சக கட்டுமான ஊழியரை குடிபோதையில் தள்ளிவிட்ட இந்திய ஊழியருக்குச் சிறை

குடிபோதையில் தள்ளாடி கீழே விழுந்ததைக் கவனிக்காமல் கைபேசியில் காணொளி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த சக வெளிநாட்டு ஊழியர் மீது ஆத்திரம் கொண்ட இந்திய ஊழியர், தனக்கு உதவாத அந்த ஊழியரை சாக்கடைக்குள் தள்ளினார்.

அதில் சாக்கடைக்குள் விழுந்தவருக்கு பாதம், தலையில் அடிபட்டது. காயமடைந்தவர் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 32 வயது ஆடவர். 

கண்மூடித்தனமான செயலால் கடும் காயம் விளைவித்ததற்காக  35 வயது முத்து நடராஜனுக்கு ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கட்டுமானத் துறையில் பணியாற்றும் இவ்விருவரும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி எண் 9 தாகூர் லேன் என்ற முகவரியில் இருந்தனர்.

தனது அறையிலிருந்து வெளியில் வந்த முத்து பங்ளாதேஷி ஆடவரின் அருகில் அமர்வதற்காக அவருக்கு அருகில் வந்தார்.

ஆனால், குடிபோதையில் இருந்த முத்து தவறி கீழே விழுந்தார். அதனை பங்ளாதேஷ் ஊழியர் கவனிக்கவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

தட்டுத் தடுமாறி எழுந்த முத்து, பங்ளாதேஷ் ஊழியரிடம் தனக்கு உதவாதது குறித்து வாக்குவாதம் செய்தார். 

அங்கிருந்த சாக்கடைக்கு அருகில் கான்கிரீட் பாளம் ஒன்றின்மீது அமர்ந்திருந்த பங்ளாதேஷ் ஊழியரின் மார்பில் இரு கைகளையும் வைத்து தள்ளினார் முத்து.

பின்புறமாக விழுந்த பங்ளாதேஷ் ஊழியர் சாக்கடைக்குள் விழுந்தார். ஆனால், அங்கிருந்து அவர் வெளியேற முத்து உதவவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சாக்கடைக்குள் விழுந்த ஊழியர் மயக்கமுற்றார். சில நிமிடங்களுக்குப் பிறகு சுய நினைவை அடைந்த அவருக்கு அந்த வழியாகச் சென்றவர்கள் உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

போலிசுக்கு தகவல் அளித்த பிறகு, அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரது கால் விரல்களில் முறிவு ஏற்பட்டிருந்தது. தலையிலும் பாதத்திலும் காயம் இருந்தது.

அவரது முதுகில் அடிபட்டிருந்ததால் அவரது கழுத்தை முழுமையாகத் திருப்ப முடியாத அளவுக்கு வலி இருந்தது.

14 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்த அவர், முதுகு வலிக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தன்னைப் பிரதிநிதிக்க யாரும் இல்லாத நிலையில், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் இந்தக் குற்றத்தைப் புரிந்துவிட்டதாக முத்து நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

மேலும், தனக்கு ஒரு மனைவியும் இரண்டு இளம் குழந்தைகளும் இருப்பதாகக் கூறிய முத்து, தாம் குற்றம் புரிவது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும் என்று நீதிமன்றத்தில் கைகூப்பி வணங்கி கேட்டுக்கொண்டார்.

கண்மூடித்தனமான செயலால் கடுமையான காயம் விளைவித்ததற்கு முத்துவுக்கு நான்காண்டுகள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் ஆகியன விதிக்கப்பட்டிருக்கலாம்.

#ஊழியர் #வெளிநாட்டு #குடிபோதை #தமிழ்முரசு