சிங்கப்பூர் முதலாளி தந்த இன்ப அதிர்ச்சி

குடும்ப வறுமை காரணமாக சிங்கப்பூரில் கடுமையாக உழைத்த திரு மாரிமுத்து, பதினேழு ஆண்டுகளுக்குப்பின் தமது திருமணத்திற்காக ஊர் திரும்பினார். 

இருபது வயதில் நிலத்தை அடைமானம் வைத்து, நால்வர் கொண்ட குடும்பத்தைக் கரையேற்ற இங்கு வந்தவர், மூத்த சகோதரிகள் இருவருக்கு திருமணம் முடித்து, கடன்களை அடைத்தபின், தமது வாழ்க்கையைத் தொடங்கவுள்ளார். 

2006ஆம் ஆண்டு ‘லக்கி ஜாயிண்ட்’ எனும் கட்டுமான நிறுவனத்தில் கட்டுமான ஊழியராக இணைந்ததிலிருந்து ஒருநாள்கூட ஆண்டு விடுப்பும் மருத்துவ விடுப்பும் எடுக்காமல் திரு மாரிமுத்து பணிபுரிந்தது அவருக்கு உயர்வைப் பெற்றுத் தந்தது.

அதன் உச்சமாக, சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளையில் இவ்வாண்டு பிப்ரவரியில் திரு மாரிமுத்தின் திருமணம் நடந்தபோது அவரது முதலாளியான ‘லக்கி ஜாயிண்ட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கெல்வின் இயாவ் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தி இன்ப அதிர்ச்சியளித்தார். 

இவருடன், லக்கி ஜாயிண்ட் நிறுவனத்தின் நிர்வாக பிரிவின் துணை நிர்வாகி திரு ரா. சாமுடியும், நிர்வாகி திரு ஜெ. ஜென்கின்னும் துணையாக சென்றிருந்தனர். 

திரு மாரிமுத்துவின் அளவுகடந்த அர்ப்பணிப்புக்கு சிறு அன்பளிப்பாக மணமக்கள் இருவருக்கும் தங்க சங்கிலிகள் அணிவித்தார் திரு இயாவ்.

பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து திரு இயாவ் தாலி எடுத்துக் கொடுக்க, திரு மாரிமுத்து திருமணம் செய்துகொண்டார். முதலாளிக்கென அவர் செய்திருந்த தடபுடலான ஏற்பாடுகள் சமூக ஊடகங்களில் பரவலானது.

குதிரை வண்டியில் மாப்பிள்ளை அழைப்பு, வாழை இலையில் தமிழர் பாரம்பரிய உணவு, கோயிலில் நடந்த  எளிய திருமணம் ஆகியவற்றுக்கு  அறிமுகமானார் முதன்முறையாக இந்தியா சென்ற திரு இயாவ்.

“பந்தியில் அமர்ந்து ஊர்க்காரர்களுடன் பாரம்பரிய உணவைச் சுவைத்ததும் திரு மாரிமுத்து உட்பட ‘லக்கி ஜாயிண்ட்’ ஊழியர்களின் குடும்பத்தாரைச் சந்தித்ததும் புதிய அனுபவம்,” என்றார் அவர்.

‘லக்கி ஜாயிண்ட்’ நிறுவனத்தின் முன்னாள் முதலாளியான தன் தந்தை துவக்கி வைத்த பாரம்பரியமென இதனைக் குறிப்பிட்டார் திரு இயாவ். 

“வெளிநாட்டு ஊழியர்களின் அறியப்படாத வாழ்க்கையை நேரில் காண்பது எவ்வளவு அர்த்தமுள்ளது என்பதை உணர்ந்துகொண்டேன்,” என்றும் அவர் தெரிவித்தார். 

மூன்றாம் உலக நாடக மட்டுமே பலரால் கருதப்படும் இந்தியாவின் மக்களும் அவர்களின் கலாச்சாரமும் இந்நாட்டுக்கு வளமை சேர்ப்பதாகவும் கூறி அவர் பாராட்டினார்.

கல்யாண ஏற்பாடுகளை குறித்து திரு மாரிமுத்துவின் மனைவி நித்தியாவிடம் கேட்கையில், “கல்யாணம் வரை இவரின் முகத்தை கூட ஒழுங்காக பார்க்க முடியவில்லை. முதலாளிக்கென எல்லா ஏற்பாடுகளும் சரியாக அமைய தூக்கமே இல்லாமல் உழைத்தார்,” என்று கூறி அவர் நகைத்தார்.

