ஜூரோங்கில் உள்ள வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் கொவிட்-19 கிருமித்தொற்று விவகாரத்தில் குழப்பமும் அதிருப்தியும் அடைந்த வெளிநாட்டு ஊழியர்கள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அக்டோபர் 13ஆம் தேதி நிகழ்ந்தது.
அதுபற்றி இன்று திங்கட்கிழமை (நவம்பர் 1) நாடாளுமன்றத்தில் மேல்விவரம் அளித்த உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், அச்சம்பவத்தில் கைது நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்றார்.
அன்றைய தினம், ஜூரோங் போலிஸ் பிரிவின் சுற்றுக்காவல் அதிகாரிகள் அந்த விடுதிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அதற்கு முன்னதாகவே மனிதவள அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்களிடம் சமரசம் செய்துகொண்டிருந்தனர் என்று திரு டான் விளக்கினார்.
விடுதி நடத்துநர்களின் ஒத்துழைப்புடன் ஊழியர்களின் அமைதியின்மை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
