தடுப்பூசிப் பயணத்தடம் சிங்கப்பூருக்கு முக்கிய மைல்கல், ஆனால் வெளிநாட்டுப் பயணம் படிப்படியாகத்தான் மீளும்

மேலும் பல நாடுகளுக்கு தடுப்பூசிப் பயணத்தடம் விரிவுபடுத்தப்படுவதாக இம்மாதம் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஐயான் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் உள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவை மையத்திற்குப் பொதுமக்கள் படையெடுத்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பதினொரு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்காக தடுப்பூசிப் பயணத்தடம் (Vaccinated Travel Lane) தொடங்கப்பட்டு, தற்போது 10 நாடுகளுடன் அத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
எனினும், வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் இங்கு சுற்றுப்பயணத்துறை குறுகியகாலத்திலேயே மீண்டெழுவதற்கான சாத்தியம் குறைவு.
அனைத்துலகப் பயணங்கள், குறிப்பாக தொலைதூரப் பயணங்கள் படிப்படியாகத்தான் மீட்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதே அதற்குக் காரணம் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
“புதிய பயண விதிமுறைகளுக்கு காலப்போக்கில் பயணிகள் பழகிவிடுவர். அத்தோடு, பயண நடைமுறைகளும் சுமுகமாகிவிட்ட பிறகு, பயணங்கள் அதிகரிப்பதை நாம் எதிர்பார்க்கலாம். அப்போது, தடுப்பூசிப் பயணத்தடம் வழக்கமான ஒன்றாகிவிடும்,” என்றார் திரு டான்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், இந்தப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வந்திறங்கிய பிறகு இங்கு குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை. மாறாக, புறப்பாட்டிற்கு முன்பும் சிங்கப்பூர் வந்திறங்கிய பிறகும் அவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது.
தற்போது, 10 நாடுகளுடன் தடுப்பூசிப் பயணத்தடம் நடப்பில் உள்ளது. ஜெர்மனி, புருணை, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, டென்மார்க், கனடா, பிரான்ஸ் ஆகியன அவை.
சிங்கப்பூரிலிருந்து வருவோருக்கு புருணையைத் தவிர்த்து, மற்ற ஒன்பது நாடுகளும் தங்களது எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளன. இதனால், தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி சிங்கப்பூருக்கும் அந்த ஒன்பது நாடுகளுக்கும் இடையே பயணம் செய்யலாம். புருணையிலிருந்து பயணிகள் சிங்கப்பூர் வந்திறங்கியவுடன், அவர்கள் இங்கு தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை.
இந்நிலையில், நவம்பர் 15ஆம் தேதி தென்கொரியாவுடன் தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்குகிறது.
2019ல் சிங்கப்பூருக்கு வந்த மொத்த பயணிகள் எண்ணிக்கையில், மேற்கூறப்பட்ட அந்த 11 நாடுகளிலிருந்து வந்தோர் 20 விழுக்காட்டிற்கும் குறைவு என்று சிங்கப்பூர் ஹோட்டல் சங்கம் தெரிவித்தது.
சீனா, இந்தோனீசியா, இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தே அந்த ஆண்டு சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணிகள் அதிகம் வந்தனர்.