ஈஸ்வரன் கைது தொடர்பில் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கூடுதல் தகவல்களை நாடியது: சான் சுன் சிங்

போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் விசாரணைக்குத் துணைபுரிந்து வருவதாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு முதன்முதலில் தெரிவித்தபோது அவர் கைதான விவரத்தை வெளியிடவில்லை என்று பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் திரு சான் சுன் சிங் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து புலனாய்வுப் பிரிவு இன்னும் பல உண்மைகளைக் கண்டறியவும், அவரது தரப்பைக் கேட்கவும் விரும்பியது இதற்குக் காரணம் என்றும் அவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்தார்.

திரு ஈஸ்வரன் விசாரணைக்குத் துணைபுரிந்து வருவதாக ஜூலை 12ஆம் தேதி புலனாய்வுப் பிரிவு அறிவித்தது.

ஆனால், திரு ஈஸ்வரனும் ஹோட்டல் புராப்பர்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஓங் பெங் செங்கும் ஜூலை 11ஆம் தேதி புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட விவரத்தை இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் வெளியிட்டது.

இதன் தொடர்பில் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த திரு சான், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட சட்டச் செயலாக்க அமைப்புகள், விசாரணைக்கு உட்படுவோரின் அல்லது கைதானோரின் பெயர்களை வழக்கமாக வெளியிடுவதில்லை என்றும், அதற்கு “ஏற்புடைய காரணங்கள்” இருப்பதாகவும் கூறினார்.

“ஒருவரை விசாரித்து, கைது செய்து, புலனாய்வு செய்யும்போது, அவர் கைது செய்யப்பட்டதையும் புலனாய்வு மேற்கொள்ளப்படுவதையும் உடனடியாக அறிவித்தால், அவருக்கு எதிராக பாரபட்சம் ஏற்படக்கூடும்,” என்றார் கல்வி அமைச்சருமான திரு சான்.

புலனாய்வுக்குப் பிறகு அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாவிட்டாலும், அவர் தவறு செய்திருக்கிறார் என்ற எண்ணம் உருவாகும்.

“எனவே, சம்பந்தப்பட்டவர்கள் நியாயமாக நடத்தப்படுவதற்காக, புலனாய்வு செய்யப்படுவோரின் பெயர்களை சட்டச் செயலாக்க அமைப்புகள் பொதுவாகவே உடனடியாக வெளியிடுவதில்லை,” என்றார் அவர்.

ஆனால் இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர் ஓர் அமைச்சர் என்பதால், திரு ஈஸ்வரன் விசாரணைக்குத் துணைபுரிவதை சென்ற மாதம் 12ஆம் தேதி வெளியிட புலனாய்வுப் பிரிவு முடிவு செய்ததாகத் திரு சான் கூறினார்.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொள்ள பிரதமரின் அனுமதி தேவையில்லை

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு பிரதமரின் உடன்பாடு தேவையா என்றும் உத்தேசக் குற்றங்கள் கண்டறியப்படும்போது விசாரணை தொடங்குவதற்கு பிரதமரிடம் அனுமதி பெறப்படவேண்டுமா என்றும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியோங் மன் வாயும், செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு லூயிஸ் சுவாவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

புலனாய்வுப் பிரிவு பிரதமருடன் நேரடித் தொடர்பில் இருந்தாலும், அதற்கு “செயல்பாட்டுச் சுதந்திரம்” உள்ளது என்றும் விசாரணைகள் மேற்கொள்ள பிரதமரின் அனுமதி தேவையில்லை என்றும் திரு சான் பதில் கூறினார்.

“இந்த விவகாரம் அமைச்சர் சம்பந்தப்பட்டது என்பதால், பிரதமரிடம் தெரியப்படுத்தி, அமைச்சர் ஈஸ்வரனுக்கு எதிராக முறைப்படி விசாரணையைத் தொடங்க அவரது உடன்பாட்டை புலனாய்வுப் பிரிவு நாடியது,” என்று அவர் விளக்கமளித்தார்.

புலனாய்வுப் பிரிவின் அறிக்கை கிடைத்து ஒரு நாளுக்குள் பிரதமர் லீ சியன் லூங் அனுமதி அளித்ததாகவும் திரு சான் தெரிவித்தார். அரசமைப்புச் சட்டத்தின்கீழ், பிரதமர் உடன்பட மறுத்தால், புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் நேரடியாக அதிபரிடம் சென்று, அதிபரின் அனுமதியை நாடலாம். ஆனால், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் பணிக்கு எந்தப் பிரதமரும் தடையாக இருந்ததில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

புலனாய்வுப் பிரிவின் இயக்குநரின் நியமனத்திற்கு அல்லது நீக்கலுக்கு அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார். இயக்குநரை நியமிப்பதற்கு அல்லது நீக்குவதற்கு அதிபரின் உடன்பாடு தேவை.

அரசாங்கச் சேவையின் நன்னடத்தை கோட்பாடு பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த திரு சான், அரசாங்கச் சேவையின் கண்ணியத்தையும் உயர் தரத்தையும் உறுதிப்படுத்த குறிப்பிட்ட கால இடைவெளியில் கோட்பாடு புதுப்பிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அதிகாரிகள் எப்போதுமே அதிகாரபூர்வத் தகவலின் இரகசியத்தன்மையையும், அரசாங்கச் சேவையின் அரசியல் பாகுபாடின்மையையும் பாதுகாக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!