வாழ்க்கையே சுமையானாலும் சுமப்பேன்

சனிக்கிழமை ஒரு சாமானியர்

முளைக்கீரையை 15 முதல் 20 நாள்களில் பறிக்கலாம். இது 15 நாள் கீரை என்று தன் தலையில் கூடையில் இருந்த கீரையைப் பற்றி கூறினார் திருவாட்டி ராஜாத்தி.

கீரை, கீரை என்று சாலை­யில் சத்­தம் கேட்­டாலே போதும். பல­ருக்­கும் திரு­வாட்டி ராஜாத்தி வந்­து­விட்­டார் என்­பது தெரிந்­து­வி­டும்.

தலை­யில் மூங்­கில் கூடை, அதன் உள்ளே கீரைக்கட்­டு­கள், காய்­க­றி­கள் சகி­தம் வீட்­டுக்கு வீடு கீரை கீரை என்று குரல் கொடுத்­துக்­கொண்டே நடந்து செல்­லும் அந்த 62 வயது மூதாட்டி ஓரளவுக்குப் பிர­ப­ல­மா­ன­வர்.

மன்­னம்­பந்­தல் என்ற பேரூ­ரைச் சேர்ந்த அந்த மாதுக்கு இரண்டு மகன்­கள், ஒரு மகள். பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பே கண­வர் இறந்­து­விட்­டார்.

ஒரு மக­னுக்­கும் மக­ளுக்­கும் திரு­மணம் ஆகி வேறு இடங்­களில் வசிக்­கி­றார்­கள். கடைசி மக­னுக்கு வயது 35 ஆகி­யும் பெண் கிடைக்­க­வில்லை. திரு­ம­ணம் ஆக­வில்லை.

“எனக்­குத் தெரிந்­தது கீரை, காய்­கறி, வியா­பா­ரம்­தான். வேறு வழி­யில்லை.

“கீரை முளைக்­கும் பரு­வத்­தில் அன்­றா­டம் பிற்­ப­கல் நேரத்­தில் கீரை கொல்லைக்­குப் போய் நானே கீரை பறிப்­பேன். முத­லா­ளி­யும் இருப்­பார். 40 கட்­டு­கள் வரை பறிப்­பேன்.

“முளைக்கீரை என்றால், விதை தெளித்த பிறகு 15 முதல் 20 நாள்களில் பறிக்கலாம்.

“உரி­மை­யா­ள­ரி­டம் கணக்கு சொல்லி­விட்டு, கீரை­யு­டன் வீட்­டுக்குச் சென்று கீரையைத் தண்­ணீ­ரில் அலசி ஈரத்துணி­யில் மூடி வைத்­து­வி­ட­வேண்­டும்.

“இல்லை எனில் காலை­யில் கீரை துவண்டு­வி­டும். யாரும் வாங்­க­மாட்­டார்­கள். கைப்­பிடி அள­வுக்கு ஒரு கட்டு கீரை ரூ.10க்கு வாங்­கு­வேன். ரூ. 20க்கு விற்­கி­றேன். அடுத்த நாள்­தான் முத­லாளிக்­குப் பணத்­தைக் கொடுப்­பேன்.

“கீரையை வீட்­டில் பங்­கீடு செய்து­விட்டு, காய்­கறி பயி­ரி­டு­வோ­ரி­டம் சென்று கத்­தரி, வெண்டை, பீர்க்கை, நார்த்தை, எலு­மிச்சை, பம்­ப­ளி­மாஸ், நெல்­லிக்­காய் உள்­ளிட்ட பல­வற்­றை­யும் எடைக்கு அல்­லது உருப்­படி கணக்­கில் வாங்கி அவற்­றை­யும் வீட்­டுக்­குக் கொண்டு வந்து சேர்க்க பொழுது போய்­வி­டும்.

“சமை­யல் வேலை, சாப்­பாட்டை முடித்­துக்­கொண்டு இரவு 9 மணிக்­குப் படுத்­து­வி­டு­வேன். என் கண­வர் வாங்கி வைத்த குடிசை வீடு இருக்­கிறது. அதில்­தான் வாழ்­கி­றேன்.

“அதி­காலை 5 மணிக்கு எழுந்­து­வி­டு­வேன். இருந்­தால் நீரா­கா­ரம் குடிப்­பேன். இல்லை எனில் வழி­யில் தேநீர் குடித்­துக் கொள்­ள­லாம் என்று கிளம்­பி­வி­டு­வேன்.

“கீரை, காற்­க­றி­களை மூங்­கில் கூடை­யில் வைத்து, அவற்றை ஈரத்துணியால் மூடி, தலை­யில் சும்­மாடு வைத்து, அதன் மேல் கூடை­யைத் தூக்கி வைத்­த­தும் என் கால்­கள் நடக்­கத் தொடங்­கி­வி­டும்.

“தலை­யில் கூடை­யின் எடை அதில் உள்­ள­வற்­றைப் பொறுத்து சுமார் 25 கிலோ எடை வரை இருக்­கும். வெறும் கீரை மட்­டும்­தான் என்­றால் 10 கிலோ எடை­யைச் சுமக்­க­வேண்­டும். காய்­க­றி­களும் இருந்­தால் 25 கிலோ வரை தலை சுமக்­கும். தெருத் தெரு­வாக நடப்­பேன்.

“கொல்­லை­யில் பார்த்து பார்த்து நானே பறிப்­ப­தால் கீரை பூச்சி இல்லாமல் சுத்­த­மாக இருக்­கும். ஆகை­யால் என்­னி­டம் கீரை வாங்க பல­ரும் விரும்­பு­வார்­கள்.

“விற்­ப­தற்கு ஏற்ப நடக்க வேண்­டும். சில நாட்­களில் கிடு­கி­டு­வென விற்று விடும். சில நாள்­கள் மந்­த­மாக இருக்­கும். சரா­ச­ரி­யாக 10 கி.மீ. நடப்­பேன்.

“முளைக்­கீரை, பொன்­னாங்­கண்ணிக் கீரை, மணத்­தக்­கா­ளிக் கீரை முருங்கைக் கீரை, அரைக்கீரை, பச­லைக்கீரை, புளிச்சக் கீரை எனப் பல­வற்­றை­யும் எடுத்து வந்து கேட்பவர்­க­ளுக்குக் கொடுப்­பேன்.

‘‘சில நேரங்­களில் தேங்­காய்­க­ளை­யும் விற்­பேன். வீட்­டுக்­குப் போய்ச் சேரும்­போது மணி பிற்­ப­கல் 2 ஆகி­வி­டும். நடுவே கடை­யில் தேநீர் குடிப்­பேன். சில நாள்­களில் காலை­யில் நான்கு இட்லி சாப்­பி­டு­வேன்.

“கீரை விற்­கா­மல் மீந்­து­விட்­டால், புண்­ணி­ய­மா­வது கிடைக்­கட்­டும் என்று கோயில் யானைக்­குக் கொடுத்­து­விடுவேன். அது தின்­று­வி­டும். கூட்­டிக் கழித்துப் பார்த்­தால் நாள் ஒன்­றுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கிடைக்­கும்.

“வீட்­டுக்குக் கீற்று போடு­வது, உடல்­நிலை சரி­யில்­லா­மல் ­போ­வது போன்­ற­வற்றைச் சமா­ளிக்க மூன்று மாதங்­களுக்கு ஒரு முறை வட்­டிக்­குக் கடன் வாங்க வேண்­டிய நிலை வரும். ரூ.3,000 வரை வாங்கி நாளுக்கு ரூ.100 வீதம் கொடுத்து அடைப்­பேன். கடனைக் கட்டி முடித்­த­தும் மீண்­டும் கடன் வாங்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­படும்.

“என்­னு­டன் வசிக்­கும் என் கடைசி மக­னுக்குப் பெண் கிடைக்­க­வில்லை. அதுவே அவ­னுக்­குக் கவலை. எனக்கும் கவ­லை­,” என்­றார் திரு­வாட்டி ராஜாத்தி.

இந்த மாதை மயி­லா­டு­துறை வீதி ஒன்­றில் சந்­தித்­த­போது, “வாழ்க்கையே சுமை­தான் என்று அவர் கூறி­னார்.

‘‘பல­ருக்­கும் வாழ்க்கை வாழ்­வ­தற்­காக அமைந்து விடு­கிறது. ஆனால், என்­னைப் பொறுத்­த­வரை ஒரு­பு­றம் நெஞ்­சில் சுமை, மறு­பு­றம் தலை­யில் சுமை என்று என் வாழ்க்­கையே சுமை­யா­கி­விட்­டது.

‘‘என் பிள்­ளை­கள் எல்­லாம் சம்­பா­தித்துத் தரும் அள­விற்கு அவ்­வளவு வச­தி­யாக இல்லை. ஆகை­யால், கடைசி வரை உழைத்துப் பிழைக்க வேண்­டிய நிலை­யில்­தான் இருக்­கி­றேன்.இதற்­காக நான் ஒரு நாளும் கவலைப்­படு­வ­தில்லை. கவ­லைப்­ப­டப் போவ­தும் இல்லை.

“என்­ மனச் சுமையை ஒப்­பிடும்­போது, தலைச் சுமை எனக்கு ஒரு சுமை­யா­கவே தெரி­ய­வில்லை. அது சுகமான சுமை­யாகிவிட்­டது,” என்று சொல்­லி­ய­ப­டியே, கீரை கீரை எனக் கூவியபடியே நகர்ந்­தார் அந்த மாது.

அவர் போனதையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, உழைத்துப் பிழைப்பதை நோக்கமாகக்கொண்ட அந்த மாது, உண்மையிலேயே பெயருக்குத் தகுந்தாற்போல் ராஜாத்திதான் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது.

நாள்தோறும் சுமார் 25 கிலோ எடையுடன் சராசரியாக 10 கி.மீ. நடக்கிறேன். நாள் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கிடைக்கும். இப்போதெல்லாம் நான் சுமக்கும் சுமை, சுகமான சுமையாகிவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!