வாழ்க்கைத்தரம் ஏற்றம், வாக்குறுதிகள் நிறைவேற்றம்: தனலெட்சுமி

2 mins read
1380a694-ac47-481a-8ce2-8647bbf34b3b
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தின் மேடையில் (இடமிருந்து) என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், பிரதமர் லீ சியன் லூங், என்டியுசி தலைவர் கே.தனலெட்சுமி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான அரசாங்கம், ஊழியர்களின் தேவைகளையும் அக்கறைகளையும் கையாண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) தலைவர் கே.தனலெட்சுமி பாராட்டியுள்ளார்.

சாதாரண ஊழியர்களின் சூழ்நிலையை திரு லீ புரிந்துகொள்பவர் என்றும் ஊழியர்களின் நலன் குறித்து தொழிற்சங்கத் தலைவர்களிடம் அவர் அடிக்கடி விசாரிப்பவர் என்றும் குமாரி தனலெட்சுமி குறிப்பிட்டார். 

மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (மே 1) மே தின உரை ஆற்றிய திரு லீ, சிங்கப்பூரின் முத்தரப்புப் பங்காளித்துவக் கொள்கை குறித்து நடந்தவற்றையும் நடக்கவிருப்பவற்றையும் பற்றிப் பேசியதாக குமாரி தனலெட்சுமி தமிழ் முரசிடம் கூறினார். 

மூத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கவாதியாகவும் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியரணித் தலைவராகவும் பல ஆண்டுகளாக செயலாற்றிவந்த குமாரி தனலெட்சுமி, தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் புதிய தலைவராக கடந்த ஆண்டு நவம்பர் 23ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நீடித்துவரும் தம் அரசியல் பயணத்தில் ஊழியர்களின் சம்பளம், வேலையிட உரிமைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்த என்டியுசியுடன் பல வழிகளில் இணைந்து பிரதமர் செயல்பட்டுள்ளார்,” என்றார் குமாரி தனலெட்சுமி.

சுகாதாரத் துறை ஊழியர்களுக்காக 33 ஆண்டுகளாகக் குரல்கொடுத்து வந்த குமாரி தனலெட்சுமி, சுகாதாரத் துறை ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் இங் டெங் ஃபோங் மருத்துவமனையின் பணித்திட்டம் ஒன்றை மற்ற மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்த இயலுமா என பிரதமர் லீ தம்மிடம் நேரடியாக கேட்டதாகவும் கூறினார்.

“ஊழியர்கள் மீது லீ மிகுந்த அக்கறை கொண்டுள்ளதை அப்போது நான் உணர்ந்தேன்,” என்றார் குமாரி தனலெட்சுமி. 

மூத்த தொழிற்சங்கத் தலைவர்களுடன் திரு லீ நல்ல நட்பைப் பாராட்டுகிறார். இளம் தலைவர்களுக்கு அவர் நல்ல ஆதரவாளராகவும் ஆலோசகராகவும் இருப்பதாக குமாரி தனலெட்சுமி கூறினார்.

“திரு லீயின் சிறப்பான தலைமைத்துவம் காலம் கடந்தும் நிற்கும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்