நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு, 49 பேர் மரணம்

கிறைஸ்ட்சர்ச் –  நியூசிலாந்தின் துப்பாகிச்சூடு சம்பவத்தில் இதுவரை 49 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 41 பேர் ஒரே இடத்தில் கொல்லப்பட்டார்கள் என்றும் நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகள் உட்பட 48 பேர் காயங்களுக்காகச் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

நியூசிலாந்தின் தென் தீவிலுள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் பள்ளிவாசல்களில் உட்பட பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்ததைத் தொடர்ந்து, ஆயுதம் தாங்கிய போலிசார் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) கிரைஸ்ட்சர்ச்சின் மத்திய வட்டாரத்தில் திரண்டனர். இச்சம்பவத்தில் பலரும் சுடப்பட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். இதுவரை குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டதாகவும் 20 பேர் கடுமையான காயங்களுக்கு உட்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குழந்தைகள் உட்பட 48 பேர் காயங்களுக்காகச் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

முன்னதாக மத்திய கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் பள்ளிவாசலுக்கு அருகே ஒரு சடலம் காணப்பட்டதாகவும், லின்வூட் பள்ளிவாசலுக்கு அருகே இரண்டாவது துப்பாக்கிக்காரன் காணப்பட்டதாகவும் செய்தித்தாள் குறிப்பிட்டது. டீன்ஸ் அவென்யூவில் உள்ள கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசலிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாக ஸ்டஃப்.கோ இணையத்தளம் தெரிவித்தது.

கிறைஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு வெளியில் மூன்றாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கிறைஸ்ட்சர்ச் நகரின் மத்திய வட்டாரத்திலுள்ள மக்கள் உள்ளிடத்திலேயே இருக்கவேண்டும் என்று போலிசார் அறிவுறுத்தினர். 

“ஆபத்தான துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து கொண்டிருப்பதால்” நகரிலுள்ள எல்லா பள்ளிகளும் மூடப்படுவதாக போலிஸ் ஆணையாளர் மைக் புஷ் தெரிவித்திருந்தார்.

“”கிறைஸ்ட்சர்ச்சின் மத்திய வட்டாரத்திலுள்ளவர்கள் சாலைகளிலிருந்து விலகி இருக்குமாறும் சந்தேகத்திற்குரிய முறையில் யாரேனும் நடந்துகொள்வதைக் கண்டால் உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் போலிசார் வலியுறுத்துகின்றனர்” என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பள்ளிவாசல்களிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கிறைஸ்ட்சர்ச் மருத்துவமனையும் மூடப்பட்டிருப்பதாக கார்டியன் செய்தித்தாள் தெரிவித்தது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிலர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாக மருத்துவமனை பேச்சாளர் கூறினார். 

கிறைஸ்ட்சர்ச் நாடாளுமன்ற உறுப்பினரான ஏமி ஆடம்ஸ், “கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். இத்தகைய வெறுப்பை ஒருபோதும் நியாயப்டுத்தவே முடியாது” என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.

சுமார் 388,000 மக்கள் வாழும் கிரைஸ்ட்சர்ச் நகரே நியூசிலாந்தின் தென் தீவிலுள்ள ஆகப்பெரிய நகரம்.

நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்குச் சற்று அதிகமானோரே முஸ்லிம்கள் என 2013ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது.