தோண்ட தோண்ட தமிழினத் தொன்மை: கீழடியில் கண்காட்சி

2 mins read
ba0e05d7-13d5-40c8-ac6c-04b7dca29bb6
-

தமிழ் இனம் முன்­தோன்­றிய மூத்த குடி என்று சொல்­லப்­ப­டு­வதை மெய்ப்­பிக்­கும் வகை­யில் கீழ­டி­யில் தோண்ட தோண்ட தமிழினத் தொன்மை உல­கிற்­குத் தெரியவரு­வ­தாக தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

கிட்டத்தட்ட 2,600 ஆண்­டு­களுக்கு முந்­தைய தொன்­மையை உல­கிற்­கும் உலக மக்­க­ளுக்­கும் எடுத்­துக்­காட்­டும் வகை­யில், தமிழ்­நாட்­டின் சிவ­கங்கை மாவட்­டத்­தில் கீழடி என்ற அக­ழாய்­வி­டத்­தில் ரூ.18.8கோடி செல­வில் (சுமார் $3 மில்­லி­யன்) அமைக்­கப்­பட்டு உள்ள அதி நவீன கீழடி அருங்­காட்­சி­யத்தை முதல்­வர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை திறந்து வைத்­தார்.

அந்த அருங்­காட்­சி­யம் 31,000 சதுர அடி பரப்­ப­ள­வில் அமைக்­கப்­பட்டு உள்­ளது. கீழடி அக­ழாய்வு இடத்­தில் 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அக­ழாய்­வு­கள் நடந்து வரு­கின்­றன.

தமிழ்ச் சமூ­கம், கி.மு. ஆறாம் நூற்­றாண்­டில் கல்­வி­ய­றிவு, எழுத்­த­றிவு, நகர வாழ்வு, உல­கத் தொடர்பு ஆகியவற்­றைக் கொண்டு உயர் நாக­ரிக அம்­சங்­க­ளு­டன் வாழ்ந்­தது என்­பதை மெய்ப்­பித்து உள்ள 1,000க்கும் மேற்­பட்ட குறி­யீ­டு­கள்; 60க்கும் மேற்­பட்ட தமிழி எழுத்­துப் பொறி களுடனான பானை ஓடு­கள்; பாத்­தி­ரங்­கள்; பண்­டங்­கள்; கல் மணி­கள்; தங்க அணி­க­லன்­கள் வரை இது­வரை கிடைத்து உள்ள அனைத்­தும் கீழடி அருங்­காட்­சி­யத்­தில் பழமை கெடா­மல் அதி­நவீன அம்­சங்­க­ளு­டன் காட்­சிப்­படுத்­தப்­பட்டு உள்­ளன.

அருங்­காட்­சி­யத்­திற்­குச் செல்­வோர், 15 நிமிட ஒளி-ஒலிக் காட்சி வழி தமிழ்­நாட்­டின் தொன்மை, வர­லாறு, கீழ­டி­யின் முக்­கி­யத்­து­வத்தை அறிந்­து­கொள்­ள­லாம்.

தொடு­திரை மூலம் வர­லாற்று இடங்­க­ளைத் தெரிந்­து­கொள்­வது; கணினி உயி­ரோ­வி­யக் காட்­சி­கள், மெய்­நி­கர் காட்­சி­கள், கப்­பல் வடி­வ­மைப்­பு­கள், தமி­ழர் தொடு­திரை விளை­யாட்­டு­கள், முப்­ப­ரி­மா­ணக் காட்­சி­கள் உள்­ளிட்ட பல அம்­சங்­களும் கீழடி அருங்­காட்­சி­ய­கத்­தில் இடம்­பெற்று உள்­ளன.

கீழ­டி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்ட முக்­கி­ய­மான கண்­டு­பி­டிப்­பு­கள், உல­கப் புகழ்­பெற்ற அறி­வி­யல் ஆய்­வ­கங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்டு அவை கிமு ஆறாம் நூற்­றாண்­டைச் சேரந்­தவை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது என்பது குறிப்பிடத்தக்கது.