தாயகம் திரும்ப விரும்பும் அரசியல் தலைவர்களை வரவேற்கிறோம்: ஸ்ரேத்தா

2 mins read
c1cb3b88-5de4-471c-b751-f4b93149deac
தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ர. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத் உட்பட தாயகத்தைவிட்டு தப்பிச்சென்ற அரசியல் தலைவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்ப விரும்பினால் அவர்களை வரவேற்போம் எனத் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்தார்.

மேலும், அவர்கள் அந்நாட்டு நீதித்துறையின் செயல்முறைக்கு உட்பட வேண்டும் என்றும் திரு தவிசின் கூறினார்.

தன் தங்கையான யிங்லக் ஷினவத்வுடன் ‘சோங்க்ரான்’ பண்டிகையை அடுத்த ஆண்டுக் கொண்டாட தான் விரும்புவதாகத் தாய்லாந்தின் முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ர ஏப்ரல் 14ஆம் தேதி தெரிவித்ததைக் குறிப்பிட்டுத் திரு தவிசின் இவ்வாறு தெரிவித்தார்.

தன்னைத்தானே நாடுகடத்திக் கொண்ட தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் திரு தக்சின் 2023 ஆகஸ்ட் 22ஆம் தேதி தாயகம் திரும்பினார். நாடு திரும்பியதும் அந்நாட்டின் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தனது சொந்த மாநிலமான சியாங் மாய்க்கு ஏப்ரல் 15ஆம் தேதி வருகைதந்த திரு தக்சின், தான் யிங்லக் ஷினவத்ரா தாய்நாட்டில் இல்லாததற்காக மிகவும் வருந்துவதாகவும் 2025ஆம் ஆண்டு யிங்லக் தன்னுடன் சியாங் மாயாவில் இருப்பார் எனத் தான் நம்புவதாகவும் கூறினார்.

யிங்லக் தாய்நாடு திரும்ப விரும்பும் தகவலை திரு தக்சினோ முன்னாள் பிரதமர் யிங்லக்கோ தனக்கு அல்லது அரசாங்கத்திற்குத் தெரிவிக்கவில்லை என்று விடுமுறை பயணமாக ஹுவா ஹினுவுக்குச் சென்றுள்ள திரு தவிசின் ஏப்ரல் 14ஆம் தேதி கூறினார்.

இருப்பினும், அரசியல் ரீதியான குற்றச்சாட்டிலிருந்து தப்பியோடிய அனைவரும் தாயகம் திரும்ப விரும்புவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது நல்லது என்றாலும் அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அது சிக்கலானது அன்று எனத் தாய்லாந்து பிரதமர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்