கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் காரணமாக அனைத்துலக எல்லைகள் வெகுகாலமாக மூடப்பட்டிருந்ததால், தங்களது அன்புக்குரியவர்களைச் சந்திக்க முடியாத நிலைக்கு ஏராளமானோர் தள்ளப்பட்டுள்ளனர்
அத்தகையோரில் ஸ்காட் புஸ்டபட் - கூ சூ ரெய் தம்பதியும் அடங்குவர். அமெரிக்கரான திரு புஸ்டபட், கிட்டத்தட்ட ஈராண்டுகளாக குமாரி கூவைவிட்டுப் பிரிந்திருந்தார். ஆனால், நேற்று முன்தினம் வியாழக்கிழமை (அக்டோபர் 28) இத்தம்பதிக்கு விடிவுகாலம் பிறந்தது.
அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் (vaccinated travel lane) அண்மையில் தொடங்கப்பட்டது. அதையடுத்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை திரு புஸ்டபட் சிங்கப்பூர் வந்திறங்கினார்.
ஆனால், இவரது வருகை பற்றி குமாரி கூவுக்குத் தெரியாது. குமாரி கூவுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதற்காக, அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து திரு புஸ்டபட் திட்டமிட்டார்.

சிங்கப்பூர் வந்தவுடன் கரையோரப் பூந்தோட்டத்திற்குச் சென்றார் திரு புஸ்டபட், 34. குமாரி கூவை அவரது நண்பர் அங்கு அழைத்து வந்தார்.
புகைப்படங்கள் எடுப்பதற்காக ‘ஓசிபிசி ஸ்கைவே’யில் உள்ள நடைபாதையைத் தாம் முன்பதிவு செய்ததால் பொதுமக்களுக்கு அது மூடப்படுவதாக அந்த நண்பர் குமாரி கூவிடம் கூறினார்.
குமாரி கூவுக்கு காத்திருந்தது ஓர் ஆச்சரியம். அங்கு வந்த திரு புஸ்டபட், ஒரு காலை மடக்கி முட்டி போட்டு, “என்னைத் திருமணம் செய்துகொள்வீரா?” என்று குமாரி கூவிடம் கேட்டார்.
தம் காதலன் திடீரென தம் முன்னால் வந்து நின்றது குமாரி கூவுக்கு ஒரே திகைப்பு. இது கனவல்ல, நிஜம் என்பதை உணர்ந்தவுடன், “ஆமாம்” என்றார் இவர்.
இவர்களது இந்த மறக்கமுடியாத சந்திப்பு, இருவரும் பிரிந்திருந்த காலத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது.
மலேசியாவில் பிறந்து வளர்த்த குமாரி கூ, 26, பல்கலைக்கழகக் கல்விக்காக அமெரிக்கா சென்றிருந்தார். 2017ல் இவர் மலேசியா திரும்பவிருந்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
கணக்கியல் மேலாளராகப் பணிபுரியும் குமாரி கூ, பணிக்காக சிங்கப்பூர் வந்தார். இரு காதலர்களும் ஒருவரையொருவர் சந்தித்தனர். ஆனால், நாட்டு எல்லைகள் மூடப்பட்ட பிறகு, இருவரும் பிரிந்திருக்க வேண்டியிருந்தது.