கடிவாளம் பிடிக்கும் ‘காளை’ வரலாறு படைக்கும் நாளை

சனிக்கிழமை ஒரு சாமானியர்

குதிரை என்றால் ஓடவேண்டும்; மலர் என்றால் மணம் பரப்ப வேண்டும்; மனிதன் என்றால் சாதனை படைக்க வேண்டும். இதுவே தன் லட்சியம் என்கிறார் மயிலாடு துறைக்கு அருகே உள்ள மணலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர்.

‘காளை’ என்ற அந்த இளைஞர், சிறு வயதிலேயே தன் தந்தையிடம் தனக்குக் குதிரை வேண்டும் என்று கேட்டவர். இளம்பிள்ளை முதல் குதிரை மீது நாட்டம் கொண்ட காளை, இப்போது குதிரை வண்டி பந்தய (ரேக்ளா) ஓட்டி.

இவர் கறுப்பு என்ற 4 வயது பந்தயக் குதிரையைச் செல்லமாக வளர்த்து வருவகிறார். குதிரைக் குட்டி ஒன்றை காரைக்கால் அருகே உள்ள நெடுங்காடு என்ற ஊரிலிருந்து ரூ.20,000 விலைக்கு வாங்கி வந்து அதற்கு ‘அப்லெக்’ என்று பெயர்சூட்டி பயிற்சி அளித்து வருகிறார் திரு காளை. அப்லெக்கிற்கு வயது இரண்டு.

“அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, மதுரை, காரைக்குடி போன்ற பல பகுதிகளிலும் நடக்கும் ரேக்ளா பந்தயங்களில் கலந்துகொள்கிறேன். என் கறுப்பு பல போட்டிகளில் வென்று இருக்கிறது. பல போட்டிகளில் தோற்றும் இருக்கிறது.

“தமிழ்நாட்டில் ரேக்ளா பந்தயக் கட்டமைப்பு என்பது மிகப் பெரிய ஒன்று. எப்படி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு இருக்கிறதோ அதேபோல, ரேக்ளா பந்தயத்துக்கும் அதிகமான ரசிகர்கள் உண்டு.

“பெரும் பெரும் புள்ளிகள் இந்தப் பந்தயங்களை நடத்துகிறார்கள். ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை பரிசு கிடைக்கும்.

“போட்டியில் வென்றுவிட்டால் அந்த மகிழ்ச்சியைப் போல வேறு எந்த மகிழ்ச்சி யும் கிடையாது. பந்தயக் குதிரையைப் பராமரித்து, வளர்த்து போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவது என்பது இலேசான காரியம் அல்ல.

“ஒரு குதிரையை வளர்ப்பது என்பது கர்ப்பம் முதல் பிரசவம் வரை ஒரு பிள்ளை யைக் காத்து பெற்று எடுப்பதைப் போன்றது.
“மாதம் ஒன்றுக்கு குதிரைக்கு உணவுக்கு மட்டும் ரூ.15,000 வேண்டும்.

“காலையில் ஒரு கிலோ கொள்ளு. நண்பகலில் பீட்ருட், முள்ளங்கி, கேரட் உள்ளிட்ட ஒரு கிலோ காய்கறிகளை வைக்கவேண்டும்.
“முற்பகலில் பேரிட்சை, அவல், முட்டை, நவதானியங்கள் ஆகியவற்றைப் பாலில் ஊறவைத்து அதைக் காய்ச்சி பிறகு அதில் ஹார்லிக்ஸ், பாதம் பருப்பு, பூஸ்ட் சேர்த்து குதிரைக்கு வைக்கவேண்டும்.

“அதேபோல, மாலையில் ஒரு கிலோ கோதுமை, ஒரு கிலோ கொள்ளு உணவாக கொடுக்கவேண்டும். இவற்றோடு நாள் முழுவதும் குதிரை அருகம்புல் சாப்பிடும்.
“மதுரையில் பந்தயம் என்றால் குதிரை யையும் வண்டியையும் குட்டி லாரியில் கொண்டு செல்ல ரூ.8,000 செலவாகும்.
“பந்தயத்துக்கு முன்பு 48 நாட்டு மருந்துகளை வாங்கி இடித்து, புறா மருந்து கலந்து, சேங்கொட்டை மருந்தையும் சேர்த்து குதிரைக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு மட்டும் ரூ.4,500 செலவாகும்.

