துப்புரவு, சுகாதாரம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்கும்விதமாக பொது இடங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளை நகர மன்றங்கள் முடுக்கிவிட்டுள்ளன.

மின்தூக்கிப் பொத்தான்கள் நாள்தோறும் மூன்று முறை கிருமிநாசினியைக் கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. அதுபோல, மக்கள் அதிகம் கூடும் விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சி முனைகள், பிடிமானக் கம்பிகள், மேசைகள் ஆகியவையும் கிருமிநாசினியைக் கொண்டு சுத்தப்படுத்தப்படுகின்றன.

துப்புரவு, சுகாதாரம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடும்படி கடந்த மாதம் 29ஆம் தேதி தேசிய சுகாதார வாரியம், அனைத்து நகர மன்றங்களுக்கும் ஆலோசனை வழங்கியிருந்தது.

இப்போதைய சூழ்நிலையில் சுகாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம் என்ற சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, அதே நேரத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்களுக்குச் செல்லக்கூடாது என்பது போன்ற அச்சங்களுக்கு ஆட்பட்டுவிட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

“ஓரிடத்தில் ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தால், அவ்விடத்தின் உரிமையாளர்கள் கிருமிநாசினி கொண்டு முறையாக அவ்விடத்தில் கிருமியை அழிக்கிறார்களா என்பதை தேசிய சுற்றுப்புற வாரியம் கண்காணித்து, அவ்விடம் பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதிசெய்யும்,” என்றார் அமைச்சர் மசகோஸ்.

உள்ளூரிலேயே நால்வருக்குக் கிருமித்தொற்று பரவியது நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டது. சிங்கப்பூரில் இதுவரை 24 பேருக்குக் கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தெம்பனிஸ் வெஸ்ட் வட்டாரத்தில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டையில் மின்தூக்கிப் பொத்தான்கள், பிடிமானக் கம்பிகள், விளையாட்டுத் திடல்களில் கிருமிநாசினிகளைக் கொண்டு ஊழியர்கள் சுத்தம் செய்ததை திரு மசகோஸ் நேற்று பார்வையிட்டார்.

அந்தக் குடியிருப்புப் பேட்டையின் துப்புரவு ஊழியர்கள் கையுறை அணிந்துகொண்டு பணியில் ஈடுபடுகின்றனர். அத்துடன், துப்புரவுப் பணி முடிந்ததும் அவர்கள் தங்களது கைகளைச் சுத்தம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“இப்போதைய சூழலில், துப்புரவு, சுகாதாரப் பணிகளை முடுக்கிவிடுவதே விவேகமான செயல். இது, பொதுமக்களின் நலனில் அரசாங்கம் முழுமையான அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் அமையும். மனிதவள அமைச்சின் அறிவிப்பு வரும் வரை இந்தப் பணிகள் தொடரும். சமூகத்தில் கிருமித்தொற்று பரவாமல் தடுக்கும் வழிகளில் இதுவும் ஒன்று,” என்றார் அமைச்சர்.

அதேவேளையில், கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களும் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“நமது சுகாதாரப் பழக்கத்தை நாமே மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நெருக்கடிநிலையின்போது மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் அவற்றைப் பின்பற்ற வேண்டும். சிங்கப்பூரில் வாழும் மக்கள் அனைவரும் நல்ல சுகாதாரப் பழக்கங்களைக் கொண்டுள்ளனர் என்பதை உறுதிசெய்யும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சீனாவைத் தவிர்த்து, கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாநிலம், வூஹான் நகரில் கொரோனா கிருமித்தொற்று முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலமும் உள்நாட்டிலேயும் கிருமித்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் இருந்து வருவோருக்கு நுழைவு அனுமதி மறுப்பு, சீனாவிற்குச் சென்று வந்தோருக்குக் கட்டாய 14 நாள் விடுப்பு போன்றவை அவற்றுள் சில.

சைனாடவுனில் ஆய்வு

இதனிடையே, சைனாடவுன் சந்தைப் பகுதியில் கடைகளையும் தெருக்களையும் சுத்தமாக வைத்து, ஊழியர்களைக் கிருமித்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோவும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கும் நேற்று அப்பகுதிக்குச் சென்று, விதிமுறைகள் அனைத்தும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்தனர்.

“மக்கள், குறிப்பாக முதல்நிலை ஊழியர்கள் கவலையில் இருப்பதை நாங்கள் அறிவோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பணியிடங்கள் தூய்மையாக இருப்பதையும் வர்த்தகங்கள் தொடர்ந்து இயங்குவதையும் உறுதிசெய்யும் வகையில், நேற்று முன்தினம் ஆலோசனைக் கடிதம் அனுப்பப்பட்டது. வாடிக்கையாளர் ஒருவர் உடல்நலமின்றி இருந்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ என்ன செய்யவேண்டும் என்பதை ஊழியர்கள் தெரிந்துகொண்டுள்ளதை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, அந்த நபரை உடனடியாக மருத்துவரைச் சென்று பார்க்கும்படி நினைவுறுத்தலாம்,” என்றார் அமைச்சர் டியோ.

இறப்பும் பாதிப்பும் அதிகரிப்பு

இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்றின் மையப்புள்ளியாகக் கருதப்படும் சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் அந்தப் பாதிப்பால் 65 பேர் மாண்டனர். புதிதாக 3,156 பேர் அக்கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, கிருமித்தொற்றால் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 492ஆகக் கூடியது; பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,000ஐத் தாண்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!