சிங்கப்பூர் - மலேசியா இடையே விரைவு ரயில் இணைப்புத் திட்டப் பணிகள் தொடங்கின

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ், மலேசியாவின் ஜோகூர் பாரு இடையிலான RTS எனப்படும் விரைவு ரயில் இணைப்புத் திட்டத்துக்கான தொடக்க விழா இன்று (ஜூலை 30) நடைபெற்றது. பலமுறை தள்ளிப்போடப்பட்ட இந்தத் திட்டப்பணி, இறுதி காலக்கெடுவான ஜூலை 31க்கு ஒரு நாள் முன்பாக இந்த தொடக்க விழா நடத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் ஆகியோர் அதிகாரபூர்வமாக காஸ்வேயில் பணியைத் தொடங்கிவைத்தனர். பிரதமர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

கொவிட்-19 சூழல் காரணமாக, காஸ்வேயில், இரு நாடுகளுக்கு இடையிலான அனைத்துலக எல்லைப்பகுதியில் நடைபெற்ற இந்த விழா, பிரதமர் லீயின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பானது.

வரும் 2024ஆம் ஆண்டில் நிறைவுறும் என்று முன்பு கூறப்பட்ட இந்தப் பணி, ஈராண்டுகள் தாமதமாக, அதாவது 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RTS இணைப்புத் திட்டம் ஆக்ககரமான, மதிப்பு மிக்க திட்டப்பணி என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, கொவிட்-19 போன்ற நெருக்கடி காலங்களிலும் மலேசியாவுடனான ஒத்துழைப்பு தொடர்வதை இது காட்டுகிறது என்றார்.

இரு நாடுகளுக்கு இடையிலான பயண நெரிசலைக் குறைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயணிகள் பயணத்தைத் தொடங்கும் இடத்தில் மட்டும் குடிநுழைவுச் சோதனைக்கு உட்படுத்தப்படும் வகையில் இரு நாடுகளின் சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் வளாகங்கள் ஆகியவை அமைக்கப்படும் என்று, இன்றைய தொடக்க நிகழ்வுக்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

இந்த இணைப்புத் திட்டம் இரு நாடுகளிலும் உள்ளூர் போக்குவரத்து வசதிகளுடன் நன்கு ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளும் இணைந்து இந்தத் திட்டப்பணியில் சில மாற்றங்களைச் செய்துள்ளன.

இது இலகு ரயில் போக்குவரத்து அமைப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரு வழிகளிலும் மணிக்கு 10,000 பேர் பயணம் செய்யும் திறன் கொண்டதாக இது இருக்கும். 

ஜோகூர் பாருவில் உள்ள வாடி ஹனாவில் புதிய பணிமனை ஒன்று அமைக்கப்படும்.

இந்தத் திட்டப்பணியின் உள்கட்டமைப்பு நிறுவனமாக சிங்கப்பூர் தரப்பில் நிலப் போக்குவரத்து ஆணையமும் மலேசியாவின் தரப்பில் Malaysia Rapid Transit System Sdn Bhd நிறுவனமும் இருக்கும்.

இந்தத் திட்டப்பணிக்கான செலவு, கட்டுமானம், பராமரிப்பு, புதுப்பிப்பு போன்றவற்றை இந்த உள்கட்டமைப்பு நிறுவனங்கள் மேற்கொள்ளும்.

இந்த இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம், கட்டணங்களை நிர்ணயிக்கும்.

இன்றைய தொடக்க நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் கலந்துகொண்டார். இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர்.