என் வெற்றிக்குக் காரணம் மனவலிமை: வாகை சூடிய அழகி கோமதி

என் வெற்றிக்குக் காரணம் மனவலிமை: வாகை சூடிய அழகி கோமதி

2 mins read
5355c351-799e-40ce-989e-921f7c9129bd
என் நாட்டுக்கு என்னால் முடிந்த பெருமையைத் தேடித் தந்துள்ளது நிறைவாக உள்ளது என்றார் கோமதி ஜெயகுமார். - படம்: கோமதி ஜெயகுமார்

தனது கரடுமுரடான வாழ்க்கைப் பாதை, தன்னை வெற்றிக்குத் தயார்படுத்தியதாக நம்புகிறார் ‘மிஸஸ் பிளேனட் டேலண்ட்’ விருது பெற்றுள்ள கோமதி ஜெயகுமார்.

சிங்கப்பூர் இந்திய மாடலிங் நிறுவனம் நடத்திய ‘சிங்கப்பூர் இந்திய ஃபேஷன் ரன்வே 2023’ விருது நிகழ்வில் ‘மிசஸ் சிங்கப்பூர் பிளேனட்’ விருதையும் இவர் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்ற ‘மிஸஸ் பிளேனட்’ அழகிப் போட்டியில் சிங்கப்பூர் சார்பில் கலந்து கொண்டு ‘மிஸஸ் பிளேனட் டேலண்ட்’ விருதைப் பெற்றுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 30 அழகிகளுடன் போட்டியிட்டு, முதல் மூன்று இடங்களில் இவர் இடம்பெற்றுள்ளார்.

தாயின் உடல்நலக் குறைவு, குழந்தை வளர்ப்பு, தனது முழுநேர அரசுப் பணி, கடைசி நிமிட இட மாற்றம் எனப் பல தடைகள் இருப்பினும் போட்டியில் கலந்து கொண்டு, நாட்டைப் பிரதிநிதித்துப் பெருமை தேடித்தர வேண்டும் என்கிற எண்ணம் மனதில் ஆழமாக வேரூன்றி இருந்ததால் சிரமங்களைப் பாராமல் உழைத்ததாகக் குறிப்பிடுகிறார் கோமதி.

அதிக நீர் அருந்துதல், சத்தான உணவுமுறையைப் பின்பற்றுதல், சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்துதல், உடற்பயிற்சியும் நடனப் பயிற்சியும் மேற்கொள்ளுதல் என அனைத்தையும் பின்பற்றுவதால் போட்டிக்கெனச் சிறப்பாகத் தயார்செய்தது அவ்வளவு கடினமாக இல்லை எனச் சொன்னார். மேடையில் நிற்கும் தோரணை, நடக்கும் விதம், பார்க்கும் விதம் ஆகியவற்றை மேம்படுத்தவும் பயிற்சி மேற்கொண்டார்.

“கனமாக வடிவமைக்கப்பட்ட ஆடையுடன், 5 அங்குல உயரமுள்ள காலணியை அணிந்து, நேர்த்தியாக நடப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை,” என்றார்.

தொண்டூழியத்தில் ஆர்வத்துடன் ஈடுபடும் இவர், தொடர்ந்து பெண்கள் முன்னேற்றம், ஆதரவற்றோர் நலம், நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்க விரும்புவதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்