இந்தியாவில் 33% மகளிர் இடஒதுக்கீடு விரைவில் அமலாகட்டும்

இந்தியாவில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் வரலாற்று முக்கிய முதல் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. அங்கு சிறப்புக்கூட்டத்தை நடத்தி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கிறது.

நாட்டின் நாடாளுமன்றத்திலும் மாநிலங்களின் சட்ட மன்றங்களிலும் பெண்களுக்கு 33% இடத்தை ஒதுக்க வகை செய்யும் அந்த மசோதாவை இரு அவைகளும் நிறைவேற்றி இருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தின் 108வது திருத்த மசோதாவாக அது மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அண்மைய காலத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு மன்றத்தின் கீழவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேறி இருக்கும் முக்கியமான ஒன்றாக இது இருக்கிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதை மறுபடியும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்கல் செய்தார். புதிய கட்டடத்தில் இரு அவைகளும் முதன்முதலாக நிறேவேற்றிய மசோதா என்ற பெருமையும் அதற்குக் கிடைத்துள்ளது.

மன்றத்தின் கீழவையில் அந்த மசோதா நிறைவேறியதற்கு அடுத்த நாள், அதாவது சென்ற வியாழக்கிழமை 11 மணி நேர விவாதத்திற்குப் பிறகு அதை 200 பேருக்கும் மேற்பட்ட மேலவை உறுப்பினர்களும் ஆதரித்து நிறைவேற்றினர்.

மசோதா நிறைவேறி இருப்பது, அனைத்துத் தரப்புகளின் பாராட்டுகளையும் பெற்று உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் இப்போது உறுப்பினர்களாக இருக்கின்ற பெண்கள், அந்த மசோதா காரணமாக வாழ்க்கையின் பல தரப்புகளையும் சேர்ந்த இந்திய மாதர்களுக்கு அரசியலில் அதிக செல்வாக்கு, ஆதிக்கம் கிடைக்கும் என்று பாராட்டுகிறார்கள்.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா இதற்கு முன் 1996ஆம் ஆண்டில் மன்றத்தில் முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பல காரணங்களால் அது நிறைவேறவில்லை. பிறகு பல முறை முயன்றும் பலனில்லை. கடைசியாக 2010ல் மேலவையில் மசோதா நிறைவேறியது. ஆனால், மக்களவையில் நிறைவேறாமல் போனதால் நடப்புக்கு வரவில்லை. இந்த நிலையில் இப்போது மசோதா நிறைவேறி இருக்கிறது.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் இப்போது நிறைவேறி இருக்கிறது என்றாலும் அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதுதான் தெரியவில்லை.

அந்த மசோதா அமலாகாமலேயே போய்விடக்கூடிய ஆபத்தும் உண்டு என்று நாட்டின் எதிர்த்தரப்புகள் அச்சம் தெரிவித்து உள்ளன. மசோதாவை உடனடியாக நடப்புக்குக் கொண்டுவரவேண்டும் என்று எதிர்த்தரப்பினர் வலியுறுத்துகிறார்கள்.

என்றாலும் திட்டவட்டமாக ஒன்று தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அது நடப்புக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அந்த மசோதா 2029ல் நடப்புக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது. கொவிட்-19 காரணமாக தடைப்பட்ட கணக்கெடுப்பு 2026ல்தான் நடக்கும் என்று தெரியவந்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்த பிறகு அதன் அடிப்படையில் அரசியல் தொகுதிகள் அனைத்தின் எல்லைகளையும் திருத்தி அமைக்க வேண்டும்.

இந்த நடைமுறை காரணமாக தென்னிந்தியாவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் 24 தொகுதிகள் குறைந்துவிடும் என்றும் அதேநேரத்தில் வட இந்தியாவில் சுமார் 35 தொகுதிகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

உலகிலேயே ஆக அதிக மக்கள் வசிக்கும் இந்தியாவில் பதிவு பெற்ற பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 475 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவம் நாடு சுதந்திரம் அடைந்தது முதலே மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

இந்தியாவில் இப்போது 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் வெறும் 104 பேர்தான் பெண்கள்.

பெண்களின் விகிதாச்சாரம் 13% கூட இல்லை என்பது ஆகக் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதா ஏற்கெனவே நடைமுறைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோலவே இதர பல மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடங்கள் உறுதியாகி இருக்கின்றன.

ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைப் பொறுத்தவரை சட்டமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் விகிதம் வெறும் 5 விழுக்காடாகத்தான் இருக்கிறது.

ஆனால் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காட்டு இடத்தை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

மாநில சட்டசபைகளிலும் 50 விழுக்காட்டு ஆதரவு அதுக்குக் கிடைக்க வேண்டும்.

புதிய மசோதாவின் படி தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இருந்தாலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் கூறுகிறார்கள்.

இந்திய மக்கள்தொகை இளமையானது. அதில் பாதிக்குப்பாதி பெண்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய முழு ஆற்றலும் நாட்டின் வளர்ச்சிக்கு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டுமானால் பெண்களின் உரிமைகள் முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு புதிய மசோதா தான் வழி. இதனால் அந்த மசோதா கூடுமானவரை விரைவில் நடப்புக்கு வந்துவிடும் என்பது இந்தியாவின் அனைத்து தரப்பினரின் விருப்பமாக, எதிர்பார்ப்பாக, நம்பிக்கையாக இருக்கும் என்பது நிச்சயம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!