ஊழியர் விடுதிகளில் ஒரே நாளில் 3 அதிர்ச்சி சம்பவங்கள்; ஊழியரின் உடலை தமிழகத்துக்கு அனுப்ப ஏற்பாடு

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை, சமூக ஆர்வலர், நேர்மையான உழைப்பாளி, புகைப்பிடிப்பது மது அருந்துவது என்ற தீயப் பழக்கங்கள் இல்லாதவர் திரு கோவி. வீராச்சாமி.

இவ்வாறு அவரின் சக ஊழியர்கள் அவரை வர்ணித்தார்கள். 37 வயது இந்திய ஊழியரான வீராச்சாமி இயற்கைக்கு மாறான விதத்தில் பழைய சுவா சூ காங் ரோட்டில் அமைந்திருக்கும் ‘சுங்கை தெங்கா லாட்ஜ்’ தங்கும் விடுதியில் நேற்று (ஜூலை 24) இறந்து கிடந்தார்.

இறப்பு குறித்து நேற்று காலை 7.17 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் அசைவின்றிக் கிடந்த வீராச்சாமி உயிரிழந்துவிட்டதாக சம்பவ இடத்துக்கு விரைந்த துணை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ததாகவும் காவல் துறை தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்ட போலிசார் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

அந்த விடுதியின் எண் 512 கட்டடத்தின் இரண்டாவது மாடியில் வீராச்சாமியின் சடலத்தை ஒரு துப்புரவாளர் கண்டுபிடித்தார் என்றும் 10வது மாடியில் வீராச்சாமி வசித்து வந்தார் என்றும் அவருடன் வேலை பார்த்த ஊழியர்கள் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.

மூன்று வயதில் ஒரு பெண் குழந்தைக்கும் ஐந்து மாத ஆண் குழந்தைக்கும் தந்தையான வீராச்சாமி, இவ்வாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அவரின் குடும்பத்தைக் காண தமிழகம் சென்றிருந்தார். அதுவே அவர் அங்கு சென்ற கடைசி முறை.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சிவ விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராச்சாமி. அப்பகுதியின் ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்த அவர், பாரத முன்னேற்ற கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் பொறுப்பு கொண்டிருந்தார். பல சமூக நல முயற்சி களிலும் ஈடுபட்டிருந்தார் என்று அவரின் உறவினர் திரு ரெங்கராஜ், 35, கூறினார்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக சிங்கப்பூரின் கட்டுமானத் துறையில் பணியாற்றிய திரு வீராச்சாமி, ‘ஹுவாசன் கன்ஸ்டரக்‌‌ஷன்’ என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றினார். திரு மிரோ குமார், வீராச்சாமியுடன் ஏறத்தாழ ஈராண்டு பழக்கம் கொண்டவர்.

“வீராச்சாமி பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக வேலை செய்தார் என்பதால் எதையும் கவனத்துடன் செய்வார். வேலையில் கண்ணியமாக இருப்பார். நமக்கு தெரிந்தவரை அவருக்கு எந்த நோய் பிரச்சினையும் இல்லை. அவரின் இறப்பு எங்களுக்கு அதிர்ச்சி தருகிறது,” என்றார் திரு குமார், 33.

இந்நிலையில் திரு வீராச்சாமியின் உடலை நாளை இந்தியாவுக்கு அனுப்ப ‘இந்து காஸ்கெட்’ ஏற்பாடு செய்திருப்பதாக தமிழ் முரசிடம் திரு ரெங்கராஜ் தெரிவித்தார்.

திரு வீராச்சாமி உயிரிழந்த அதே நாளன்று அவ்விடுதியில் மற்றொரு திகைப்பூட்டும் சம்பவம் நடந்தது.

ஒரு கட்டடத்தின் மொட்டைமாடியின் விளிம்பில் 19 வயது இந்திய ஊழியர் ஒருவர் பதற்றத்துடன் நின்றிருந்தார். விடுதிவாசிகள் இருவர் அவரைப் பாதுகாப்பான இடத்துக்கு இழுத்துச் சென்று காப்பாற்றினர்.

எண் 506 பழைய கட்டடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றி போலிசாருக்கு அன்று காலை 10.27 மணிக்குத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து அதே நாளில் மூன்றாவது சம்பவமாக 29 சினோக்கோ சவுத் ரோட்டில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் 40 வயது சீன ஊழியர் கட்டட வேலி ஒன்றைப் பிடித்துக்கொண்டு தனக்கே ஆபத்து விளைவிக்கும் நிலையில் நின்றுகொண்டிருந்தார். அந்தச் சம்பவம் குறித்து போலிசாருக்கு காலை 10.45 மணிக்குத் தகவல் கிடைத்தது.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இவ்விரு ஊழியர்களும் மன நலம் (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அனைத்து சம்பவங்களையும் மனிதவள அமைச்சு அறிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இறந்த ஊழியரின் மரணம் குறித்து அவரது குடும்பம், முதலாளி, தூதரகம் ஆகியவற்றுக்கு மனிதவள அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

ஊழியரின் முதலாளியுடனும் வெளிநாட்டு ஊழியர் நிலையத்துடனும் இணைந்து செயல்பட்டு, வீராச்சாமியின் குடும்பத்தாருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாகவும் மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

மற்ற இரண்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் அமைச்சு கூறியது.

பிரச்சினைகளை எதிர்நோக்கினால் ஊழியர்கள் ஆபத்தான வழியை நாடக்கூடாது என்று மனிதவள அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

உதவி தேவைப்பட்டால் 65362692 என்ற எண்ணில் 24 மணிநேரத் தொலைபேசிச் சேவை வழி வெளிநாட்டு ஊழியர் நிலையத்தை ஊழியர்கள் நாடலாம்; அல்லது (www.mom.gov.sg/efeedback) என்ற இணையப்பக்கத்தில் கருத்து தெரிவித்து உதவி நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!