தென்கொரியா: ஒரே நாளில் 20 பேருக்கு கொவிட்-19; தேவாலயச் சேவைகளில் பங்கேற்ற பலருக்கு பாதிப்பு

தென்கொரியாவில் புதிதாக 20 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக இன்று (பிப்ரவரி 19) உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

புதிய சம்பவங்களையும் சேர்த்து அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆனது.

அவற்றில் 18 கிருமித்தொற்று சம்பவங்கள், தெற்கு நகரமான டேகுவில் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவை. அதில் 15 சம்பவங்கள் 61 வயதான ஒரு பெண்ணின் கிருமித்தொற்றுடன் தொடர்புடையவை.

நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யபப்ட்ட 61 வயது பெண்மணி அங்கு கிருமித்தொற்றுகண்ட '31வது நோயாளி'. அவர் அண்மையில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கவில்லை. ஆனால், அவர் கிருமித்தொற்று உறுதிசெய்வதற்கு முன்பு தேவாலயத்துக்குச் சென்றிருந்தார் என்று கொரிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் தெரிவித்தது.

அந்தப் பெண் சென்ற தேவாலயத்துக்குச் சென்ற மேலும் 14 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. மற்றொருவர் அவர் மருத்துவமனை ஒன்றுக்குச் சென்றிருந்தபோது தொடர்பில் வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

'31வது நோயாளி' என்று அறியப்படும் அந்தப் பெண்ணுடன் நூற்றுக்கணக்கானோர் தேவாலயச் சேவைகளில் பங்கேற்றதாக நம்பப்படுகிறது.

பிப்ரவரி 10ஆம் தேதி அவருக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டது. அண்மையில் வெளிநாட்டுக்குப் பயணம் செய்யாததால் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனைக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒரு வார காலமாக அவர் தனிமைப்படுத்தப்படவில்லை. நேற்று அவருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவர் ஒரு ஹோட்டலுக்கும் மருத்துவமனைக்கும் சென்றதாகக் கூறப்பட்டது.

அவரது குடும்பத்தார் யாருக்கும் கிருமித்தொற்று அறிகுறிகள் தென்படவில்லை. ஆனால், அவர் பயணம் செய்த டாக்சி ஓட்டுநர் தாமாகவே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்பட மறுப்போரைக் கையாளும்  கொள்கைகள் மறுபரிசீலிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அதிகாரிகள், அத்தகைய சம்பவங்களில் போலிசார் தலையிடக்கூடும் என்று குறிப்பிட்டனர்.

#தமிழ்முரசு #தென்கொரியா #கொரோனா #தேவாலயம்