண்ணைத் தாக்கி காயப்படுத்தியதன் தொடர்பில் பிரேமாவும் செல்வமும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். அவர்களது வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

கர்ப்பமாக இருந்தபோது கடுமையான மன அழுத்தத்துக்கு உட்பட்ட காயத்திரிக்கு ஓசிடி எனப்படும் மனநலப் பிரச்சினை பூதாகரமானதால், அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை (global jail term) விதிக்குமாறு தற்காப்புத் தரப்பு கோருகிறது.

ஆனால், பணிப்பெண்ணின் மரணத்தை ‘கொலை’ என்பதிலிருந்து ‘நோக்கமின்றி மரணம் விளைவித்தது’ என்று மாற்றியபோதே அவரது மனநலப் பிரச்சினை கணக்கில் கொள்ளப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பு வாதாடியது.

தண்டனை குறித்த முடிவை நீதிபதி சீ கீ ஊன் பிறிதொரு நாளில் வழங்குவார்.

மூன்று வயது ஆண் குழந்தைக்குத் தாயான அந்தப் பணிப்பெண், மியன்மாருக்கு வெளியே பணிக்குச் சென்றது இதுவே முதல் முறை. கைபேசி வைத்துக்கொள்ளவோ, விடுப்பு எடுக்கவோ அவர் அனுமதிக்கப்படவில்லை.

பணிப்பெண்ணின் திறனில் காயத்திரி திருப்தி கொள்ளவில்லை. பணிப்பெண் மிகவும் மெதுவாக வேலை செய்வதாகவும், சுத்தமில்லாமல் நடந்துகொள்வதாகவும் அதிகம் சாப்பிடுவதாகவும் காயத்திரி கருதினார்.

வீட்டில் சில விதிமுறைகளை வகுத்த காயத்திரி, எப்போதெல்லாம் திருவாட்டி பியாங் அடிபணியவில்லை என்று கருதுகிறாரோ அப்போதெல்லாம் பணிப்பெண் பியாங்கைத் திட்டினார். 2015ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் மீதான் உடல்ரீதியான துன்புறுத்தல்கள் அதிகரித்தன.

பணிப்பெண்ணான திருவாட்டி பியாங்கின் மீது தண்ணீரை ஊற்றுவது, அறைவது, தள்ளுவது, கிள்ளுவது, அவரை உதைப்பது, தரையில் கிடந்தவரை மிதிப்பது போன்ற உடல்ரீதியான துன்புறுத்தல்களை காயத்திரி புரிந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

பிளாஸ்டிக் போத்தல், உலோகக் கரண்டி போன்றவற்றால் அடித்தது, முடியைப் பிடித்து இழுத்தது, சூடான இரும்பால் சூடு வைத்தது போன்ற துன்புறுத்தல்களையும் திருவாட்டி பியாங் மீது காயத்திரி பிரயோகித்தார்.

தண்ணீரில் ஊற வைத்த ரொட்டித் துண்டுகள், குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட குளிர்ந்த உணவு, சில நாட்களின் இரவு வேளைகளில் சோறு போன்றவையே திருவாட்டி பியாங்குக்கு வழங்கப்பட்ட உணவு.

இரவில் 5 மணி நேரம் மட்டுமே உறங்க அனுமதிக்கப்பட்ட திருவாட்டி பியாங், பல முகக்கவசங்களை அணிந்துகொண்டு வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது.

ஜூலை மாதம் 25ஆம் தேதி இரவு 11.40 முதல் 11.55 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், மிக மெதுவாக வேலை செய்வதாகக் கூறி திருவாட்டி பியாங்கை காயத்திரியும் பிரேமாவும் மாற்றி மாற்றி அடித்ததுடன் தண்ணீரை அவர் மீது ஊற்றி துன்புறுத்தினர். பின்னர் பியாங்குக்கு உணவு ஏதும் வழங்காமல் அவரை சன்னல் கம்பியில் கட்டினர்.

அடுத்த நாள் காலை 4.55 முதல் 5 மணிக்கு உட்பட்ட நேரத்தில் திருவாட்டி பியாங்கை மீண்டும் மீண்டும் அடித்து, உதைத்த காயத்திரி, கையால் திருவாட்டி பியாங்கின் கூந்தலைப் பிடித்து இழுத்து சிலமுறை தலையை பின்னோக்கி இழுத்ததில் அவரது கழுத்து பின்னோக்கி இழுபட்டு அவர் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டது.

அன்று காலை 7.30 மணியளவில் திருவாட்டி பியாங் அசைவின்றி காணப்பட்டார். செல்வம் வேலைக்குக் கிளம்பிவிட்டார்.

பியாங்கை எழுப்பும் முயற்சி பலனற்றுப் போகவே, மருத்துவரை அழைக்குமாறு காயத்திரிக்கு பிரேமா ஆலோசனை வழங்கினார்.

பியோங் சமையலறையில் விழுந்து கிடந்ததாகக் கூறி, உதவி தேவைப்படுவதாக அருகில் உள்ள மருந்தகத்திலிருந்து மருத்துவரை வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிக்குமாறு அன்று காலை 9.30 முதல் 9.45க்கு இடைப்பட்ட நேரத்தில் கேட்டுக்கொண்டார் காயத்திரி.

மருத்துவர் வரும் வரை காத்திருப்பதாகக் கூறிய காயத்திரியும் பிரேமாவும் திருவாட்டி பியாங்கின் உடையை மாற்றி அவரை கூடத்தில் இருந்த சோஃபாவுக்கு மாற்றினர்.

வீட்டுக்குச் சென்ற மருத்துவர் கிரேஸ் குவான், பணிப்பெண் இறந்துபோனதை உறுதிப்படுத்தியதுடன் போலிசை அழைக்குமாறு கோரினார். ஆனால், தம் கணவரை அழைத்துவிட்டு பின்னர் போலிசை அழைப்பதாகக் கூறினார் காயத்திரி.

பணிப்பெண்ணை அடித்தீர்களா என மருத்துவர் கேட்டதற்கு காயத்திரி மறுத்தார்.

சில நிமிடங்களில் அவசர சிகிச்சை வாகனத்தை அழைத்தார் மருத்துவர் குவான்.

திருவாட்டி பியாங் இறந்துவிட்டதாக துணை மருத்துவ அதிகாரிகள் காலை 11.30 மணியளவில் அறிவித்தனர்.

பணிப்பெண்ணின் உடலில் அண்மைய 31 காயங்களும் உடலின் மேல்பரப்பில் 47 காயங்களும் இருந்ததை உடற்கூறு ஆய்வு தெரிவித்தது.

ஜூலை 25 அன்று திருவாட்டி பியாங்கின் கழுத்தை மீண்டும் மீண்டும் பின்னோக்கி இழுத்தத்தில் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்ததில் மரணம் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!