தலைமுறை தலைமுறையாக தமிழ் முரசு

காலம் மாறுகிறது. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சின் செய்தித்துறையும் மாற்றம் காண உள்ளது. இந்த மாற்றம் சாத்தியமானால், அச்சு ஊடகம் ஒரு பக்கம், மின்னிலக்க ஊடகம் மறுபக்கம் என நாணயத்தின் இரு பக்கங்களாக தமிழ் முரசின் செயல்பாடு முனைப்பு பெறும். தலைமுறை தலைமுறையாக சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்துக்கு தமிழ் முரசின் சேவை தொடர்வது வலுவாக உறுதிப்படுத்தப்படும்.

தமிழ் முரசும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) குழுமத்தில் உள்ள மற்ற செய்தித்தாள்களும் புதிய லாபநோக்கற்ற உத்தரவாத நிறுவனத்தின் அங்கமாகின்றன. எஸ்பிஎச் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இது சாத்தியப்படும்.

சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசின் 85 ஆண்டு கால வரலாற்றில் மாற்றம் என்பது புதிதானதல்ல. முரசின் ஏற்ற இறக்கங்களைக் கொண்டது.

கடந்த 63 ஆண்டுகளாக தமிழ் முரசில் பணியாற்றி வரும் மூத்த ஊழியரான திரு எம்.நடராஜன் கூறுவதைப்போல, காலத்துக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து, தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்பதால்தான் சிங்கப்பூரின் தமிழ் நாளிதழாக தமிழ் முரசு நிலைத்து நிற்கிறது.

தமிழ் முரசு நிறுவனரான கோ. சாரங்கபாணி ஆசிரியராக இருந்த காலத்தில், 1958ல் எழுத்துகளை ஒவ்வொன்றாகக் கோத்து, அச்சு எடுக்கும் பணியில் சேர்ந்தவர் திரு நடராஜன். தமிழ் முரசு கணினி முறைக்கு மாறியபோது கணினியில் பதிவேற்றக் கற்றுக்கொண்டார்.

செய்தி எழுதுவதுடன் காணொளி எடுப்பது, சமூக ஊடகங்களில் பதிவிடுவது என்று தற்போது செய்தியாளரின் பணி புதிய பரிணாமம் எடுத்துள்ளது. இதில் தமிழ்ச் செய்தியாளரின் பணி மேலும் சவாலானதாகவும் மொழி பெயர்பு உள்ளிட்ட பலதிறன் தேவைப்படுவதாகவும் ஆகியுள்ளது.

தொழில்நுட்பப் பயன்பாடு தமிழ் முரசின் பரப்பையும் வீச்சையும் மேலும் விரிவாக்குகிறது.

போட்டித்தன்மைமிக்க இன்றைய சூழலில் தமிழ் முரசு தொடர்ந்து மேம்படவும் நிலைத்திருக்கவும் புதிய நிறுவன அமைப்பு வகைசெய்யும்.

1935ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் இதழாக மலர்ந்தது தமிழ் முரசு.

சில மாதங்களிலே செய்தித்தாளை கைவிட சங்கம் முடிவு செய்தபோது, அதன் ஆசிரியராக இருந்த கோ.சாரங்கபாணி தாமே நடத்த முன்வந்தார்.

ஒரு காசு விலையில் வார இதழாக அறிமுகம் கண்ட முரசு, ஒரே ஆண்டில், பெரிய அளவில் எட்டு பக்கங்களுடன் மூன்று காசு விலையில் வெளிவரத் தொடங்கியது.

அதற்கடுத்த ஆண்டே, 1937ல் நாளிதழானது. குறுகிய காலத்துக்குள்ளாகவே இந்த வட்டாரத் தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கியது. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பல்லாயிரம் வாசகர்களைப் பெற்று, சமூகத்தின் வளர்ச்சியிலும் மாற்றத்திலும் முக்கிய பங்கை ஆற்றியது.

தமிழவேள் கோ.சாரங்கபாணி முன்னெடுத்த சமூக சீர்த்திருத்த, சமூக முன்னேற்றப் பணிகளுக்கான முக்கிய ஊடகமாக ஏறக்குறைய 40 ஆண்டுகள் செயல்பட்டது. 1974ல் கோ.சாரங்கபாணியின் மறைவுக்குப் பின் அவரது பிள்ளைகள் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தினாலும் இத்தொழில் அனுபவமில்லாத அவர்கள் திணறினர்.

தமிழ் முரசின் எதிர்காலத்தை உறுதிசெய்ய, 1995ஆம் ஆண்டு சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் தமிழ் முரசை வாங்கியது.

தமிழ் முரசு 1990களில் இருந்தே இணையத்தில் செய்திகளைப் பதிவேற்றி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் துடிப்புடன் மக்களுடன் இணைந்துள்ளது. 2018லிருந்து தமிழ் முரசின் இணையப் பக்கம் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்டது.

காலத்துக்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் செய்திகளையும் சமூகத்திற்குத் தேவையான தகவல்களையும் வழங்க அச்சு ஊடகத்திற்கு அப்பாலும் தமிழ் முரசு செயல்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டகிராம், டுவிட்டர், டிக்டாக் போன்ற வெவ்வேறு சமூக ஊடக தளங்களிலும் தமிழ் முரசு தடம் பதித்து வருகிறது.

சங்கப் பத்திரிகையாகப் பிறந்து, தனிமனிதரின் முயற்சியில் வளர்ந்து, பெரும் ஊடக குழுமத்தில் இணைந்து தமிழ்ச் சமூகத்தின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் தமிழ் முரசு இப்போது அடுத்த அடியை எடுத்துவைத்திருக்கிறது.

