சுடச் சுடச் செய்திகள்

சேலையின் 200 ஆண்டு கதையைக் கூறிய மேடை நாடகம்

1819ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை, கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாரம்பரிய உடையான ‘சேலை’ எடுத்த பரிமாணங்களைச் சித்திரப்படுத்தி, சேலை எப்படி சிங்கப்பூருக்கு வந்திருக்கலாம் என்ற கதையை ‘SEA OF CLOTH – The Journey of Sari to Singapore’ மேடை நாடகம் காட்சிப்படுத்தியுள்ளது. 

‘சிங்கப்பூர் இந்திய திரைப்பட, நாடக ஆர்வலர்கள்’ (சிட்ஃபி) அமைப்பின் ஏற்பாட்டில்  அக்டோபர் 19ஆம் தேதி இந்த மேடை நாடகம் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் படைக்கப்பட்டது. 

அரங்கப் படைப்பு, நேரடி இசை, கவிதை ஆகிய கலை அம்சங்களை உள்ளடக்கிய இந்த 80 நிமிட மேடை நாடகம் சிங்கப்பூரின் ஆடைத் துறையைப் (Textile Industry) பற்றி விளக்கியது உட்பட சிங்கப்பூரின் வரலாறு, அடையாளம், கலாசாரம், வர்த்தகம், சூழல் ஆகியவை மீது ஆடைகள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. 

‘சிப்பாய்’ (Sepoy) எனப்படும் மேற்கத்திய இராணுவத்தில் இயங்கிய இந்திய போர் வீரர்கள், சேலை உடுத்திய சிலைகளை சிங்கப்பூருக்குக் கொண்டு வந்திருக்கலாம். அத்துடன் இவ்வீரர்கள் தமது தாயார்களின் ஞாபகமாக சில சேலைத் துணிகளை இங்கு கொண்டு வந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள், ஆவணக் காப்பாளர்கள் ஆகியோரிடம் பேசியதில் கண்டறியப்பட்டது என்றார் சிட்ஃபி அமைப்பின் தலைவரான திரு சலீம் ஹாடி. 

“இது ஒரு வரலாற்றுப் புனைவுப் படைப்பு என்பதால் படைப்பின் கதையில் சுவாரசியம் உட்பட முக்கிய தகவல்களையும் மற்ற பல அம்சங்களையும் உள்ளடக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. சேலை எப்படி சிங்கப்பூருக்கு வந்திருக்கலாம் என்று பல ஆக்ககரமான சிந்தனைகளை என்னால் ஆராய முடிந்தது,” என்றார் திரு சலீம். 

பல்லூடகப் பயன்பாடு மேடை நாடகத்தைப் புதுமையாக்கியது என்றும் சேலைகளை வேறுவித கண்ணோட்டத்தில் பார்க்க முடிந்தது என்றும் கூறினார் படைப்பை பார்த்தவர்களில் ஒருவரான டாக்டர் உமா ராஜன். 

“மேலும் பல விவரங்களைப் படைப்பில் உள்ளடக்கியிருக்கலாம் என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு சேலையை வைத்து குழந்தைத் தொட்டில் அமைத்ததைக் காட்டியிருக்கலாம்,” என்றார் அவர். 

மேடை நாடகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நடிகர்களில் 8 நடிகர்கள் புதுமுக நடிகர்கள் என்று குறிப்பிட்டார் திரு சலீம். 

“முதல் முறையாக நடிப்பது ஒரு சிறப்பான அனுபவமாக அமைந்தது. சக நடிகர்களிடமிருந்தும் படைப்பு தயாரிப்புக் குழுவிடமிருந்தும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அமைந்தன,” 

“நிச்சயம் இது ஒரு சுலபமான படைப்பு இல்லை. ஒரு கட்டத்தில் நேரப் பற்றாக்குறையால் படைப்பில் சில அம்சங்கள் முழுமையடையாமல் இருப்பதாகத் தோன்றியது. சவால்களைத் தாண்டி வெற்றிகரமாக படைப்பை மேடையேற்றியது திரு சலீமின் உழைப்பிற்கும் ஆர்வத்திற்கும் சான்று,” என்றார் படைப்பின் புதுமுக நடிகரான குமாரி லாவண்யா குருநாதன், 23. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon