சிங்கப்பூரில் போடப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, மரபணு மாற்றத்தை ஏற்படுத்தமாட்டா: நிபுணர்கள்

சிங்கப்பூரில் போடப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் மனிதர்களின் மரபணுவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவை பாதுகாப்பானவை எனவும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் கொள்ளைநோய் சூழலைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என அந்தக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய சமூக தலைவர்களுடன் ஸ்ரீ நாராயண மிஷன் இன்று வழிநடத்திய மெய்நிகர் கருத்தரங்கு நிகழ்வில் சமூகத் தலைவர்கள் உட்பட 130 பேர் கலந்துகொண்டனர். கொவிட்-19 தடுப்பூசி குறித்து கலந்துரையாடப்பட்ட இந்தக் கருந்தரங்கில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சமூக அளவில் கொவிட்-19 கிருமித்தொற்றை சிங்கப்பூர் நன்றாக கட்டுபடுத்தியுள்ளது என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லது என்றும் வலியுறுத்தினார் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர்.

“தடுப்பூசி போடாதவருடன் ஒப்பிட்டு பார்த்தால் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொவிட்-19 கிருமி தொற்றும் வாய்ப்புகள் 90% குறைவு. 100% இல்லாவிட்டாலும் 90% குறைவு. அப்படியே உங்களுக்கு கொவிட்-19 தொற்றினாலும், அதாவது தடுப்பூசி போட்ட பின்னர் நோய் தொற்றும் வாய்ப்புள்ள சிலரில் ஒருவராக நீங்கள் இருந்தாலும், நோயின் அறிகுறிகள் மேலும் மிதமாக இருக்கும். தடுப்பூசி போட்டவர்கள் யாரும் கொவிட்-19 காரணத்தால் இறக்கவில்லை. கொவிட்-19 காரணத்தால் ஏற்படும் இறப்பிற்கு கிட்டத்தட்ட 100% பாதுகாப்பை தடுப்பூசி வழங்குகிறது,” என்றார் திரு விக்ரம் நாயர்.

கலந்துரையாடல் குழுவில் ஸ்ரீ நாராயண மிஷன் தலைவர் திரு ஜெயதேவ் உன்னிதன், தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ் தேவேந்திரன், சுகாதார அமைச்சின் தொற்றுநோய்கள் பிரிவின் குடியிருப்பு மருத்துவரான டாக்டர் எல்வின் டான் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நீடித்த நிகழ்வில் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பற்றி டாக்டர் எல்வின் விளக்கிய பின்னர் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

கொவிட்-19 தடுப்பூசிகள் வேகமாக தயாரிக்கப்பட்டதால் அவற்றின் பாதுகாப்பைக் குறித்து சிலர் கேள்விகள் எழுப்பினர்.

ஏற்கெனவே ஆராய்ச்சியில் இருந்த அறிவியலை வைத்து தான் தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன என்றும் கிட்டத்தட்ட 110 மில்லியன் மக்களைப் பாதித்து 2 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைப் பறித்த கிருமித்தொற்றால் அனைத்துலக அளவில் பிரச்சினையைத் தீர்க்க நாடுகள் விரைவாக ஒருமித்து செயல்படுகின்றன என்றும் சொன்னார் டாக்டர் எல்வின்.

கொவிட்-19 கிருமித்தொற்றைச் சமாளிக்க சிங்கப்பூரில் அனுமதி பெற்ற தடுப்பூசிகள், “அனைத்து கட்டுப்பாட்டு அதிகார நிபந்தனைகளுக்கும் பரிசோதனைகளுக்கும் உட்பட்டவை,” என்று டாக்டர் எல்வின் நம்பிக்கையளித்தார்.

mRNA தடுப்பூசிகள் மனிதர்களின் ‘டிஎன்ஏ’ எனப்படும் மரபணுவை மாற்றும் என்ற பொய்யான சமூக ஊடக பதிவுகளும் அறிக்கைகளும் உண்மையல்ல என்று டாக்டர் எல்வின் சுட்டினார்.

கொவிட்-19 தொற்றுக்குக் காரணமான கிருமியின் முக்கிய உடல் பகுதியான சில மரபணுப் பகுதிகளை உடலுக்குள் தடுப்பூசிகள் மூலம் செலுத்துவதன் மூலம், வேற்றுப் பொருள் உடலுக்குள் புகுந்திருப்பதை அறிந்து உடல் தாமாகவே அதற்கு எதிரான நோய்த் தடுப்பாற்றலை உருவாக்கும் என்ற முறையில் தடுப்பூசிகள் செயல்படுகின்றன. ஆனால், இந்த முறையில், முழு கிருமி உடலுக்குள் செலுத்தப்படுவதில்லை. எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் கிருமித்தொற்ற்று ஏற்படும் வாய்ப்பு இல்லை.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கொவிட்-19 எச்சில் / சளி மாதிரிகளைக் கொண்டு மேற்கோள்ளப்படும் சுகாதாரப் பரிசோதனைகளின் முடிவுகளைப் பாதிக்காது என்றும் டாக்டர் எல்வின் உறுதியளித்தார்.

“ஆசியாவிலேயே தடுப்பூசிகள் பெறும் முதல் சில நாடுகளில் ஒன்றாக நாம் இருக்கிறோம். சவால்களைத் தாண்டி தடுப்பூசிகளைக் கொண்டு வருவதற்கான திட்டம், செயல்பாடு ஆகியவற்றுக்குப் பின்னால் கடும் முயற்சி உள்ளது. தடுப்பூசிகளைப் பெற நிறைய பணம் செலவழிக்க பலர் தயாராக உள்ளனர். ஆனால் நம் அரசாங்கம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது. அவர்களின் நோக்கம் தெளிவாக இருக்கிறது. நாமும் நம் பங்கை ஆற்றவேண்டும். நம்மில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போட முடியுமோ அவ்வளவு பேருக்கும் போடவேண்டும்,” என்றார் திரு தேவேந்திரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!