அச்சுப் பிரதியாகவும் மின்னிதழாகவும் சமூக ஊடகங்களிலும் முரசின் குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க புதிய ஏற்பாடு வகைசெய்யும். எனினும் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் சாத்தியமாக்குவது வாசகர்கள் கைகளில் உள்ளது.

மேடு பள்ளங்களைக் கொண்ட தமிழ் முரசின் நீண்ட பயணத்தில் தலையானதும் நிலையானதுமாகத் திகழ்வது தமிழ் மக்களின் ஆதரவு. இந்தத் தொடர்ச்சியான ஆதரவுடன், நூற்றாண்டைக் கடந்தும் முரசு கொட்டும்.

இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் நடப்பு விவகாரங்களை தமிழில் எடுத்துச் சொல்லும் ‘முரசு பிஸ்ட்ரோ’ எனும் கலந்துரையாடல் தொடரை தமிழ் முரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.

முரசின் இணையப் பக்கத்திலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பதிவேற்றம் கண்ட இந்த ஆறு பாக காணொளித் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்தொடரை நெறிப்படுத்திய செய்தியாளரான இர்ஷாத் முஹம்மது வாசகர்களை ஈர்க்க தற்போது செய்தியாளர்கள் எழுத்தாற்றல், மொழியோடு தொழில்நுட்பத் திறன்களும் புதுப்புது ஊடகங்கள் குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும் என்றார்.

பாலர்களுக்கு ‘பாலர் முரசு’, மாணவர்களுக்கு ‘மாணவர் முரசு’, இளையர்களுக்கு ‘இளையர் முரசு’, சமூகச் செய்திகளைத் தனித்து வழங்கும் ‘சமூகப் பக்கம்’ என்று அவரவருக்குத் தேவையான செய்தி களையும் தகவல்களையும் வழங்குகிறது தமிழ் முரசு.

இவை அச்சுப் பிரதியிலும் இணையத்திலும் இடம்பெறுகின்றன. இணையத்தில் செய்திகளோடு காணொளிகள், படங்கள் என பல்வேறு வழிகளில் செய்திகளை வழங்குகிறது முரசு. அறிவுறுத்தல், மகிழ்வூட்டல், மேம்படுத்தல் ஆகியவற்றுடன் இந்நாட்டில் தமிழ் மொழிப் புழக்கத்துக்கும் தமிழ் முரசு தலையாய பங்கை ஆற்றி வருகிறது.

முரசு வாசகரான 61 வயது திருமதி லோகாம்பாள், இன்று வரை அச்சுப்பிரதியைப் படிப்பவராக இருந்தாலும் அண்மைய ஆண்டுகளில் யூடியூப் செய்திகளையும் பார்க்கிறார். வருங்கால சந்ததியினரை ஈர்ப்பதற்கு மின்னலக்க உலகில் தமிழ் முரசு தடம் பதிக்க வேண்டும். இளையர்கள் மின்னிலக்க ஊடகங்களையே விரும்புகின்றனர் என்பது இவரது கருத்து. ஃபேஸ்புக் தளத்தில் தமிழ் முரசு செய்திகளைப் படிக்கும் அரசாங்க ஊழியரான 43 வயது மகள் திருமதி க.கார்த்திகாவுக்கு செய்திகள் பற்றிய அவரது கருத்துகளை உடனுக்குடன் பதிவிட வாய்ப்புக் கிட்டி உள்ளது. மாணவர் முரசில் வினா விடைகள், தமிழ் மொழி புதிர்கள் என்று சிந்தனையைத் தூண்டும் நடவடிக்கைகளை விரும்பும் உயர்நிலை 2 மாணவியான பேத்தி க.ஹர்‌ஷினியை (இடதுகோடி) யூடியூப், டிக் டாக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் சுருக்கமாக, நகைச்சுவை பாணியில் இடம்பெறும் செய்திகள் ஈர்க்கின்றன. அருகில் தொடக்கப்பள்ளியில் பயிலும் சகோதரர் க.‌‌ஷர்வின். செய்தி: எஸ்.வெங்கடேஷ்வரன்

சிங்கப்பூரர்களுக்காகச் செய்திகளை வெளியிடுகின்ற, சிங்கப்பூரர்களை செய்தியாளர்களாகக் கொண்ட, உயர்தரமிக்க, நிபுணத்துவமிக்க, மரியாதைக்குரிய ஊடகம் நாட்டின் அடிப்படை அமைப்பிற்கு அவசியமானது. உயர்தரமான உள்ளூர் ஊடகம் இல்லாவிட்டால், நாட்டின் பொது விவாதங்கள் பாதிப்படையும். உள்ளூர் செய்தி ஊடகம் சிங்கப்பூரர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நம்பத்தகுந்த நிறுவனங்களாக தொடர்ந்து இருந்து வரவேண்டும் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது.
அமைச்சர் எஸ். ஈஸ்வரன்
தமிழ் முரசு மற்றும் மலாய், சீன நாளிதழ்கள் வெவ்வேறு சமூகங்களின் தனித்தன்மையான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஒவ்வொரு சமூகத்தின் ஆர்வங்களும் அக்கறைகளும் முக்கியத்துவங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்தப் பத்திரிகைகள் சிறியளவிலான மக்களுக்கு சேவையாற்றுகின்றன. ஆனால் நாட்டு நிர்மாணத்திலும் அவை முக்கிய பங்குவகிக்கின்றன. எனவே, தற்போதுள்ள நிறுவன அமைப்பு முறையைப்போல் எப்பொழுதும் லாபத்தைப் பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருக்க முடியாது.
கோ பூன் வான்
எஸ்பிஎச் ஊடக அறநிறுவன தலைவர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!