சிங்கப்பூரர்கள் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க புதிய $1.5பி. ஆதரவுத் திட்டம்

வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க புதிய $1.5 பில்லியன் ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தைத் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்கள் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் இந்த ஆதரவு கிடைக்கும்.

அதன் ஓர் அங்கமாக புதிய வாழ்க்கைச் செலவின சிறப்புத் தொகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $500 வரையிலான ரொக்க வழங்கீடு கிடைக்கும்.

வருமான வரி செலுத்துவதற்கு கணக்கிடப்படும் மதிப்பிடத்தக்க வருமானம் அடிப்படையில் வழங்கப்படும் அந்தத் தொகை டிசம்பர் மாதம் வழங்கப்படும்.

$22,000க்கும் கீழ் ஆண்டு வருமானம் ஈட்டியோருக்கு $500 என்றும் $34,000 வரையில் வருமானம் கொண்டவர்களுக்கு $400 என்றும் $100,000 வரையில் ஈட்டியோருக்கு $300 என்றும் ரொக்கத் தொகை பெறுவர். மேல்விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட இருக்கும் பொருள், சேவை வரி ரொக்க வழங்கீட்டுடன் இந்தத் தொகை வழங்கப்படும்.

இந்த ரொக்க வழங்கீட்டுடன் இதர திட்டங்களும் இந்தத் தொகுப்புத் திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன.

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களும் வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்களும் வாழ்க்கைச் செலவின உயர்வால் முற்றிலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று துணைப் பிரதமர் கூறினார்.

நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் ஏறத்தாழ பாதிக்கும் மேலான வாழ்க்கைச் செலவின உயர்வை இந்த ஆதரவுகளால் சமாளிக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்தத் தொகுப்புத் திட்டத்தின்மூலம் அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களும் கூடுதலாக $100 சிடிசி எனப்படும் சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகளைப் பெறுவர். இதற்கு முன்னர் இவ்வாண்டில் $200 பற்றுச்சீட்டுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் புதிய $100 பற்றுச்சீட்டுகளைக் குடும்பங்கள் பெறும்.

இதற்கிடையே, $30 பெறுமானமுள்ள 600,000 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவிருக்கின்றன. $1,600க்கும் கீழ் தனிமனித மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த ஆதரவு கிடைக்கும்.

கல்வி அமைச்சின் நிதி ஆதரவுத் திட்டங்களிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதிபெறும் வருமான வரம்பு அதிகரிக்கப்படுவதுடன் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் கூடுதலான கல்வி உதவி நிதி தொகை கிடைக்கும்.

அதிகரித்துவரும் பணவீக்கத்தாலும் வாழ்க்கைச் செலவினங்கள் குறித்த அக்கறைகளாலும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அரசாங்கம் பல ஆதரவுத் திட்டங்களை அறிவித்து வந்துள்ளது என்று நிதி அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

இந்தப் புதிய $1.5 பில்லியன் தொகுப்புத் திட்டத்திற்கான தொகையை நிதி இருப்பிலிருந்து எடுக்கத் தேவையில்லை என்றும் ஓமிக்ரான் அலை எதிர்பார்த்ததைவிட சற்று குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியதாலும் பொருளியலின் அதிக துறைகள் சீராகத் திறந்து பொருளியல் மீட்சியை முடுக்கியதாலும் இவ்வாண்டின் முற்பாதியில் கிடைத்த கூடுதல் வருமானத்தைக் கொண்டு ஆதரவு வழங்கப்படும் என்றும் துணைப் பிரதமர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!