கோயிலுக்கு செல்லும்போது எல்லாம் லக்கி ஜாயிண்ட் நிறுவனத்தின் பேரிலும், திரு யாவின் பேரிலும் அவர் வேண்டிக்கொள்வதுண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரு மாரிமுத்து பயின்ற எளிய கிராமத்துப் பள்ளியையும் அங்கு தற்போது பயிலும் மாணவர்களையும் நேரில் கண்டது திரு இயாவை மேலும் நெகிழச் செய்தது. சிங்கப்பூரின் நவீன பள்ளிகள் போலல்லாமல் கரும்பலகைகளைக் கொண்டு, தரையில் அமர்ந்து மாணவர்கள் பாடம் கற்றதை அவர் வியப்புடன் பார்த்தார். 

“12ஆம் வகுப்பு முடித்த பல மாணவர்களை அங்கு திரு யாவ் கண்டார். அவர்களில் பலர் குடும்ப வறுமை கருதி மேற்படிப்புக்கு செல்லாமல் வேலைக்கு செல்வதுண்டு என்று நாங்கள் விளக்கியபோது அவர் கண் கலங்கினார்,” என்றார் திரு ஜென்கின்.

திரு மாரிமுத்து, குடும்பத்தின் கடைக்குட்டி. மூன்று வயதில் தந்தையை இழந்துவிட்டார். 

அண்ணனுடனும் தற்போது 75 வயதாகும் தாயார் மீனாட்சியுடனும் சேர்ந்து கூலி வேலை செய்தே வருமானம் ஈட்ட வேண்டிய சூழலில், பத்தாம் வகுப்பில் இவர் கல்வியைக் கைவிட்டார். 

மூப்படைந்துவரும் திருவாட்டி மீனாட்சியால் தொடர்ந்து வெயில், மழையில் கூலி வேலை செய்ய இயலாமல் போனது. இதனால், இரு அக்காள்களைக் கரைசேர்க்க வேண்டிய சூழலில், கடன் வாங்கி, வீட்டுப் பத்திரத்தை அடைமானம் வைத்து, கையில் பத்து வெள்ளியுடன் நம்பிக்கையோடு 2006ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அவர் காலடி எடுத்து வைத்தார். 

வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு வெள்ளிக்கும் குறைவாகச் செலவிட்டு, நாளுக்கு 18 வெள்ளியாக இருந்த அவரது சம்பளத்தில் தனக்கென சொற்ப பணத்தை எடுத்துக்கொண்டு, பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை தமது குடும்பத்துக்கு அனுப்பி வந்தார் திரு மாரிமுத்து. 

முதன்முதலில் தங்கு விடுதியில் பன்னிரண்டு பேர் வரை தங்கியிருந்த அறையில் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயம். அவர் குடும்பத்தாரை எண்ணி வருந்தாதே நாளில்லை. 

தொலைபேசி இல்லாத காலத்தில் கடிதம் மூலம் மட்டுமே திரு மாரிமுத்துவால் குடும்பத்தாருடன் தொடர்புகொள்ள முடிந்தது. ஒவ்வொரு பதில் கடிதமும் வர இருபது நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். 

ஆனால், இத்தடைகளை எல்லாம் மீறி, வேலையில் அவரது திறமை மிளிர்ந்தது காரணமாக 2011ல் துணை மேற்பார்வையாளராகவும் 2016ல் மேற்பார்வையாளராகவும் உயர்வு பெற்றார் இவர். கூரை வீடாக இருந்த குடும்ப வீட்டை கட்டிடமாகவும் அவர் மாற்றினார். 

கடிதங்கள், தொலைபேசி வழியாக மட்டுமே தொடர்புகொண்ட தம் குடும்பத்தினரை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலையில் இவர் சந்தித்தார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலையில் இவர் சந்தித்த குடும்பத்தினர் தன்னை மனமாற தழுவி வரவேற்ற தருணத்தை மறக்க முடியாததென குறிப்பிட்டார் திரு மாரிமுத்து.

சென்ற பிப்ரவரியில் இவரதுதிருமணம் நடைபெற்றது. பலதுறைத் தொழிற்கல்லூரி ஆசிரியரான தன் மனைவி நித்தியாவுடன் சிங்கப்பூரில் குடியேறி மணவாழ்க்கையைத் தொடரவிருக்கிறார் திரு மாரிமுத்து.

vishnuv@sph.com.sg

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!