தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம்: இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் சேர்க்கப்படுவது பாதுகாப்பானதா என்ற கேள்வி

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டத்தில் மொத்தம் 11 நாடுகள் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றன.
இதன் விளைவாக அதிகமான பயணிகள் சிங்கப்பூருக்கு வருவார்கள். அதேபோல் வெளிநாடுகளுக்கும் சிங்கப்பூரர்கள் செல்ல முடியும்.
அந்த 11 நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டனும் அடங்கும். இந்த இரண்டு நாடுகளிலும் அன்றாடத் தொற்றும் மரணங்களும் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகின்றன.
தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அந்த இரண்டு நாடுகளிலும் சிங்கப்பூரைவிட குறைவு. இருந்தாலும், அந்த நாடுகளில் இருந்து மக்கள் இங்கு வரவும் இங்கிருந்து அங்கு செல்லவும் சிங்கப்பூர் அனுமதிக்கிறது.
ஆனால், இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படாத மலேசியா, இந்தோனீசியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டனைவிட தொற்று குறைவாக பதிவாகி வருகிறது.
ஆகையால், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டத்தில் சேரும் அளவுக்கு மலேசியா, இந்தோனீசியா, இந்தியா உள்ளிட்டவை அமெரிக்கா, பிரிட்டனைப்போல் பாதுகாப்பானவைதானா என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சுகாதாரத் துறை மூத்த செய்தியாளர், கட்டுரை ஒன்றில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டம் இரு நாடுகளுக்கு உட்பட்ட உடன்பாட்டின் அடிப்படையிலானது என்பதால் இதேபோன்ற பயண நிபந்தனைகளுக்கு அந்த நாடுகளும் உட்பட வேண்டிய நிலை இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தடுப்பூசி அளவு, தொற்று அளவு, இந்தப் பயண ஏற்பாட்டில் கலந்துகொள்ள நாட்டம் ஆகியவை மட்டுமின்றி, ஒரு நாட்டின் நிர்வாக முறை, தொழில்நுட்பமுறை ஆகியவற்றின் ஆற்றலும் நம்பகத்தன்மையும் இந்தப் பயண ஏற்பாட்டில் சேர முக்கிய பங்காற்றுவதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.