“குதிரைக்கு லாடம் அடிக்க ரூ.800 கேட்பார்கள். ஆறு மாதத்துக்கு ஒரு தடவை முடி பிடிக்க வேண்டும் (சிகை அலங்காரம்). இதற்கு மொத்தமாக ரூ.1,000 செல வாகும். நாள்தோறும் குதிரையை, வாய் முதல் வால் வரை சுத்தமாகக் கழுவிவிட்டு குளிப்பாட்ட வேண்டும். குளம்புகளை நோண்டி சுத்தம் செய்யவேண்டும்.
“குதிரையைப் பொறுத்தவரை கால்களும் கண்களும்தான் மிக முக்கியம். குதிரைக்கு ராஜா சுழி, மஸ்தகம், நெற்றி சுழி போன்ற 10 சுழிகள் உண்டு. நெற்றி முதல் உடல் முழுவதும் சுழிகள் இருக்கும்.

“அவற்றுக்கேற்பதான் குதிரை வீரியமிக்கதாக இருக்கும். விலையும் சுழிகளைப் பொறுத்துதான் இருக்கும். ஒரு குதிரை 10 முதல் 15 வயதுவரை ஓடும். சாதாரண மாக சொந்த வேலைக்கு நாள்தோறும் 80 கி.மீ. ஓட்டலாம். வயதானாலும் குதிரையை நாங்கள் கடைசி வரை காப்போம்.

“இவ்வளவு அரும்பாடுபட்டு குதிரையைப் பேணி வளர்த்து தயார்படுத்தி என் போன்றவர்கள் உயிரைப் பணையம் வைத்துதான் பந்தயத்தில் கலந்துகொள்கிறோம்.
“60 முதல் 70 கி.மீ. வரை வேகத்தில் பந்தயத்தில் என் கறுப்பு ஓடும். பிரேக் எதுவும் கிடையாது. கடிவாளம்தான் ஒரே கதி. இலேசாக இடது பக்கம் வெட்டினால் மின்னல் வேகத்தில் இடதுபக்கம் குதிரை திரும்பும். அதேபோல, வலது பக்கம் வெட்டினால் வலது பக்கம் திரும்பும்.

“இப்படி குதிரை வண்டி ஓட்டுபவர் சிந்தனையும் குதிரையின் செயலும் ஒரே திசையில் ஒத்து இருந்தால்தான் பந்தயத்தில் வெற்றி பெற முடியும். பாதுகாப்பாக பந்தயத்தில் கலந்துகொள்ளவும் முடியும்.

“ரேக்ளா பந்தயத்தில் எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

“என்னைப் போன்ற பந்தயக் குதிரை வண்டி ஓட்டுநர்களைப் பொறுத்தவரை தமிழரின் வீரமும் பாரம்பரியம்தான் முக்கியம். குதிரைப் பந்தயமும் குதிரைகளும் அழிந்துவிடக்கூடாது. இந்தக் கலாசாரத்தை அழியவிடக்கூடாது. இதற்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப் பணிக்கிறோம். எங்களுக்கு வருமானம் இல்லை, செலவுதான் என்றாலும் மகிழ்ச்சி.

“எவ்வளவு சிரமம் வந்தாலும் இதற்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அடுத்த தலை முறைக்கு இதைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

“இப்போது மும்பையில் இருந்து குதிரை கொண்டு வரப்படுகிறது. ஒரு குதிரை நம் ஊருக்கு வர ரூ.150,000 செலவாகிறது,” என்று திரு காளை கூறியபோது அவருக்கு அருகே நின்றிருந்த அப்லெக் அவற்றை ஆமோதிப்பதைப் போல தலையாட்டியது.

மணலூருக்குச் சென்று காளையைச் சந்தித்தபோது அப்லெக்கிற்கு அவர் ஊசி போட்டுக் கொண்டிருந்தார். அவருடைய வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு குளக்கரையில் கறுப்பு கட்டப்பட்டு கொள்ளு தின்றுகொண்டு இருந்தது.

இன்று கடிவாளம் பிடிக்கும் காளை தன் லட்சியத்தை நிறைவேற்றி நாளை வரலாறு படைப்பார் என்ற நம்பிக்கையுடன் காளை, கறுப்பு, அப்லெக்கிடம் இருந்து விடைபெற்றேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!